மரியுபோல் நகரில் இரும்புத் தொழிற்சாலை ஒன்றில் பதுங்கியுள்ள உக்ரைன் ராணுவப்படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை உக்ரைன் நிராகரித்துள்ளது. Azovstal இரும்பு ஆலையில் 2,000 மேற்பட்ட உக்ரைன் ராணுவ வீரர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் பதுங்கியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
உக்ரைன் ரஷ்யா மோதல்: உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பு ஏழாவது வாரத்தைக் கடந்துள்ளது. இருநாடுகளுக்கு உடனான அமைதி பேச்சுவார்த்தையில் இதுவரை முடிவு எதுவும் எட்டப்படாததால், போர் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கிவி மற்றும் அந்நாட்டின் வடக்குப் பகுதியில் போர்ப் பதற்றங்கள் குறைந்துள்ள போதிலும்,மரியுபோல், சுமி, கார்கிவ் ஆகிய கிழக்குப்பகுதியிலும், கெர்சன், மைக்கோலைவ் ஆகிய தென்பகுதியிலும் ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது.
தோனெத்சுக் (donetsk) மாநிலத்தின் தெற்கில் அமைந்துள்ள மரியுபோல் நகரை கைப்பற்றுவதன் மூலம் கிரீமியா தீபகற்ப பகுதியுடன் தரை வழியாக ரஷ்யாவை நேரடியாக இணைக்க முடியும். மேலும், இந்நகரம் அசோவ் கடற்கரையிலும், கல்மியசு ஆற்றின் முகப்பிலும் அமைந்துள்ளது. உக்ரைனின் கடல்சார் வணிகத்தில் மரியுபோல் துறைமுகம் நீண்ட காலமாக ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக இருந்து வருகிறது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எஃகு, நிலக்கரி மற்றும் சோளம் ஆகியவற்றை மத்திய கிழக்கு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. மரியுபோல் கைப்பற்றப்பட்டால், உக்ரைன் நாட்டின் கருங்கடல் ஆதிக்கம் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BBC:
இதுவரையிலான நிலை என்ன?
ரஷ்யாவின் இந்த படையெடுப்புக்கு நேட்டோ விரிவாக்கம் முக்கிய காரணமாக இருந்தாலும், கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டமைப்பை (European Security Architecture) மறுசீரமைத்து, மாற்றியமைக்க வேண்டும் என்ற முனைப்பும் அதனிடம் காணப்படுகிறது. மேலும், ஒட்டுமொத்த பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைப்பு (CSTO),யூரேசிய பொருளாதார சமூகம் (Eurasian Economic Union), கிழக்கு பொருளாதார அமைப்பு (Eastern Economic Forum), தொலைதூர கிழக்கு ரஷ்யா (Russian Far East) போன்ற தனது உருவாக்கத்தை வலுப்படுத்தும் விதமாக ரஷ்யா இந்த படையெடுப்பை முன்னெடுத்தது.

உக்ரைன் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள தோனெத்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களுக்கு தன்னாட்சியைப் பெற்றுத் தர ரஷ்யா முனைகிறது
2022 பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது தனது சிறப்பு ராணுவ நடவடிக்கையை ரஷ்யா தொடர்ந்தது. தனது, நாட்டின் ராணுவத்தில் 95% வீரர்களை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. கிவி, கார்கிவ் (கிழக்கு ) , தான்பாஸ் (தெற்கு), கெர்சன் (தென் மேற்கு), மரியுபோல் (தென்கிழக்கு ) என உக்ரைன் நாட்டின் நான்கு திசைகளிலும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
தெற்குப் பகுதிகளில் ரஷ்யா ராணுவம் சில கணிசமான வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், உக்ரைன் அரசைப் பணியவைப்பதில் ரஷ்யா முழுமையான வெற்றிபெறவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, 2014ல் கிரீமியா தீபகற்ப பகுதியை ரஷியா கைப்பற்றும் போது, உக்ரைனிய ராணுவம் எந்தவித எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால், உலகில் இரண்டாவது பெரிய ராணுவ சக்தியாக விளங்கும் ரஷ்யாவை, உக்ரைனிய மக்கள் கடந்த 7 வாரங்களாக கையாண்ட விதம் பலரையும் வியக்க வைத்துள்ளது. இதனை, ரஷியா ராணுவம் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. மேலும், அடுத்தக் கட்டத்தை நோக்கி செல்வதற்கான ஊக்கத்தையும் அது இழந்திருக்கிறது.
ஆனால், மறுபுறம் போரை நீட்டிப்பது ரஷ்யாவின் மூலோபாய செயல்திட்டங்களில் ஒன்றாக நிபுணர்கள் கருதுகின்றனர். மரியூபோல், கெர்சன் போன்ற நகரங்களில் குடிநீர் போன்ற அத்தியாவசிய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. நேரடியாக தாக்குதல் நடத்தி முக்கிய நகரங்களை கைப்பற்றுவதை விட, எதிராளிகள் தானே முன்வந்து சரணடையும் நிலையை ரஷ்யா ஏற்படுத்தி வருவதாகவும், இது உளவியல் ரீதியான தாக்குதல் என்றும் தெரிவிக்கின்றனர்.
அமைதி பேச்சுவார்த்தை: போரை முடிவுக்குக் கொண்டு வர
, இரு நாடுகளும் உடனடியாக அமைதி பேச்சுவார்தையை தொடங்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். பொதுவாக, உயிர் பலிகள் அதிகரிக்கும் போது, போரின் தன்மை நிர்ணயித்த கட்டுப்பாடுகளை தாண்டும் போதும் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் அமைதிப் பேசிச்சுவார்த்தையை முன்னெடுப்பது வழக்கம்.

உக்ரைன்
ரஷ்யா படையெடுப்பால், இதுவரை 1842 அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளதாக ஐ,நா அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மேலும், இந்த தாக்குதல்கள் காரணமாக கடந்த ஆறு வாரங்களில் 142 சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ நா குழந்தைகள் அமைப்பான யுனிசெப் கூறுகிறது. அந்நாட்டின் மூன்றில் இருபங்கு குழந்தைகள் போர் காரணமாக் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியிருப்பதாக அதன் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், தற்போதைய சூழலில், முழுமையான வெற்றி/தோல்வி என்ற வரையறைக்குள் இருநாடுகளும் இல்லை. எதிரி நாட்டின் முக்கியப் பகுதிகளை கைப்பற்றுவது, உக்ரைனிய உக்ரைனிய ராணுவ பலத்தை சிதைப்பது, கருங்கடல் பிராந்தியத்தை சுற்றிவளைப்பது, கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள தொன்பாஸ் மற்றும் அதன் சுற்றியுள்ள நகரங்களை முற்றிலும் கைப்பற்றுவது போன்ற தனது நோக்கத்தை ரஷ்யா இன்றளவிலும் அடையவில்லை.
எனவே, அமைதிப் பேசிச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கானதேவைகளும், சாத்தியக்கூறுகளும் உள்ளன. ஆனால், இந்த அமைதிப் பேச்சுவார்த்த்தை போரை முடிவுக்கு கொண்டு வருமா? என்பதில் இருவரு கருத்துக்கள் உள்ளன. உதாரணமாக, 1946 முதல் 2005 ஆண்டு வரையிலான காலகட்டங்களில், வெறும் 13.5% பேச்சுவார்த்தைகள் மட்டுமே மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டு வந்துளளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உக்ரைனில் ஆட்சி மாற்றம், நேட்டோவை விட்டொழித்து ரஷ்யாவின் கீழ் செயல்படும் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைப்பில் (CSTO) உக்ரைன் உறுப்பினராக சேர்தல், மின்ஸ்க் ஒப்பந்தத்தின் கீழ் (Minsk protocol ) கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள தோனெத்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களுக்கு தன்னாட்சியை ஏற்படுத்திக் கொடுப்பது, யூரேசிய பொருளாதார சமூகம் (Eurasian Economic Union) மற்றும் கிழக்கு பொருளாதார அமைப்பில் முழுமையாக இனைத்துக் கொள்ளுதல் போன்ற பல்வேறு நிர்பந்தங்களை ரஷ்யா விதிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. ஐரோப்பியா பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் தாராண்மை வாதத்தில் தீவிர ஆர்வம் கொண்ட உக்ரைனிய பிரதமர் இதற்கு ஒப்புக் கொள்வாரா என்ற கேள்வியே தற்போது அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.