1959-ல் நடைபெற்ற மாநகராட்சி தேர்தல்... திமுக-வினருக்கு நம்பிக்கையை விதைத்த திருப்புமுனை...

Youtube Video

சென்னை மாநகரம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக நெடுங்காலமாக விளங்கியதற்கு 1959-ல் நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் முக்கிய காரணமாக இருந்தது.

  • Share this:
1949ம் ஆண்டில் திமுக தொடங்கப்பட்டபோதிலும் 1957-ல்தான் முதன்முதலில் தேர்தல் களத்தில் குதித்தது. முதல் தேர்தலிலேயே 15 தொகுதிகளில் திமுக வென்றிருந்தது. தேர்தல் அரசியலில் மெல்ல மெல்ல நடைபயில தொடங்கிய நிலையில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கு 1959ம் ஆண்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 90-ல் வேட்பாளர்களை களமிறக்க தயாரானார் கருணாநிதி. கட்சிப் பணியில் துடிப்பாக இயங்கி வந்த மு.கருணாநிதியிடம் சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பை அண்ணா ஒப்படைத்தார்,

தேர்தல் அரசியலுக்கு திமுக புதிது என்பதால் முழுவீச்சில் களத்தில் இறங்கவேண்டாம் என அண்ணாதுரை கருதினார். இருப்பினும் கருணாநிதி தனது முடிவில் உறுதியாக இருந்தார். அதை தடுக்க விரும்பாத அண்ணா, எத்தனை வார்டுகளில் கழகத்துக்கு வெற்றி வாய்ப்பு எனக் கேட்டதற்கு கருணாநிதி, 40-க்கும் மேற்பட்ட வார்டுகளில் வெற்றி பெறவாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதி, மதியழகன் மற்றும் கவிஞர் கண்ணதாசன் உள்ளிட்டோர் கடுமையாக பணியாற்றினர்.

தேர்தல் முடிவு வெளியானபோது 45 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளும் காங்கிரஸ் கட்சியோ 36 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. மேயர் பதவியை கைப்பற்ற 51 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுக-வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கைகொடுத்தது. சென்னை மாநகராட்சி மேயர் பொறுப்பை திமுக கைப்பற்றி அ.பொ. அரசு சென்னை மாநகராட்சியின் மேயர் ஆனார். பின்னாளில் திமுக-வின் கோட்டையாக சென்னை விளங்க முக்கிய காரணமாக அமைந்தது இத்தேர்தல்.

மேலும் படிக்க... திருப்புமுனை: தனி ஆளாய் தேர்தல் போக்கையே மாற்றியமைத்த விஜயகாந்த்.. 2006 தேர்தலின் முக்கிய திருப்புமுனை..

மாநகராட்சி தேர்தலில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சியை வெற்றி பெற வைத்துக் காட்டிய கருணாநிதிக்கு ஒரு பவுன் மோதிரத்தை பரிசாக சூட்டினார் அண்ணா. அன்றிலிருந்து மெரினாவில் கருணாநிதி மீளாத் துயில் கொள்ளும்வரை கடைசி வரை அந்த மோதிரம் கழற்றப்படவில்லை.

வளர்ந்து வரும் கட்சியாக இருந்தபோதே சென்னை மாநகராட்சி தேர்தலில் துணிந்து 90 வேட்பாளர்களை நிறுத்தி சர்வ வல்லமை படைத்த காங்கிரசை வீழ்த்தினார் கருணாநிதி. தேர்தல் வியூகம் வகுப்பதில் கருணாநிதிக்கு ஊக்கம் ஏற்படுத்திய விதத்திலும், வலிமையான காங்கிரசை கடுமையாக உழைத்தால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை திமுக-வினர் மனங்களில் உதிக்கச் செய்த வகையிலும் 1959 மாநகராட்சித் தேர்தலானது தேர்தல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனைகளுள் ஒன்று எனலாம்.

 




உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: