Home /News /explainers /

TN Morning Breakfast Scheme: காலை சிற்றுண்டி உணவுத்திட்டம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

TN Morning Breakfast Scheme: காலை சிற்றுண்டி உணவுத்திட்டம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

TN Morning Breakfast Scheme: காலை சிற்றூண்டி உணவுத்திட்டம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

TN Morning Breakfast Scheme: காலை சிற்றூண்டி உணவுத்திட்டம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

குழந்தைகளுக்கு காலை உணவு செய்யும் நேரம் மிச்சமாகுவதால், நகர்ப்புற பெண்கள் பணிக்கு செல்லும் (Female Labour Force) எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது

அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக  மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கத்தால் மாணவர்களின் கற்றல் இடைவெளி அதிகரித்ததையும் அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த தரவுகளையும் பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் சுட்டிக் காட்டி வருகின்றன. ஆன்லைன் கல்வி முறையின் பள்ளிக் குழந்தைகள் போதிய அறிவைப் பெறவில்லை என்றும், இந்த கல்வி இழப்புகளை உடனடியாக சரி செய்யாவிட்டால், எதிர்கால இந்தியா 400 பில்லியன் அமெரிக்க டாலர் இழக்க நேரிடும் என்றும் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, மிகத் தீவிரமாய் இருக்கும்  பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் இந்த பாதிப்பை மேலும் சிக்கலாக்குகின்றன. ஏழை மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாணாக்கர்கள் குறிப்பாக மாணவிகள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் ஒரு சில மாதங்களில் நாட்டின் அநேக மாநிலங்களில் அடுத்த கல்வியாண்டு  தொடங்கயிருக்கிறது. ஆண்டு தொடக்கத்திலேயே பள்ளிகுழந்தைகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் முறையான திட்டம் வகுப்பது அவசியமானதாக உள்ளது. மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பது, கற்றல் திறனை அதிகரிப்பது போன்ற விசயங்கள் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்குமே மிகப்பெரிய சவாலாக இருக்கக்கூடும்.

காலை சிற்றுண்டி திட்டமும், கற்றல் திறனும்:  கல்வித் திறனை மேம்படுத்துவது தொடர்பான பார்வைகள் கருத்தியல் ரீதியாக  மாறுபடுகின்றன. பள்ளிக்கல்வியில்  அரசின் தலையீட்டைக் குறைத்துக் கொண்டு நடைமுறைகளை எளிதாக்குவது, பள்ளிக் கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்குவது, ஆசிரியர்-மாணவர் எண்ணிக்கை விகிதத்தை அதிகரிப்பது, தரமான கல்வி பாடத் திட்டங்களைத் தயாரிப்பது உள்ளிட்ட திட்டங்களை ஒருசாரார் முன்னெடுக்கின்றனர். உதாரணமாக, தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்களில் பலருக்கும் 2ஆம் வகுப்பு புத்தகத்தை வாசிக்கும் திறனில்லை  என்று ASER ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மதிய உணவுத் திட்டம், இலவசதி திட்டங்கள், இடஒதுக்கீடு மாணவர்களின் கற்றல் திறன்களை அதிகரிக்காது. இதற்கு, நிதியை ஒதுக்குவதற்கு பதிலாக பள்ளி நவீனமாயமாக்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மறுபுறம், மாணவர்களின் கல்வியோடு சேர்ந்த வாழ்ககை சூழலை அடிப்படையாக கொண்ட திட்டங்களை கல்வியாளர்கள் முன்னெடுக்கின்றனர். பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம், இடஒதுக்கீடு,  மிதிவண்டி, மடிக்கணனி போன்ற இலவசத் திட்டங்கள் இதில் அடங்கும்.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (என்எஃப்எச்எஸ் ) 5-ன் 2019-21 ஆண்டின் முடிவுகளின் படி, தமிழகத்தில் 25 சதவீத குழந்தைகள் இயல்பான எடையை விட குறைவாக உள்ளனர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், வளர்ச்சி குறைபாடுள்ளவர்களின்  விகிதம்  25 சதவீதமாகவும் ,நோய்ச்  சக்தி குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை 14.6 ஆகவும் உள்ளது.

அதேபோன்று, இரத்த சோகையின் பாதிப்பு  ஆண்களில் 25.0 சதவீதம் (15-49 வயது) மற்றும் பெண்களில் 57.0 சதவீதம் (15-49 வயது), வளரிளம் ஆண்களில் 31.1 சதவீதம் (15-19 வயது), வளரிளம் இளம்பெண்களில் 59.1 சதவீதம், கர்ப்பிணிப் பெண்களில் (15-49 வயது) 52.2 சதவீதம் மற்றும் குழந்தைகளில் (6-59 மாதங்கள்) 67.1 சதவீதமாக உள்ளது.

எனவே,  சராசரியாக அரசுப் பள்ளிகளில் நுழையும் போது நான்கில் ஒரு மாணவர் வளர்ச்சி குறைபாடு கொண்டவராகவும், 2ல் ஒரு மாணவர் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவராக உள்ளார். சுவர் இருந்தால் சித்தரம் என்பதற்கு இணங்க, மாணவர்களின் உடல்நலத்தையும், கல்வி திறனையும் ஒருங்கே மேம்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் எண்ணறிவு, எழுத்தறிவு பெறுவதில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

அந்த வகையில், தமிழக அரசு காலைச்  சிற்றூண்டி திட்டம் மாணவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. பொதுவாக, காலை சிற்றுண்டி மூளையின் அறிவார்ந்த செயல்களை அதிகப்படுத்தும் என்றும் தரவுகள் கூறுகின்றன. 

உடல் வளர்ச்சிக்கும், அறிவார்ந்த செயல்பாடுகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக Indian Human Development Survey தெரிவிக்கிறது.


குழந்தைகளுக்கு காலை உணவு செய்யும் நேரம் மிச்சமாகுவதால், நகர்ப்புற பெண்கள் பணிக்கு செல்லும் (Female Labour Force) எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இது, மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் நேர்மறையான தாக்கத்தை  ஏற்படுத்தும்.  

மாணவர்- ஆசிரியர் எண்ணிக்கை விகிதத்துக்கும்- கற்றல் திறனுக்கும் நேரடி தொடர்பில்லை என்று இந்திய பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


 

எனவே, கல்வி உணவுத் திட்டங்களும், இலவசத்  திட்டங்களும் தான் பிரச்னையா? என்ற கேள்விக்குப் பதிலாக, இதுபோன்ற திட்டங்கள் இருந்த போதும் கற்றல் திறன்கல் ஏன்  எதிர்பார்த்த அளவு அதிகரிக்க வில்லை? என்ற கேள்விக்கான  பதிலில் தான் நமது மாணவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது.
Published by:Salanraj R
First published:

Tags: Education, MK Stalin

அடுத்த செய்தி