30 ஆண்டுகால சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸின் செயல்பாடு எப்படி?

30 ஆண்டுகால சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸின் செயல்பாடு எப்படி?

கோப்புப்படம்

திமுக கூட்டணியில் காங்கிரஸுடனான தொகுதிப்பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகால சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸின் செயல்பாடு எவ்வாறு இருந்தது?

  • Share this:
    தேசிய கட்சியான காங்கிரஸ், 1937-ம் ஆண்டு முதலே தமிழகத்தில் ஆட்சி செய்து வந்தது. இது 1967-ம் ஆண்டுவரை நீடித்தது. அதன்பிறகு, காங்கிரஸ் கட்சியால் அரியணையில் அமர முடியவில்லை. இதனால், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருங்கிணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. 214 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 26 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

    1991-ம் ஆண்டில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து 65 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், 60 தொகுதிகளில் வெற்றிக்கனியை பறித்தது. 1996-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து. மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உதயமானது. அதிமுக கூட்டணியில் இணைந்து 64 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.

    அதேநேரம், திமுக-வுடன் இணைந்து 41 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் 39-ல் வெற்றிவாகை சூடியது. 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்தன. தமிழ் மாநில காங்கிரஸ் 23 தொகுதிகளையும், காங்கிரஸ் 7 தொகுதிகளையும் கைப்பற்றின.

    பின்னர் இரு கட்சிகளும் இணைந்துகொண்ட நிலையில், 2006 தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தது. 50 தொகுதிகளில் போட்டியிட்டு 34-ல் வெற்றிபெற்றது. 2011-ம் ஆண்டு தேர்தலிலும் இதே கூட்டணி நீடித்தது. அப்போது, 63 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி 5-ல் மட்டுமே வெற்றிபெற்றது.

    இந்த சூழலில் 2014-ம் ஆண்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஜி.கே.வாசன் மீண்டும் உருவாக்கினார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8-ல் மட்டுமே வெற்றிபெற்றது.

    மேலும் படிக்க...கொரோனா பரவலை தடுக்கவே ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் விலை உயர்வு: ரயில்வே நிர்வாகம்

    மக்கள்நலக் கூட்டணியில் களமிறங்கிய தமிழ் மாநில காங்கிரஸ், 26 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. வாக்கு சதவீதத்தைப் பொருத்தவரை, 1989-ம் ஆண்டில் 19.83 சதவீதத்தை காங்கிரஸ் பெற்றது. இது 1991-ல் 15.2 சதவீதமாக இருந்த நிலையில், 1996-ல் 5.61 சதவீதமாக குறைந்தது. 2001-ம் ஆண்டில் மேலும் குறைந்து 2 . 5 சதவீதமாக இருந்தது.

    2006-ம் ஆண்டு தேர்தலில் நல்ல முன்னேற்றம் அடைந்து 8 .4 சதவீதமாக பதிவானது. 2011-ம் ஆண்டு தேர்தலில் மேலும் அதிகரித்து 9.3 சதவீதமாக இருந்த நிலையில், 2016-ம் ஆண்டில் 6.47 சதவீதமாக குறைந்தது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: