Home /News /explainers /

Fact Check: செங்கல்பட்டில் வெள்ளமா.? பரவும் வீடியோவில் உள்ள உண்மை என்ன?

Fact Check: செங்கல்பட்டில் வெள்ளமா.? பரவும் வீடியோவில் உள்ள உண்மை என்ன?

வெள்ளம் தொடர்பான வைரல் வீடியோ

வெள்ளம் தொடர்பான வைரல் வீடியோ

செங்கல்பட்டு மாவட்டம் திம்மாபுரம் பகுதியில் எடுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், வீடுகளை மூழ்கடிக்கும் விதமாக வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடுகளை மூழ்கடித்து வெள்ளம் செல்வதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.  பலரும் இந்த வீடியோவை சேர் செய்துவருகின்றனர்.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக ஒருசில பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நந்திவரம்- கூடுவாஞ்சேரி ஏரி நிரம்பி, வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. ஒருசில இடங்களில் மார்பளவு தண்ணீர் தேங்கியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திம்மாபுரம் பகுதியில் எடுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், வீடுகளை மூழ்கடிக்கும் விதமாக வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. வீட்டின் மாடியில் இருந்து அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வரும்நிலையில் அதன் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்தோம். வீடியோவில் குடியிருப்பை சுற்று மலைத் தொடர்கள் உள்ளதால் இந்த வீடியோ செங்கல்பட்டில் எடுக்கப்பட்டது அல்ல என்பது தெளிவானது.

    நமது செங்கல்பட்டு செய்தியாளரை தொடர்புகொண்டு கேட்டபோது அவரும் வீடியோவில் உள்ள இடம் திம்மாவரம் அல்ல என்பதை உறுதிப்படுத்தினார். எனினும், வீடியோவில் உள்ள இடம் எங்கு உள்ளது என்பதை Image reverse Search  மூலம் ஆய்வு செய்தபோது. இந்த வீடியோ கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


    ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் உள்ள  ராஜம்பேட்டை என்னும் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவந்தது. ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இது என்று கூறப்படுகிறது.  எனவே, செங்கல்பட்டு திம்மாவரம் என்று கூறப்பட்டு பரப்பப்படும் அந்த வீடியோ உண்மையானது அல்ல.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Fact Check, Flood, Viral Video

    அடுத்த செய்தி