Home /News /explainers /

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் சால்மோனெல்லா பாக்டீரியா தொற்று - எதனால் இது ஏற்படுகிறது?

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் சால்மோனெல்லா பாக்டீரியா தொற்று - எதனால் இது ஏற்படுகிறது?

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் சால்மோனெல்லா பாக்டீரியா தொற்று

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் சால்மோனெல்லா பாக்டீரியா தொற்று

Salmonella Typhimurium | சாக்லேட்டுடன் தொடர்புடையதாக பாக்டீரியா தொற்று பரவி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    பெல்ஜியம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சாக்லேட்டுகள் 113 நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த சாக்லேட்டுடன் தொடர்புடையதாக பாக்டீரியா தொற்று பரவி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பாக்டீரியாவின் பெயர் சால்மோனெல்லா டைபிமுரியம் ஆகும்.

    பொதுவாக சால்மோனெல்லா பாக்டீரியாவில் இரண்டு வகைகள் உண்டு. முதலாவதாக சால்மோனெல்லா டைபிமுரியம் மற்றும் இரண்டாவதாக சால்மோனெல்லா டைஃபி என்பதாகும். இவை இரண்டு வெவ்வேறு வகையான நோய் தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. அவற்றின் நோய் தீவிரத்தன்மை என்பதும் வேறுபட்டதாக இருக்கிறது. குறிப்பாக, இந்த இரண்டு வகை பாக்டீரியாக்களின் மரபணு வேறுபாடு காரணமாக அது நிகழுகிறது.

    தற்போதைய பாக்டீரியா தொற்று என்பது சால்மோனெல்லா டைபிமுரியம் வகையைச் சேர்ந்ததாக உள்ளது.

    விலங்குகளின் இறைச்சி மூலமாக பரவும்

    விலங்குகளின் இறைச்சி மற்றும் விலங்கு சார்ந்த பொருட்கள் மூலமாக சால்மோனெல்லா பாக்டீரியா தொற்று பரவுகிறது. இறைச்சியை பச்சையாக உண்பது அல்லது முழுமையாக வேக வைக்காமல் அரை வேக்காட்டுடன் உண்பது போன்ற காரணங்களால் இந்த தொற்று ஏற்படுகிறது.

    மருத்துவர்கள் விளக்கம்

    சால்மோனெல்லா பாக்டீரியா குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “சால்மோனெல்லா பாதிப்பு கொண்ட உணவுகளை பச்சையாக உட்கொள்வது, குறிப்பாக முட்டை மற்றும் இறைச்சி போன்றவற்றை முறைப்படி வேக வைக்காமல் உட்கொள்வதன் மூலமாக சால்மோனெல்லா பாக்டீரியா தொற்று பரவுகிறது.

    Also Read : கனமழை வெள்ளத்தால் தத்தளிக்கும் அசாம் - 2 லட்சம் பேர் பாதிப்பு, 7 பேர் பலி

    இது குடல் அழற்சிக்கு வழிவகை செய்கிறது. இதனால் வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன. இந்த காய்ச்சல் பாதிப்பு ஒருவருக்கு 7 நாட்கள் வரையிலும் நீடிக்கும். பெரும்பாலும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவை இருக்காது.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கும், இணை நோய் இருப்பவர்களுக்கும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அளவுக்கு பாதிப்பு ஏற்படலாம். சால்மோனெல்லா டைபிமுரியம் தொற்றுக்கு எதிராக பிரத்யேக சிகிச்சை முறை எதுவும் இல்லை என்றாலும், அதற்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்’’ என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    குழந்தைகளை அதிகம் பாதிக்கும்

    சால்மோனெல்லா பாக்டீரியா என்பது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கக் கூடிய தொற்று ஆகும். அதேபோல 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையும் பாதிக்கும்.

    முன் தடுப்பு நடவடிக்கைகள்

    தனி சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாக சால்மோனெல்லா பாக்டீரியா தொற்றில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ளலாம். குறிப்பாக, அவ்வபோது கைகளை சோப்பு வைத்து சுத்தமாக கழுவ வேண்டும். வளர்ப்புப் பிராணிகளை கையாண்டால், அதை தொடர்ந்து நம்மை நாம் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சாப்பிடும் உணவு நன்றாக வேக வைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்வது அவசியம். முட்டை, கோழி இறைச்சி போன்றவற்றை முறையாக சுத்தம் செய்த பிறகே சமைக்க வேண்டும்.
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி