முகப்பு /செய்தி /Explainers / திருப்புமுனை: ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளராக்கி அழகு பார்த்த எம்ஜிஆர்

திருப்புமுனை: ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளராக்கி அழகு பார்த்த எம்ஜிஆர்

திருப்புமுனை: ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளராக்கி அழகு பார்த்த எம்ஜிஆர்

அரசியலில் பின்னாளில் கோலோச்சினாலும் ஆரம்ப காலங்களில் பல்வேறு இடர்களைச் சந்தித்தவர் ஜெயலலிதா. எம்ஜிஆர் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை ஜெயலலிதாவின் அரசியல் வெற்றிக்கு திறவுகோலாக ஆனது.

  • 1-MIN READ
  • Last Updated :

திரையுலகில் பல வெற்றிகளை சுவைத்த ஜெயலலிதா அரசியலையும் ஒரு கைபார்க்க நினைத்து 1982 ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி அதிமுக-வில் உறுப்பினராக சேர்ந்தார். அப்போது சத்துணவு திட்டம் அமலாகியிருந்தது. அதை சிறப்பாக செயல்படுத்த ஒரு உயர்மட்டக் குழுவை எம்ஜிஆர் அமைத்திருந்தார். இருந்தபோதிலும் அதை பிரபலப்படுத்தவும் எதிர்க்கட்சி விமர்சனங்களை சமாளிக்கவும் ஒரு பிரபல முகம் அவருக்கு தேவைப்பட்டது. அதற்கு ஜெயலலிதா கச்சிதமாக பொருந்துவார் எனக் கருதிய எம்ஜிஆர் அவரை சத்துணவு உயர்மட்டக் குழு உறுப்பினராக நியமித்தார்.

இது எம்ஜிஆரால் ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட முதல் அரசியல் அங்கீகாரம். அந்த சமயத்தில் திருச்செந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வந்தது. எதிர்த்தரப்பில் இருந்து சத்துணவு திட்டத்தில் ஊழல் என்பது போன்ற புகார்கள் எழுந்தன. அந்த இடைத்தேர்தலில் களமிறங்கிய ஜெயலலிதா, முன்னின்று வெற்றிக்கனியை பறித்து தந்தார். அதற்குரிய அங்கீகாரமாக ஜெயலிதாவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவியை வழங்கினார்.

எம்ஜிஆர், ஆர்.எம், வீரப்பன், எஸ்.டி. சோமசுந்தரம் மற்றும் காளிமுத்து போன்ற மூத்த நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் எதிர்ப்புகளுக்கிடையே ஜெயலலிதாவின் அரசியல் கிராஃப் உயர்ந்தபடி இருந்தது. 1984 மார்ச் மாதத்தில் ஜெயலலிதாவை மாநிலங்களவை உறுப்பினராக்கினார் எம்ஜிஆர். இந்திரா காந்தியை சந்தித்து ஜெயலலிதா வாழ்த்து பெற்றார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்து எஸ்டிஎஸ் வெளிப்படையாகவே விமர்சித்தார். ஒரு கட்டத்தில் அதிமுக-வில் இருந்து வெளியேறி புதுக்கட்சி தொடங்கினார் எஸ்டிஎஸ்.

இந்த சூழலில் ஜெயலலிதாவுக்கு பெரும் பின்னடைவளிக்கும் வகையில் கொள்கை பரப்புச் செயாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்த சமயத்தில் எம்ஜிஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பிரதமர் இந்திரா காந்தியின் முயற்சியால் அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க ஏற்பாடுகளை செய்தார். இதனிடையே 1984 அக்டோபர் 31 ஆம் தேதி பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதும் பிரதமர் பொறுப்பை ராஜீவ்காந்தி ஏற்றுக்கொண்டார். மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டார்.

தமிழகத்திலும் அதே போல் முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலும் சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுகவின் கட்டுப்பாடு, மூத்த நிர்வாகிகளிடம் இருந்து வந்தது. இதுதான் சமயம் என கருதி ஜெயலலிதாவை ஓரம் கட்டப்பட்டார். ஜெயலலிதாவின் நாடாளுமன்ற குழுவின் துணைத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது.

ஜெயலலிதாவை தேர்தல் பிரசாரத்துக்கு அழைக்காத போதும் அவர் பல ஊர்களுக்குச் சென்று வாக்கு சேகரித்தார். சென்ற இடங்களில் எல்லாம் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டது மற்றும் எம்ஜிஆர் சிகிச்சை பெறும் வீடியோ இரண்டுமே தேர்தல் வெற்றிக்குப் போதுமானதாக இருந்தது.

இந்த சூழலில் தமிழகம் திரும்பினார் எம்ஜிஆர். அவரைப் பார்க்க ஜெயலலிதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் ஒருவழியாக எம்ஜிஆரை ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். அடுத்த சில மாதங்களிலேயே காட்சிகள் மாறின.

ஜெயலலிதாவை மீண்டும் கொள்கை பரப்பு செயலாளராக்கினார் எம்ஜிஆர். பறிக்கப்பட்ட பதவியை மீண்டும் எம்ஜிஆரே தந்தது கட்சியில் ஜெயலலிதாவுக்கு அழுத்தமான அங்கீகாரத்தை தருவதாக அமைந்தது. தொடர்ந்து 1986ம் ஆண்டு மதுரையில் நடந்த அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற மாநாட்டில் முதல்வருக்கு வெள்ளி செங்கோலை பரிசாக வழங்கி தன்னை அரசியல் வாரிசாக அடையாளப்படுத்திக் கொண்டார்.

மேலும் படிக்க... சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதியின் கேட்டை தொட்டு வணங்கி செல்லும் ஆதரவாளர்கள்...

இதற்கெல்லாம் அச்சாரமாக 1985 செப்டம்பரில் எம்ஜிஆர் வெளியிட்ட அந்த அறிவிப்பு அரசியலில் ஜெயலலிதா அழுத்தமாக கால் ஊன்றி நிலைத்திருக்க வழிகோலியதுடன் பின்னாளில் தேர்தல்களில் வெற்றிகளை குவிக்க கட்சியின் திறவுகோலை தந்தது போன்ற திருப்புமுனை தருணமாக அமைந்தது என்றால் மிகையாகாது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Jayalalithaa, MGR, TN Assembly Election 2021