Home /News /explainers /

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்கும் நாடுகள் எவை? இந்தியாவின் நிலை என்ன?

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்கும் நாடுகள் எவை? இந்தியாவின் நிலை என்ன?

கோப்பு படம்

கோப்பு படம்

2015 ஆம் ஆண்டு மட்டும் ஐரோப்பிய கடற்கரைகளுக்கு 9 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் வந்ததாக ஐ.நா கூறுகிறது.

இரு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வந்த ஆப்கான் உள்நாட்டுப் போரில் தற்போது தாலிபான்கள் முழு அதிகாரத்தை பெறும் நிலைக்கு உயர்ந்துள்ளனர். ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்ததிலிருந்து, தாலிபான்களின் கை ஓங்கியது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி அந்நாட்டின் தலைநகரான காபூலை கைப்பற்றிய தாலிபான்கள், ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றனர்.

தீவிர மதவாத எண்ணம் கொண்ட தாலிபான்கள், ஆட்சியில் பெண்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் அலை அலையாக அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். தங்களால் செல்ல முடியவில்லை என்றாலும், குழந்தைகளையாவது மற்றவர்களிடம் கொடுத்தனுப்பி விடுகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு மீட்பு பணிகளுக்காக சென்ற விமானங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. விமானத்துக்குள் இடம் கிடைக்காதவர்கள், சக்கரம், இறக்கை உள்ளிட்ட பகுதிகளில் கட்டிக் கொண்டு பறந்தனர். அதில் சிலர் தவறி விழுந்தும் உயிரிழந்தனர். இது தொடர்பான எண்ணற்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி காண்போரின் நெஞ்சை பதைபதைக்கச் செய்தது.

Also Read : ஃபேஸ்புக், பயோமெட்ரிக் தொழில்நுட்பங்கள் மூலம் எதிராக செயல்பட்டவர்களை வீடு வீடாகச் சென்று தேடும் தாலிபான்கள்

வேறு நாட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் ஆப்கானிஸ்தானியர்கள் ஒருபுறம் என்றால், அகதிகளாக செல்வோரின் நிலையும் அதற்கு இணையாகவே உள்ளது. ஒவ்வொரு நாடுகள் அகதிகளை ஏற்பதில் தனி கொள்கைகளை பின்பற்றி வருகின்றன. அந்த கொள்கைக்கு மாறாக, புதிய அகதிகளை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் உள்ளது என்பதால், இப்போது அகதிகளாக செல்லும் ஆப்கானியர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது. இருப்பினும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் ஆப்கானிஸ்தான் அகதிகளை, சில நெறிமுறைகளுக்குட்பட்டு ஏற்றுக்கொள்கின்றன.

உலகளவில் அகதிகளின் நிலை

அகதிகளுக்கான ஐ.நா சபையின் உயர் ஆணையத்தின் படி, இனம், மதம், மொழி, தேசியம், அரசியல், வன்முறை, ஒரு குறிப்பிட்ட சமூக குழுவில் உறுப்பினராக இருப்பதற்காக துன்புறுத்தப்பட்டால், அவர்கள் சொந்த நாடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்படும்போது அகதிகளாக செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என கூறுகிறது. குறிப்பாக, போர், இன, மத மற்றும் பழங்குடியினர் வன்முறைகளுக்காக அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, 2.8 மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளிநாடுகளில் உள்ளதாக யு.என்.ஹெச்.சி.ஆர் (UNHCR) தெரிவித்துள்ளது.

Also Read : தாலிபான்களின் நண்பர்களான ஹக்கானி தீவிரவாதிகள் - இந்த கொலைகார அமைப்பின் பின்னணி என்ன?

சிரியா, வெனிசுலா, ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான் மற்றும் மியான்மர் ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த 68 % மக்கள் அகதிகளா உள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி, 82.4 மில்லியன் மக்கள் மோதல், வன்முறை, மனித உரிமை மீறல் உள்ளிட்ட காரணங்களுக்காக இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள ஐ.நா, சுமார் 4 மில்லியனுக்கும் அதிகமான அகதிகளை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளது. அதிகமான அகதிகளை ஏற்றுக் கொண்ட நாடாகவும் இத்தாலி இருந்து வருகிறது. குறிப்பாக, சிரியாவைச் சேர்ந்தவர்களுக்கு இத்தாலி அடைக்கலம் கொடுத்துள்ளது.

ஆப்கான் அகதிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நாடுகள்

அமெரிக்கா; முன்னுரிமை 2 (P2) என்ற அடிப்படையில் USRAP திட்டத்தின்படி, குறிப்பிட்ட ஆப்கானிஸ்தானியர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமைதியான ஆப்கானிஸ்தான் என்பதே அமெரிக்காவின் நோக்கம் என கூறியுள்ள அந்நாடு, தாலிபான்கள் வன்முறையால் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு ஆப்கான் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு உதவியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் முன்னுரிமையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக 10 அயிரம் பேரை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து: தாலிபான்களின் அச்சுறுத்தலால் அந்நாட்டை விட்டு வெளியேறும் ஆப்கானிஸ்தானியர்களுக்கு இங்கிலாந்தில் நிரந்தரமாக வீடு கட்டிக் கொடுக்கும் என ஆகஸ்ட் 18 ஆம் தேதி இங்கிலாந்து அறிவித்தது. பெண்கள் மற்றும் மத சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கும் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் 5000 பேருக்கு அடைக்கலம் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ள இங்கிலாந்து, அதிகப்பட்சமாக 20 ஆயிரம் பேர் வரை ஏற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

கனடா : கனடா அரசும் 20,000 ஆப்கானிஸ்தானியர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

ஐரோப்பா : ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை, ஆப்கானிஸ்தானியர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்வதில் மாறுபட்ட நிலைகள் காணப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டு சிரியாவைச் சேர்ந்த சிறுவனின் புகைப்படம், துருக்கி கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது, அகதிகளின் நிலையை வெட்டவெளிச்சமாக்கியதன் அடையாளமாக இருக்கிறது. அத்தகைய நிலையை எதிர்கொள்ளவதற்கு அந்நாடுகள் தயக்கம் காட்டுகின்றன.

2015 ஆம் ஆண்டு மட்டும் ஐரோப்பிய கடற்கரைகளுக்கு 9 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் வந்ததாக ஐ.நா கூறுகிறது. அந்நாடுகளுக்கு செல்லும் வழியில் ஏறத்தாழ 3,500 பேர் வரை இறந்ததாகவும் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்பவர்களில் 75 விழுக்காட்டினர் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கைச் சேர்ந்தவர்கள் என ஐ.நா புள்ளவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரியா, பிரான்சு, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் அகதிகள் தஞ்சமடையும் முதன்மை நாடுகளாக இருக்கின்றன. இதுவரை 7 ஆயிரம் ஆப்கானிஸ்தான் அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் வாழ்வதற்காக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஐ.நா, கிரீஸில் 2,200 பேரும், பிரான்சில் 1,800 பேரும், ஆயிரம் பேர் ஜெர்மனி மற்றும் இத்தாலியில் 700 பேரும் அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

Also Read : தாலிபான்கள் கைக்குள் சிக்காத பஞ்ஷிர் பள்ளத்தாக்கு: போருக்கு தயாராகும் வீரர்கள்

இந்தியா " இந்தியாவைப் பொறுத்தவரை அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கான பிரத்யேக நிலைபாடு ஏதும் இல்லை. சூழ்நிலை மற்றும் பிரச்சனைகளின் அடிப்படையில் அகதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் 6 மாதங்கள் அடிப்படையில் இ-விசா வழங்கி வருகிறது. விசாக்காலம் முடிந்தபிறகு அவர்களின் நிலை என்ன? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கான 1951 ஆம் ஆண்டு மாநாடு அல்லது 1967 அகதிகள் நிலை தொடர்பான நெறிமுறைகளில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2011 ஆம் ஆண்டு, தஞ்சமடையும் வெளிநாட்டினரை கையாள்வது குறித்து நிலையான நெறிமுறைகள் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published:

Tags: Afghanistan

அடுத்த செய்தி