இந்தியாவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்?

கொரோனா தடுப்பூசி

2 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனையில் இருக்கிறது.

  • Share this:
புனேவில் உள்ள ஐசிஎம்ஆர்-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி (NIV) நிறுவனம் இந்தியாவில் SARS-CoV-2 பற்றிய அறிவியல் ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி ஐசிஎம்ஆர்-என்ஐவியின் இயக்குனர் திருமதி பிரியா ஆபிரகாம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் OTT சேனலான இந்தியா சயின்ஸுக்கு அளித்த பேட்டியில் "2021 எங்களுக்கு கடினமான ஆண்டு தான் ஆனால் பலனளிக்கும் ஆண்டாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிறுவனத்தில் தடுப்பூசி மேம்பாட்டு செயல்முறை கண்ணோட்டத்தை பற்றி விளக்கம் கொடுத்த அவர், "நாங்கள் விரைவாக தனிமைப்படுத்தி பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (பிபிஐஎல்) க்கு ஏப்ரல் (2020) இறுதிக்குள் ஒரு வைரஸ் ஸ்ட்ரெயினை கொடுத்தோம். அதன் பிறகு அவர்கள் ஒரு முழு வைரஸ்-செயலற்ற தடுப்பூசியை உருவாக்கினர். மே மாதம் அதன் மறுபரிசீலனைக்காக நிறுவனம் மீண்டும் எங்களுக்கு கொடுத்தது. அதன் முழுமையான செயலிழப்புக்காக நாங்கள் அதை சரிபார்த்தோம்.

அதன் முழுமையான குணாதிசயங்களை பரிசோதனை செய்தோம். இதையடுத்து அதன் செயலதிறன்களுக்காக வெள்ளை எலிகள் குரங்குகள் மீது முன் மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கினோம். அடுத்த கட்டத்தில், நோயறிதல் அம்சம் மற்றும் ஆய்வக ஆதரவு போன்ற பகுதிகளில் I, II மற்றும் III கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு, இந்தியா முழுவதும் தடுப்பூசி விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி போடப்பட்ட ஆரம்பகாலத்தில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு போட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. பிறகு, மேம்மபடுத்தப்பட்ட ஆய்வுக்கு பிறகு கர்ப்பிணிகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசி எப்போது வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இதுகுறித்த தகவலை திருமதி பிரியா ஆபிரகாம் வெளியிட்டுள்ளார். மேலும் பல சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவை பின்வருமாறு,

குழந்தைகளுக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்?

தற்போது, ​​2 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனையில் இருக்கிறது. இதன் முடிவுகள் மிக விரைவில் கிடைக்கப் போகிறது. பின்னர் அந்த முடிவுகள் கட்டுப்பாட்டாளர்களுக்கு வழங்கப்படும். எனவே, செப்டம்பர் அல்லது அதற்குப் பிறகு, குழந்தைகளுக்கான கோவிட் -19 தடுப்பூசிகள் இந்தியாவில் கிடைக்கும். இது தவிர, சைடஸ் காடிலாவின் தடுப்பூசி சோதனையும் நடக்கிறது. இது குழந்தைகளுக்கும் செலுத்தப்படும் மற்றும் அதன் வினோத்தியோகம் விரைவில் கிடைக்கும்.



இந்தியாவில் வேறு என்ன தடுப்பூசிகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது?

சைடஸ் காடிலாவின் தடுப்பூசி முதல் டிஎன்ஏ தடுப்பூசி ஆகும். இது விரைவில் பயன்பாட்டிற்கு கிடைக்கும். இதுதவிர, ஜென்னோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட்டின் எம்-ஆர்என்ஏ தடுப்பூசி (m-RNA vaccine), உயிரியல்-இ தடுப்பூசி (Biological-E vaccine), சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் நோவோவாக்ஸ் (Serum Institute of India’s Novovax) மற்றும் மற்றொரு சுவாரஸ்யமான ஒன்று-பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் உருவாக்கிய உள்-நாசி தடுப்பூசியும் (intra-nasal vaccine) பயன்பற்றிக்கு வரும். இந்த தடுப்பூசிக்கு டோஸ் தேவையில்லை மற்றும் இதனை ஒருவரின் நாசி வழியாக வழங்க முடியும்.

தற்போது கிடைக்கும் தடுப்பூசிகளில் ஏதேனும் டெல்டா-பிளஸ் வேரியண்ட்டை எதிர்க்குமா?

முதலில், டெல்டா-பிளஸ் மாறுபாடு டெல்டா வகையை விட தீவிரமாக பரவுவதற்கான வாய்ப்பு குறைவு. தற்போது டெல்டா மாறுபாடு 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது. இது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவக்கூடியது. NIV-யில் நாங்கள் இந்த மாறுபாடு குறித்து ஆய்வுகள் செய்துள்ளோம். அதேபோல தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் உடலில் உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடிகளை நாங்கள் ஆய்வு செய்து இந்த மாறுபாட்டிற்கு எதிராகச் சோதித்தோம். இந்த மாறுபாட்டிற்கு எதிரான ஆன்டிபாடிகளின் செயல்திறன் இரண்டு முதல் மூன்று மடங்காக குறைந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் இன்னும் டெல்டா மாறுபாடுகளுக்கு எதிராக ஒருவரை பாதுகாக்கின்றன. இருப்பினும் வைரஸ் கொஞ்சம் குறைவான செயல்திறனை ஒருவரில் காட்டலாம், ஆனால் நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறக்கக் கூடிய தீவிரமான நிலையை தடுக்க தடுப்பூசிகள் மிகவும் முக்கியம். எனவே, வைரஸ் மாறுபாடு எதுவாக இருந்தாலும், தடுப்பூசி இப்போது வரை டெல்டா மாறுபாடு உட்பட அனைத்திற்கும் எதிராக ஒருவரை பாதுகாக்கிறது. எனவே, தடுப்பூசி போடுவதில் தயக்கம் தேவையில்லை.



வரவிருக்கும் காலங்களில் நமக்கு பூஸ்டர் டோஸ் தேவையா? இந்த விஷயத்தில் ஏதேனும் ஆய்வு நடத்தப்படுகிறதா?

பூஸ்டர் டோஸ் பற்றிய ஆய்வுகள் வெளிநாடுகளில் நடந்து கொண்டிருக்கின்றன மற்றும் குறைந்தது ஏழு வெவ்வேறு தடுப்பூசிகள் பூஸ்டர் டோஸுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இப்போது, ​​WHO அதை நிறுத்தியுள்ளது. ஏனெனில் அதிக நாடுகளில் இன்னும் முழுமையான தடுப்பூசிகள் போடப்படவில்லை. இதற்கு காரணம் அதிக வருமானம் மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு இடையே ஆபத்தான தடுப்பூசி இடைவெளி உள்ளது. ஆனால், எதிர்காலத்தில், பூஸ்டர்களுக்கான பரிந்துரைகள் கண்டிப்பாக வரும்.

இரு தடுப்பூசிகளின் கலவை மற்றும் பொருத்தத்திற்கான ஆய்வுகள் உள்ளதா? அது நமக்கு நன்மை தருமா?

கவனக்குறைவாக இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் இரண்டு அளவுகளில் கொடுக்கப்பட்ட சூழ்நிலை இருந்தது. நாங்கள் அந்த மாதிரிகளை NIVயில் பரிசோதித்தோம் மற்றும் இரண்டு அளவுகளில் வெவ்வேறு தடுப்பூசிகளைப் பெற்ற நோயாளிகள் பாதுகாப்பாக இருப்பதைக் கண்டறிந்தோம். அவர்களில் பாதகமான விளைவு எதுவும் குறிப்பிடப்படவில்லை மற்றும் நோயெதிர்ப்புத் திறன் கொஞ்சம் சிறப்பாக இருந்தது. எனவே, தடுப்பூசிகள் கலவை பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. இந்த நிகழ்வை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் மேலும் சில நாட்களில் அதிக விவரங்களை வெளியிட இருக்கிறோம்.

சுய-சோதனை கருவிகளும் கொரோனா சோதனையை மேலும் வேகப்படுத்துமா?

சுய சோதனை கருவிகள் ஆன்டிஜென் சோதனை கருவிகளாகும். எனவே, அவற்றின் உணர்திறன் ஆர்டி-பிசிஆர் முறையை விட குறைவாக இருக்கும். அறிகுறி நோயாளிகளுக்கு உணர்திறன் அதிகமாக இருக்கும். ஆனால், அறிகுறியற்ற நோயாளிகளுக்கு, உணர்திறன் குறைவாக இருக்கும்.

பறவை காய்ச்சல் அல்லது ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் SARS-CoV-2 நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடுமா?

பறவை காய்ச்சல் மற்றும் ஜிகா வைரஸ் ஆகியவை கொரோனா வைரஸுடன் தொடர்பில்லாதவை. ஆனால் HINI பறவை காய்ச்சல் அல்லது பன்றிக் காய்ச்சல் வைரஸ் மற்றும் SARS-CoV-2 ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு பொதுவான அம்சம் என்னவென்றால், முகக்கவசங்கள், சமூக இடைவெளி, கை சுகாதாரம் ஆகியவற்றை பராமரிப்பதன் அவற்றின் பரவல் தடுக்கப்படுகிறது. ஏனெனில் இந்த வைரஸ்கள் அனைத்தும் சுவாச பாதை வழியாக பரவுகின்றன. எனவே, கோவிட் பொருத்தமான நடத்தை விதிகளை பின்பற்றுவதன் மூலம் இந்த வைரஸ்கள் பரவுவதை நாம் கட்டுப்படுத்தலாம். இருப்பினும், ஜிகா வைரஸ் கொசு கடிப்பதால் பரவுகிறது.



 

பருவமழை காலத்தில் கோவிட் -19 தொற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்குமா?

ஆமாம், கொசு கடித்தால் பரவும் டெங்கு, சிக்கன்குனியா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற வைரஸ் தொற்றுகள் பருவமழை காலத்தில் அதிகரிக்கும். பருவமழை காலத்தில் கொசுக்கள் பெருகும் என்பதால் சுற்றுப்புறத்தில் தண்ணீரை தேங்கியிருக்க கூடாது. கொசு கடித்தால் பரவும் இந்த நோய்த்தொற்றுகளுக்கு மேல் கொரோனா தொற்று இருப்பது மோசமாக இருக்கும்.

எதிர்காலத்தில் வேறு எந்த அலையும் வராமல் தடுக்க முடியுமா?

புதிய வகைகள் வந்து கொண்டே இருக்கும். தற்போது நம்மிடம் இரண்டு ஆயுதங்கள் உள்ளன. அவை நமக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக இருக்கும். அதில் ஒன்று முகமூடியை ஒழுங்காக அணிந்துக் கொள்வது, மற்றொன்று தடுப்பூசி போடுவதற்கு அனைவரையும் தீவிரமாக ஊக்குவிப்பது. எனவே, இனி எத்தனை அலை வந்தாலும் அது பெரியதாக இருக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
 
Published by:Tamilmalar Natarajan
First published: