Home /News /explainers /

உயிரை பணயம் வைத்து செம்மரம் கடத்த காரணம் என்ன? செம்மரத்தின் மகத்துவத்தன்மைகள் என்னென்ன?

உயிரை பணயம் வைத்து செம்மரம் கடத்த காரணம் என்ன? செம்மரத்தின் மகத்துவத்தன்மைகள் என்னென்ன?

செம்மரம்

செம்மரம்

Red Sandalwood | ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரை பணயம் வைத்து, அவர்கள் இந்த தொழிலில் ஈடுபடுவது ஏன்? செம்மரத்தின் சிறப்பு என்ன என்பதையும் பார்க்கலாம்.

  ஆந்திர மாநில வனப்பகுதியில் அதிகம் வளர்ந்து நிற்கும் மரங்களில் மிகவும் மதிப்புமிக்கது செம்மரம். தமிழ்நாட்டில் ஜவ்வாது மலை, கர்நாடகாவின் மைசூர் பகுதிகளில் அதிகம் வளர்ந்திருந்தது செம்மரம். ஆனால் அவை அனைத்தும் அழிக்கப்பட்டு விட்ட நிலையில், ஆந்திராவில் மட்டும் செழித்து வளர்ந்து நிற்கின்றன செம்மரங்கள்.

  சித்தூர், கர்னூல், கடப்பா மாவட்ட மலைப்பகுதிகளே, இந்த மரங்கள் அதிகம் காணப்படும் இடங்கள். மரத்தின் நடுப்பகுதி சிவப்பு நிறத்தில் இருப்பதே, இதற்கு செம்மரம் என பெயரிடக் காரணம்.செஞ்சந்தனம், ரத்தச் சந்தனம், உதிரச் சந்தனம் என பல பெயர்களைக் கொண்ட இது வளர்வதற்கு ஏற்ற இடம் களி மண் கலந்த மண் தான். வறட்சியான சூழலே, இந்த மரங்களின் வளர்ச்சிக்கான வரப்பிரசாதம்.

  ஆந்திர மலைப்பகுதியில், வறட்சியான சூழல் அதிகம் என்பதால், அங்கு வளர்ந்து நிற்கின்றன ஆயிரமாயிரம் செம்மரங்கள். 26 அடி உயரம், 150 சென்டி மீட்டர் விட்டம் வரை இருக்கும் நன்கு வளர்ந்த செம்மரம். இந்த அளவுக்கு இம்மரங்கள் வளர எடுத்துக் கொள்வது 40 ஆண்டுகள்.

  தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்பு மரப்பாச்சி பொம்மைகள் செய்து விற்கப்பட்ட மரங்களில் முதன்மையானது செம்மரம். குழந்தைகள் இதை தொட்டு, நுகர்ந்து விளையாடும்போது கிடைக்கும் மருத்துவ பலன்கள் மகத்துவமானது. அந்த அளவுக்கு மருத்துவக் குணம் மிக்க செம்மரங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது சித்த மருத்துவத்தில்.

  Also Read : அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு குறைவது என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?

  சரும வியாதிகள், சர்க்கரை பாதிப்பு, விஷக் கடிகள் என பலவற்றுக்கும் மருந்தாக பயன்படுகிறது செம்மரம். அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் அதிக பங்கு வகிக்கின்றன இம்மரத்தில் இருந்து கிடைக்கும் வேதிப் பொருட்கள். அத்துடன், ஆண்மைக் குறைபாட்டை தீர்க்கும் மருந்து தயாரிப்புக்கும் உதவுவதாக கூறப்படுகிறது இம்மரம்.

  வெளிநாடுகளில் அதிக விலைக்கு போகும் செம்மரத்திற்கு ஜப்பானில் வரவேற்பு அதிகம். இதேபோல், ஐரோப்பிய நாடுகளில் ஒயின்களில் கலக்கப்படும் செம்மரத் தூள், அத்தர் தயாரிப்புக்கும் அதிகம் பயன்படுத்தப்படுவதாக தகவல் உள்ளது. கதிர்வீச்சை தடுக்கும் ஆற்றல் கொண்டதாகக் கூறி, அணு உலைகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர் ஜப்பானியர்களும், சீனர்களும்...

  ஆனால், இதற்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் எதுவும் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இருப்பினும், அணு ஆயுதங்களை உருவாக்க உதவும் யுரேனியத்தை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன செம்மரங்கள். சீனா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, துபாய், குவைத், சவுதி அரேபியா ஆகியவையே நம்மிடம் இருந்து செம்மரத்தை அதிகளவில் இறக்குமதி செய்த நாடுகள்.

  ஆயினும், தேவைக்கேற்ற அளவில் கிடைக்காதது, ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையால், வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன செம்மரங்கள். ஆந்திராவில் இருந்து கடத்தப்படும் செம்மரங்களுக்கு, அதிகம் பலியாவது அப்பாவித் தமிழர்கள்தான். 2015, ஏப்ரல் 7ஆம் தேதி அப்பாவித் தமிழர்கள் 20 பேரை சுட்டுக் கொன்றது ஆந்திர போலீஸ்.  இன்றும் என்கவுன்டர் கொலைகளை தொடரும் ஆந்திர போலீஸ், அவ்வபோது கைது நடவடிக்கையையும் அரங்கேற்றி வருகிறது..

  அந்த வரிசையில் தான், ஆந்திராவில் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள் 7 தமிழர்கள்... விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு மழை பொய்த்துப் போய், வறுமை தாண்டவம் ஆடுவதே இதற்கு காரணம். இன்னொரு புறம் ஆசை வார்த்தைக் கூறி அழைத்துச் செல்லும் கடத்தல் ஏஜெண்டுகள். மலைவாழ் மக்கள் மீது வனத்துறையினர் போடும் பொய் வழக்குகளும், கடத்தல் தொழில்களுக்கு அவர்கள் செல்லக் காரணம் என்கிறனர் சமூக செயற்பாட்டாளர்கள்.

  மலைவாழ் மக்களின் வறுமையை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்தால், கடத்தல் தொழிலுக்காக, ஆந்திராவுக்கு செல்வது தடுக்கப்படும். அத்துடன் அப்பாவித் தமிழர்கள் பலியாவதும் தவிர்க்கப்படும்.
  Published by:Vijay R
  First published:

  அடுத்த செய்தி