HOME»NEWS»EXPLAINERS»thiruppumunai the by election of thirumangalam constituency vai

திருப்புமுனை: பணப்பட்டுவாடா தொடங்கி தேர்தல் ஆணையத்துக்கு பாடம் புகட்டியது வரை இன்றும் பேசப்படும் திருமங்கலம் தொகுதியின் இடைத்தேர்தல்...

இந்திய தேர்தல் வரலாற்றில் பணப்பட்டுவாடாவிலும் மோசமான உதாரணமாய் அமைந்து தேர்தல் ஆணையத்துக்கு திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பாடம் புகட்டியது.

  • Share this:

இடைத் தேர்தலில் வாக்காளர்களை கவர பணமோ பொருளோ வழங்கும் வாடிக்கை ஆங்கிலேயர் காலம் தொட்டே இருந்து வருகிறது. இருந்தபோதிலும் ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திய தேர்தலாக இன்றும் பேசப்படுவது திருமங்கலம் இடைத்தேர்தல்தான். கடந்த 2009ஆம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற மதிமுக எம்எல்ஏ வீர இளவரசன் உயிரிழந்ததால் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் ஆளும் திமுக, அதிமுக மற்றும் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து இருந்த தேமுதிக ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டது.

முன்னதாக, மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றியை தேடி தந்திருந்தார் மு.க. அழகிரி அடுத்ததாக மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு தன் பங்களிப்பை சிறப்பாக அளித்திருந்தார் மு.க.அழகிரி. இந்த சூழலில்தான் திருமங்கலம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது இம்முறையும் கட்சியை வெற்றிபெற வைக்கும் பொறுப்பு மு.க அழகிரிக்கு தரப்பட்டது. மதுரையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு நிலங்கள் எடுப்பதற்கு மக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டு இருந்த நேரம். பல்வேறு வியூகங்களை வகுத்தார் அழகிரி.

தொகுதி வாக்காளர்கள் மற்றும் குடும்பங்கள் எண்ணிக்கை முறையாக கணக்கிடப்பட்டு அவர்களுள் எக்கட்சியும் சாராத குடும்பங்களை குறிவைத்து பண வினியோகம் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறின. மேலும் வெளியூர்களுக்கு சென்றிருந்தவர்களின் வீடுகளில் ஜன்னல்கள் மற்றும் கதவு இடுக்குகள் வழியாக பணப் பட்டுவாடா நடைபெற்றதாகவும் செய்தித்தாள்கள் மற்றும் வாக்காளர் சீட்டு ஆகியவற்றில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை மறைத்து விநியோகிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்தன. வெளியூரில் வசிப்போரை அழைத்து வந்து, அவர்கள் வாக்களித்ததும் ரொக்கம், பிரியாணி ஆகியவற்றை தந்து மீண்டும் அந்தந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



எதிர்பார்த்தபடியே திமுக வேட்பாளர் லதா அதியமான் 79,422 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கம் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றிருந்தார். தேமுதிக வேட்பாளர் 13,000 வாக்குகளைப் பெற்று டெபாசிட் இழந்தார். இத்தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் பிரசாரம் செய்து போதும் பணபலத்துடன் போட்டியிட முடியாமல் 831 வாக்குகளையே பெற முடிந்தது.

மேலும் படிக்க... திருப்புமுனை: அரசியல் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அந்த ‘பஞ்ச் டயலாக்’ 

தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் கருணாநிதி 30 மாத ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவோ திருமங்கலத்தில் பணபலத்துக்கு வெற்றி கிடைத்தது என விமர்சித்தார்.

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பற்றி அறிந்த அமெரிக்க அரசு இங்கு உள்ள அமெரிக்க தூதரகம் மூலமாக பணப்பட்டுவாடா குறித்து கேட்டு விவரத்தை பெற்றதாகவும் தகவல் வெளியானது. அந்த அளவுக்கு சர்வதேச அளவிற்கு திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பேசப்பட்டது. அதனால்தான் திருமங்கலம் பார்முலா என்ற பெயரும் ஏற்பட்டது. சமீபத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய முக அழகிரி...கடின உழைப்பு தான் திருமங்கலம் பார்முலா என்று விளக்கம் அளித்திருந்தார்.

வீடியோ



எது எப்படியோ திருமங்கலம் இடைத் தேர்தலானது, பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் விஞ்ஞனபூர்வமாக ஆயத்தம் ஆக வேண்டிய எச்சரிக்கை மணியை அடித்த முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: