முகப்பு /செய்தி /செய்தி விளக்கம் / Manish Sisodia | துணை முதல்வர் கைது… டெல்லியை உலுக்கிய மதுபானக் கொள்கை சர்ச்சை… தலைநகரில் நடப்பது என்ன?

Manish Sisodia | துணை முதல்வர் கைது… டெல்லியை உலுக்கிய மதுபானக் கொள்கை சர்ச்சை… தலைநகரில் நடப்பது என்ன?

மணிஷ் சிசோடியா

மணிஷ் சிசோடியா

Manish Sisodia | கடந்தாண்டு ஜூலை மாதல் டெல்லியின் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, டெல்லி கலால் கொள்கை 2021-22ஆம் ஆண்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

சமீபத்தில் தலைநகர் டெல்லி அரசியல் களத்தை மதுபானக் கொள்கை முறைகேடு சூடுபிடிக்க வைத்துள்ளது. ஆம் ஆத்மியின் முக்கிய முகங்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா. இவர் டெல்லியின் கல்வி அமைச்சராகவும் இருந்துள்ளார். அரசியல்வாதி மட்டுமல்ல இவர் ஒரு பத்திரிகையாளரும் கூட. 2015ஆம் ஆண்டில் இருந்து 2023 பிப்ரவரி மாதம் வரை டெல்லியின் துணை முதல்வராக இருந்துள்ளார்.

மணிஷ் சிசோடியா ராஜினாமாவுக்கு காரணம், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள மதுபான ஊழல் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் சுமார் 8 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மத்திய புலனாய்வு பிரிவான சிபிஐ-யால் சிசோடியா கைது செய்யப்பட்டார். இவருக்கு முன்பே ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயின் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்தாண்டு மே மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சத்யேந்தர் ஜெயின், டெல்லியின் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர். இருப்பினும், கைதுக்குப் பின் எந்த இலாகாவும் இல்லாமல் அமைச்சராகத் தொடர்ந்தார். இதற்கிடையில், சிசோடியாவிடம் சத்யேந்தர் ஜெயினின் துறையான சுகாதாரத் துறை கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. இப்படியான சூழலில்தான் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த முறைகேட்டில் மணிஷ் சிசோடியாவின் பெயர் அடிப்படத் தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை சிபிஐ-யால் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். மேலும், சத்யேந்தர் ஜெயினும் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அனுப்பினார். ஆக, இரண்டு அமைச்சர்களும் தங்களினுடைய பதவியை ராஜினாமா செய்ததால், டெல்லியின் புது அமைச்சர்களாக அடிஷி மற்றும் பரத்வாஜ் ஆகியோரது பெயர்களை டெல்லி துணைநிலை ஆளுநர் பரிந்துரைத்து குடியரசுத் தலைவரிடம் அனுப்பியுள்ளார்.

டெல்லி மதுபானக் கொள்கை என்றால் என்ன?

டெல்லியின் மதுபானக் கொள்கை கடந்த 2020ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது. அதன் பிறகு, 2021ஆம் ஆண்டின் இறுதியில் இந்த கொள்கையானது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதன் நோக்கம் என்னவாக சொல்லப்பட்டது என்றால், வருமானத்தை அதிகரிக்கவும், மதுபான விற்பனை நிலையங்களின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்கும், பிளாக் மார்க்கெட் மற்றும் மாஃபியா ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் டெல்லியை 32 மண்டலங்களாகப் பிரித்து அதில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் 27 மதுபான விற்பனை கடைகள் வைக்கப்பட்டது. தனியார் பார்கள் மட்டும் நகரத்திற்கு வெளியே இயக்கப்பட்டது.

முன்னதாக டெல்லி அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான மதுபானக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிந்தது. இந்த விவகாரம் எங்கிருந்து தொடங்கியது எனப் பார்த்தால், கடந்தாண்டு ஜூலை மாதம் டெல்லியின் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, டெல்லி கலால் கொள்கை 2021-22ஆம் ஆண்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார். மறுபுறம், கலால் துறைக்கு தலைமை வகித்தது டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன?

டெல்லியின் புதிய மதுபானக் கொள்கை மூலமாக சில தென் மாநிலத்தைச் சேர்ந்த மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் பயன்பெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக, ஆம் ஆத்மி 100 கோடி ரூபாய் பணம் வாங்கி இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆம் ஆத்மியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர், தொழிலதிபர் சமீர் மகேந்திரா என்பவரிடம் இருந்து 100 கோடி ரூபாய் வாங்கியதாகவும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த விவகாரத்ததில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. ஸ்ரீனிவாசலு ரெட்டி மற்றும் அவரது மகன் மகுந்தா ராகவா ரெட்டி உள்ளிட்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த விவகாரம் டெல்லியை கடந்தும் பயணிக்கிறது.

வழக்கின் விவரம் இவ்வாறு இருக்க, ஆம் ஆத்மி அரசுக்கு அரசியல் ரீதியாக இந்த விவகாரம் மிகப்பெரும் பின்னடைவை கொடுத்துள்ளதால், டெல்லி அரசியலைக் கடந்து பஞ்சாப்பிலும் காங்கிரஸ், பா.ஜ.கவை ஓரம் கட்டிவிட்டு ஆம் ஆத்மி வரலாற்று சிறப்புமிக்க மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்த நிலையில், கட்சியின் இரண்டாவது இடத்தில் இருக்கக் கூடிய அமைச்சர் கைது செய்யப்பட்டது அக்கட்சிக்கு பலத்த அடியாக ஆம் ஆத்மிக்கு விழுந்துள்ளது. இருந்தாலும், ஆம் ஆத்மி கட்சி மணிஷ் சிசோடியாவிற்கு பக்கபலமாகதான் உள்ளது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். மணிஷ் சிசோடியாவும் சத்யேந்தர் ஜெயினும் பா.ஜ.கவில் சேர்ந்தால் இன்றைக்கே அவங்களை விடுதலை செய்திருப்பார்கள்தானே எனவும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியிருந்தார்.

எதிர்க்கட்சிகளின் கண்டனம்:

மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், பாரதிய ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. தி.மு.கவும் சிசோடியா கைதுக்கு மிகக் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராவிதமாக சிபிஐ-ஆல் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்தது. மேலும், கலால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஆம் ஆத்மி மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் விதமாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் நேற்று முன்தினம் 10 இடங்களில் பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதற்கு பின், இந்த வழக்கில் என்னனென்ன திருப்பங்கள் நடக்கப்போகிறது என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

First published:

Tags: Arvind Kejriwal, Delhi