மனோஜ் திவாரி Vs அசோக் திண்டா: மேற்குவங்க அரசியலில் இரு துருவங்களாக பயணத்தை துவங்கிய கிரிக்கெட் வீரர்கள்!

மனோஜ் திவாரி Vs அசோக் திண்டா:

பல ஆண்டுகள் ஒன்றாகவே பல தருணங்களில் ஒன்றாக பயனித்த அசோக் திண்டாவும், மனோஜ் திவாரியும் ஒரே நாளில் அரசியல் வாழ்க்கையில் நுழைந்துள்ளனர். இந்திய அணி, பெங்கால் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மட்டுமல்லாது ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பது, ஒரே நேரத்தில் திருமணம் என மேலும் பல ஒற்றுமைகள் இவ்விருவருக்கும் இருக்கிறது.

  • Share this:
மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பெங்கால் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மனோஜ் திவாரி கடந்த பிப்ரவரி 24ம் தேதியன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் சில வங்காள திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் சிலரும் கட்சியில் இணைந்தனர். ஹூக்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சிக் கொடியை முதல்வர் மமதாவிடம் இருந்து திவாரி பெற்றுக்கொண்டார்.

இந்திய கிரிக்கெட் அணியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்கால் கிரிக்கெட் அணிகளில் மனோஜ் திவாரியுடன் விளையாடிய சக வீரரான அசோக் திண்டா அதே நாள் மாலையில், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ மற்றும் முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி ஆகியோர் முன்னிலையில் அசோக் திண்டா பாஜகவில் இணைந்தார்.

பல ஆண்டுகள் ஒன்றாகவே பல தருணங்களில் ஒன்றாக பயனித்த அசோக் திண்டாவும், மனோஜ் திவாரியும் ஒரே நாளில் அரசியல் வாழ்க்கையில் நுழைந்துள்ளனர். இந்திய அணி, பெங்கால் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மட்டுமல்லாது ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பது, ஒரே நேரத்தில் திருமணம் என மேலும் பல ஒற்றுமைகள் இவ்விருவருக்கும் இருக்கிறது. இது தொடர்பாக ‘தி குவிண்ட்’ இணையதளத்திற்கு இவர்கள் இருவரும் அளித்துள்ள பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளது.

மனோஜ் திவாரி குறித்து அசோக் திண்டா கூறும்போது, எங்கள் வாழ்க்கையின் பாதியளவை இருவரும் ஒன்றாகவே கழித்துள்ளோம் என்றார்.

மேலும் இருவருக்கும் 4 முதல் 5 நாட்கள் இடைவெளியில் தான் திருமணம் நடந்தது. குழப்பத்தை தவிர்ப்பதற்காக நாங்கள் இருவரும் பேசி தான் திருமணம் வெவ்வேறு நாட்களில் வருவதை உறுதி செய்தோம். இருவருமே அரசியலில் ஈடுபடுவது குறித்து பேசியிருக்கிறோம். இருவரும் என்ன கட்சிகளில் சேரப்போகிறோம் என்பதை முன்பே தெரிந்து வைத்திருந்தோம் என திண்டா தெரிவித்தார்.

கிழக்கு கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தான் இருவரும் வசித்து வருகின்றனர்.
இருவருமே பெங்கால் அணியில் விளையாடியது தொடங்கி, இந்திய அணியில் விளையாடிய போதும், ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸில் விளையாடிய போதும் நீண்ட காலமாகவே ஒற்றுமையாகவே பயணித்து வந்திருக்கின்றனர். இதில் பெங்கால் கிரிக்கெட் அணியில் மட்டும் திவாரியின் கேப்டன்ஷிப்பின் கீழ் திண்டா விளையாடி உள்ளார்.

மனோஜ் திவாரி மக்களுக்கு நன்மை செய்வதற்காக அரசியலில் நுழைந்துள்ளார், நானும் அதே காரணத்திற்காக தான் சேர்ந்துள்ளேன். திண்டா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் திவாரி தற்போதும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.

மனோஜ் திவாரியிடம் பேசிய போது தனக்கு பாஜக தரப்பில் இருந்து கட்சியில் சேருமாரு அழைப்புகள் வந்தது. இருப்பினும் மமதா பானர்ஜி என்னிடம் நேரடியாக தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்ததால் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தேன் என்றார்.

மமதா பானர்ஜி எப்போதும் என் மீது அன்பு செலுத்துபவராக இருந்துள்ளார். என் பிறந்தநாளுக்கு தவறாமல் வாழ்த்து தெரிவித்துவிடுவார். அரசியலில் நுழைவதற்கு இதுவே சரியான தருணம் என அவர் வலியுறுத்தினார். எனவே திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தேன் என தெரிவித்தார்.

மனோஜ் திவாரி மமதா பானர்ஜியால் அரசியல் பாதைக்கு திருப்பப்பட்டார் என்றால், அசோக் திண்டாவும் முன்னாள் அமைச்சரான சுவேந்து அதிகாரியின் அழைப்பின் பேரில் பாஜகவில் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக அசோக் திண்டா கூறுகையில், ஆரம்ப காலத்தில் இருந்தே சுவேந்து அதிகாரியால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். அவரை 15 ஆண்டுகளாக தெரியும். சமூக விஷயங்களுக்காக அவரிடம் உதவி கேட்டபோதெல்லாம் அதனை நிறைவேற்றித் தந்திருக்கிறார். இருப்பினும் அவர் திரிணாமுல் காங்கிரஸில் இருந்திருந்தால் அக்கட்சியில் நான் இணைந்திருக்க மாட்டேன். சுவேந்து பாஜகவில் இணைந்த போது சந்தோஷப்பட்டேன்.. பிரதமர் மோடியால் நான் ஈர்க்கப்பட்டவன் என தெரிவித்தார்.

ஹவுரா மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் திவாரி ஹவுராவில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருப்பதாகவும், மிட்னாபூரைச் சேர்ந்த அசோக் திண்டா அந்த மாவட்டத்தில் உள்ள ஏதேனும் தொகுதியில் போட்டிடவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அந்தந்த கட்சிகள் சார்பாக போட்டியிட்டு ஒரே மாதிரி வெற்றியையும் பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Published by:Arun
First published: