Explainer: பணியிடத்தில் பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு என்ன தண்டனை?

மாதிரிப்படம்

பணியிடத்தில் நிகழும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக இந்தியாவில் சிறப்பு சட்டம் உள்ளதா?

  • Share this:
குழந்தைகள், சிறுமிகள், பெண்கள்,  மூதாட்டிகள் என வயது வித்தியாசம் இன்றி பெண்ணாக பிறந்த அனைவரையும் பாதிக்கும் விஷயமாக தற்காலத்தில் இருப்பது பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமைகள். பள்ளி, கல்லூரிகள், அலுவலகம் என அனைத்து இடங்களிலும் பெண்களிடம் அத்துமீறும் சம்பவங்கள் அரேங்கேறுவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். இந்நிலையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகள் கணக்கில் அடங்காதவை.

இது நம் நாட்டில் மட்டுமே நடக்கும் பிரச்சனைகள் அல்ல. வளர்ந்த நாடுகளில் கூட பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் அரேங்கேறி வருகின்றன. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணியிடத்தில் பாலியல் ரீதியாக நிகழும் அத்துமீறல்களில் இருந்து பாதுகாக்க நம் நாட்டில் என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன?

வேலை பார்க்கும் இடங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் என்பது, விரும்பத்தகாத பாலியல் நோக்கத்துடன் கூடிய நடவடிக்கையாக வரையறுக்கப்படுகிறது. பாலியல் வார்த்தைகளை கூறுவது, ஆபாசப் படங்கள் அல்லது கதைகளை காட்டுவது, ஆசைக்கு இணங்குமாறு கூறப்படும் வார்த்தைகள் அல்லது வேண்டுகோள், புண்படுத்தப்படுவதாகவோ, அவமானப்படுத்துவதாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ ஒரு நபரை உணர வைக்கும் பாலியல் துன்புறுத்தல், சைகை மூலம் பாலியல் கோரிக்கைகளை முன் வைப்பது, பாலியல் சீண்டல் அல்லது தொடர்புகளுக்கு மறுப்பு தெரிவித்தால் வேலை, பதவி உயர்வு, பணி நிலை போன்றவை பாதிக்கப்பட கூடும் என்று ஒரு பெண்ணை நிர்பந்திப்பது, பாலியல் நடவடிக்கைகளால் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பது உள்ளிட்டவை..

பணியிடத்தில் நிகழும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக இந்தியாவில் சிறப்பு சட்டம் உள்ளதா?

ஆம். பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம், 2013 (Sexual Harassment of Women (Prevention, Prohibition and Redressal) Act, 2013)

விசாகா வழிகாட்டுதல்கள் என்ன?

பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் இந்தியாவில் பயன்படுத்துவதற்கான நடைமுறை வழிகாட்டுதல்களின் தொகுப்பே விசாகா வழிகாட்டுதல்கள் . இது உச்சநீதிமன்றத்தால் 1997-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. நைனா கபூர் மற்றும் அவரது அமைப்பு தலைமையிலான பல்வேறு பெண்கள் குழுக்கள், சாக்ஷி ராஜஸ்தான் மாநிலம் மற்றும் இந்திய மத்திய அரசுக்கு எதிராக பொது நல வழக்குகளை (PIL) தாக்கல் செய்தார். ராஜஸ்தானில் உள்ள சமூக சேவகர் பன்வாரி தேவி குழந்தை திருமணத்தை நிறுத்தியதற்காக கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜே. எஸ். வர்மா (அப்போதைய சி.ஜே.ஐ), சுஜாதா மனோகர் மற்றும் பி.என். கிர்பால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழங்கிய ஆகஸ்ட் 1997 தீர்ப்பு, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு அடிப்படை வரையறைகளை வழங்கியதுடன், அதைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியது.

இந்த சட்டம் யாருக்கு பொருந்தும்?

இந்த சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து முதலாளிகளுக்கும், பணியிடங்களுக்கும் இது பொருந்தும். தொடுதல் மற்றும் முத்தமிடுதல் அல்லது விரும்பத்தகாத பிற தேவையற்ற உடல் தொடர்பு, இயற்கையில் பாலியல் ரீதியான ஒன்றைச் சொல்வது, ஒரு நபரின் பாலியல் நோக்குநிலை அல்லது பாலியல் வாழ்க்கை குறித்த குறிப்புகளை வெளிப்படுத்துவது, மேலே உள்ள எந்தவொரு விஷயங்களை கொண்டு பணியிடத்தில் ஒரு பெண்ணுக்கு பதற்றமூட்டும் வேலை சூழலை உருவாக்குதலும் இந்த சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

உடல் ரீதியிலான கேலி, கிண்டல் பாலியல் துன்புறுத்தலா?

ஆம், பெண்களின் அனுமதியின்றி அவர்களிடம் உடல் ரீதியாக தொட்டு விளையாடுவது, சங்கடமான பாலியல் கருத்துக்களை உள்ளடக்கி செயல்படுவது பாலியல் துன்புறுத்தலாக கருதப்படுகிறது.

புகார்தாரரின் ரகசியத்தன்மை காக்கப்படுமா?

ஆம், பாதிக்கப்படும் பெண், பதிலளித்தவர் மற்றும் சாட்சிகளின் அடையாளம் மற்றும் முகவரி உள்ளிட்ட வழக்கு சம்பந்தப்பட்ட தகவல்களை வெளியிடுவதை இந்த சட்டம் தடை செய்கிறது.

இந்த சட்டத்தின் கீழ் பெறப்படும் உரிமைகள் யாவை?

* பணியிடத்தில் பாதுகாப்பான பணிச்சூழல்

* புகார் அளிக்க முடிவெடுத்தால் அவருக்கு தகுந்த உதவி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கோருவது

* புகாரை கையாள, உரிய விசாரணையை நடத்த லோக்கல் கமிட்டிக்கு தேவையான வசதிகளை செய்து தருவது உள்ளிட்ட பல...

சட்டத்தின் கீழ் தண்டனை என்ன?

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தர கூடிய எந்தவொரு செயலையும் யார் செய்தாலும், ஐபிசி-யின் 509-வது பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

ஒரு ஆணால் பெண் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தாக்கல் செய்ய முடியுமா?

இந்த சட்டம் ஒரு பெண்ணின் பாலியல் துன்புறுத்தல் பிரச்சனைகளை மட்டுமே கையாள்கிறது.

 
Published by:Tamilmalar Natarajan
First published: