ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

பெட்ரோல், டீசல் மட்டுமா? கச்சா எண்ணெய்யில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் என்னென்ன?

பெட்ரோல், டீசல் மட்டுமா? கச்சா எண்ணெய்யில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் என்னென்ன?

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்யில் இருந்து ஆரம்பத்தில் 10 பொருட்கள் கிடைத்தாலும், ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள், செயற்கை ரப்பர், நைலான், வாசனை திரவியங்கள், சோப்பு என எல்லாவற்றுக்கும் அடிப்படை மூலப்பொருள் கச்சா எண்ணெய்தான்

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால், பெட்ரோல், டீசல் விலை ஏறுகிறது என கேள்விப் பட்டிருக்கிறோம். இந்த கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது. இதில் இருந்து என்னென்ன பொருட்கள் கிடைக்கின்றன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

கடலில் வாழும் உயிரினங்கள் இறந்த பிறகு, அவற்றின் மீது மணல் பரவி, படிவப் பாறை அடுக்குகள் உருவாகும். பூமியின் அடிப்பகுதியில் உருவாகும் வெப்பம் மற்றும் மேலே இருக்கும் பாறை அடுக்குகளின் அழுத்தத்தால், வேதிவினையாற்றி கச்சா எண்ணெய்  உருவாகிறது.

260 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தால் இயற்கை எரிவாயுவும், 177 டிகிரி செல்சியசுக்கு கீழ் வெப்பமும் இருந்தால் கச்சா எண்ணெயும் உருவாகும். பூமிக்கு அடியில் நிலவும் வெப்ப நிலையே, இயற்கை எரிவாயு அல்லது கச்சா எண்ணெய் உருவாவதற்கு அடிப்படை.  இன்று கடல் உயிரினங்கள் இறந்து, நாளையே அது கச்சா எண்ணெய்யாக மாறிவிடாது. இந்த இயற்கை மாற்றத்துக்கு தேவை பல லட்சம் ஆண்டுகள்.

கடலுக்கு அடியில் உருவான கச்சா எண்ணெய், பாறை இடுக்குகளில் ஊடுருவி நிலப்பகுதிகளின் அடியிலும் நிரம்பியிருக்கும். எனவே, கடலுக்கு அடியில் ஆழ்துளை இட்டு கச்சா எண்ணெய் எடுக்கும் பணியை Off -Shore என்றும், நிலப்பகுதியில் துளையிட்டு கச்சா எண்ணெய் எடுப்பதை On -Shore என்றும் கூறுகின்றனர் பொறியாளர்கள். ஆழ்துளை இட்ட பிறகு, பூமிக்கடியில் இருக்கும் அழுத்தத்தின் காரணமாக கச்சா எண்ணெயோ, எரிவாயுவோ, குழாய் மூலமாக தானாகவே மேலே வந்துவிடுவது வாடிக்கை...

சில நேரங்களில் பூமிக்கடியில் போதுமான அழுத்தம் இல்லாதபோது, மேலிருந்து அழுத்தத்தை உருவாக்கி, அவற்றை மேலே எடுப்பதும் உண்டு. இவ்வாறு எடுக்கப்படும் கச்சா எண்ணெய்யை அப்படியே பயன்படுத்துவது இயலாது. கச்சா எண்ணெய்யை சுத்திகரித்தால் மட்டுமே, பெட்ரோல், டீசல் முதல் பல்வேறு பொருட்கள் கிடைக்கும்.

இதையும் படிங்க: அடுத்த 5 ஆண்டுகளில்... உலக வெப்ப நிலை குறித்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

சுத்திகரிப்பு மையத்தில், மிகவும் பாதுகாப்பான முறையில் 400 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சூடாக்கப்படுகிறது கச்சா எண்ணெய். அப்போது முதலில் பிரிந்து வருவது புரொப்பேன், பியுட்டேன் எனப்படும் சமையலுக்கு நாம் பயன்படுத்தும் LPG சமையல் எரிவாயு. இயற்கையில் இந்த வாயுவிற்கு எந்த மணமும் இல்லாத நிலையில், Ethyl mercaptan சேர்க்கப்படுவது வழக்கம்.

இதை செய்வதால் மட்டுமே, சமையலறையில் எரிவாயு கசியும்போது, எளிதாக கண்டறிய முடிகிறது நம்மால். அதற்கு அடுத்ததாக நமக்கு கிடைப்பது பெட்ரோல். கச்சா எண்ணெயில் இருந்து, அடுத்து கிடைக்கும் பொருள் மண்ணெண்ணெய். இதை மேலும் சுத்திகரிப்பு செய்தால் கிடைப்பது ஒயிட் பெட்ரோல். இதுதான் விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள்.

மண்ணெண்ணெய் எடுத்தபிறகு நமக்கு கிடைக்கும் மற்றொரு எரிபொருள் டீசல். அதற்கு அடுத்ததாக, கிடைக்கும் எண்ணெய்க்கு பெயர் மினரல் ஆயில் எனப்படும் உயவு எண்ணெய். இதற்கு மணமோ, சுவையோ, நிறமோ கிடையாது என்பதால், சமையல் எண்ணெய் தயாரிக்கும் பல நிறுவனங்களுக்கு, இதுதான் முக்கிய மூலப்பொருள். கடலை எண்ணெய் எசன்ஸ் கலந்துவிட்டால், கடலை எண்ணெயாக மாறிவிடும்.

மேலும் படிங்க: கியான்வாபி பள்ளிவாசல் சர்ச்சை: நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது என்ன?

சூரியகாந்தி எசன்ஸ் சேர்த்துவிட்டால் சூரியகாந்தி எண்ணெய்யாக மாறிவிடும் இந்த மினரல் ஆயில். மிகவும் குறைந்த விலை சமையல் எண்ணெய் விற்கப்படும் சூட்சுமம் இதுதான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். உயவு எண்ணெய்க்கு அடுத்ததாக நமக்கு கிடைப்பது, மசகு எண்ணெய் எனப்படும் லூப்ரிகண்ட் ஆயில்.

அதற்கு அடுத்ததாக கிடைக்கும், அரும்பொருள் பாரபின் மெழுகு. இதுதான், மெழுகுவர்த்திகள், வண்ண கிரேயான்கள் மற்றும் வேசிலின் போன்ற அழுகு சாதனப் பொருட்கள் தயாரிப்பின் ஆதாரம். மெழுகு எடுத்தபிறகு கிடைக்கும் இன்னொரு பொருள் நாப்தா. நம் மக்கள் வழக்கமான பயன்படுத்தும் அந்துருண்டை தான் இது. இந்த நாப்தாவை பயன்படுத்தியே பல்வேறு வகையான தின்னர்களும், வார்னிஷ்களும் பரவலாக தயாரிக்கப்படுகின்றன.

கடைசியாக எஞ்சும் கசடு பெயர் நிலக்கீல்... இதில் இருந்து பிரித்து எடுக்கப்படுவதே பெயின்ட் தயாரிக்க  மூலப்பொருளாக பயன்படுகிறது. இவை எல்லாவற்றையும் எடுத்தபிறகு இறுதியாக எஞ்சுவதுதான், சாலைகள் அமைக்கப் பயன்படுத்தும் தார்...

இவ்வாறு கச்சா எண்ணெய்யில் இருந்து ஆரம்பத்தில் 10 பொருட்கள் கிடைத்தாலும், ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள், செயற்கை ரப்பர், நைலான், வாசனை திரவியங்கள், சோப்பு என எல்லாவற்றுக்கும் அடிப்படை மூலப்பொருள் கச்சா எண்ணெய்தான். இவ்வாறு பெட்ரோலியப் பொருட்களில் இருந்து சுமார் 6 ஆயிரம் பொருட்கள் தயாரிக்கப்படுவது சற்று ஆச்சரியமான விஷயம்தான்.

செய்தியாளர்: பத்மநாபன்

First published: