முகப்பு /செய்தி /செய்தி விளக்கம் / உளவு பலூன் என்றால் என்ன... உளவு பார்க்க ஏன் பலூன்கள்?.. அனைத்து விபரங்களும் இங்கே!

உளவு பலூன் என்றால் என்ன... உளவு பார்க்க ஏன் பலூன்கள்?.. அனைத்து விபரங்களும் இங்கே!

உளவு பலூன்கள்

உளவு பலூன்கள்

Spy balloons | உளவு பலூன்கள் புதியவை அல்ல. 1794 இல் பிரெஞ்சு புரட்சி நடைபெறும் போது  ஆஸ்திரிய மற்றும் டச்சு துருப்புக்களுக்கு எதிரான ஃப்ளூரஸ் போரில் உளவு பலூன்களின் முதல் பயன்படுத்தபட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

அமெரிக்க விமான தளத்தின் மீது சீனாவின் பெரிய உளவு பலூன் ஒன்று பறந்து வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு அதை சுட்டு வீழ்த்த திட்டமிடப்பட்டது. ஆனால் அதில் இருந்து வெளியேறும் சிதறல் பொருட்கள் அதற்கு கீழே உள்ள நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கு  ஆபத்தை விளைவிக்கும் என்று அதை கைவிட நினைத்தனர். இறுதியாக  அதை போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தினர்.

இந்நிலையில் அமெரிக்கா மீது பறந்த உளவு பலூன் பற்றியும் அது எப்படி செயல்படும், இப்படியான பலூன்கள் பறப்பது இது தான் முதல் முறையா அல்லது இதற்கு முன்னர் வரலாற்று பக்கங்களில் இப்படியான சம்பவங்கள் நடந்துள்ளதா என்று பார்போம்.

உளவு பலூன்கள் என்றால் என்ன?

ஒரு உளவு பலூன் என்பது குறைந்த செலவில் கிடைக்கும் உளவு சாதனம். ஒரு பலூனின் அடியில் ஒரு கேமராவை கட்டிவிட்டு  காற்றின் ஓட்டத்தில் அதை மிதக்கவிட்டுவிடுவர். ஹீலியம் அடைக்கப்பட்ட பலூன்கள் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படும். ஹீலியம் அடர்த்தி குறைவானது என்பதால் எளிதாக உயரத்திற்கு போய்விடும். அழகாக வானில் மிதக்கும். அதில் உள்ள உபகரணம் மூலம் அது பறக்கும் இடத்தை உளவு பார்க்கும். உயரத்தில் பறப்பதால் அதன் உபகரணங்கள் சூரிய சக்தியை கொண்டு  இயங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் பலூன்களில் ரேடார் கருவியை கூட இணைத்திருப்பர்.

எதற்கான பயன்படும்?

உளவு என்றாலே ஒரு நபரையோ அல்லது இடத்தையோ அதன் உரிமையாளருக்கு தெரியாமல் நோட்டம் விடுவது தான். அதை போலத்தான் இதுவும். ஒரு நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மற்றொரு நாடு ரகசியமாக தெரிந்துகொள்ள இந்த வகையான உளவு பலூன் உத்திகளை பயன்படுத்துகின்றனர். இது பறக்கும் குறிப்பிட்ட இடத்தின் தரவுகளை பொறுமையாக கவனித்து சேமித்து அதை உளவு பார்ப்பவருக்கு தெரியப்படுத்தும்.

உளவு பார்க்க ஏன் பலூன்கள்?

ஒரு நாட்டின் நடவடிக்கையை கவனிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. பெரிய நிலப்பரப்பை கவனிக்க வேண்டும். அதே நேரம்  துல்லியமாக கவனிக்க வேண்டும் என்றால் அதற்கு முதன்மையாக செயற்கை கோள்களை தான் பயன்படுத்துவார்கள். ஆனால் அதை ஏவுவதற்கு சில நூறு கோடிகள்  செலவாகும். அதுவே உளவு பலூன்கள் என்றால் செலவு குறைவு. அதே நேரத்தில் பரந்த நிலப்பரப்பை அருகில் இருந்து ஸ்கேன் செய்யும் திறன் மற்றும் இலக்கு பகுதியில் அதிக நேரம் செலவிடும் திறன் கொண்டிருக்கும்.

எவ்வளவு உயரத்தில் பறக்கும்?

சாதாரண வணிக வகை விமானங்கள் 45,000 அடி உயரம் வரை அதிகபட்சம் பறக்கும். போர் விமானங்கள், சிறப்பு விமானங்கள் எல்லாம் 65,000 அடி வரை பறக்கும். ஆனால் இந்த உளவு பலூன் சாதாரணமாகவே  80,000 அடி முதல் 1,20,000 அடி வரை பறக்கிறது. அதனால் இது விமான போக்குவரத்திற்கு இடையில் இல்லாமல் அதற்கு மேலே நின்று நோட்டம் விடும்.

இது தான் முதல் முறையா?

உளவு பலூன்கள் புதியவை அல்ல. 1794 இல் பிரெஞ்சு புரட்சி நடைபெறும் போது  ஆஸ்திரிய மற்றும் டச்சு துருப்புக்களுக்கு எதிரான ஃப்ளூரஸ் போரில்  உளவு பலூன்கள் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன. அதேபோல 1860 களில் அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது, ​​ஹாட் ஏர் பலூன்களில், பைனாகுலர்களை வைத்துகொண்டு, கூட்டமைப்பு நடவடிக்கை பற்றிய தகவல்களை தொலைவில் உள்ள ஐக்கிய கட்சியினருக்கு மார்ஸ் கோட் அல்லது துணுக்கு சீட்டு மூலம் உளவு அனுப்பியுள்ளனர்.

இரண்டாம் உலகப் போரின் போது ​காற்று நீரோட்டங்களில் மிதக்க வடிவமைக்கப்பட்ட பலூன்களைப் பயன்படுத்தி, ஜப்பானிய இராணுவம் அமெரிக்க எல்லைக்குள்  குண்டுகளை வீச முயன்றது. இது இராணுவ இலக்குகளை சேதப்படுத்தவில்லை என்றாலும்,  பொதுமக்களை கொன்றது.

இரண்டாம் உலகப் போருக்குப் போர் முடிவடைந்தவுடன், அமெரிக்கா - ரஷ்யா இடையே பனிப்போர் மூண்டது. அப்போது ரஷ்யாவை உளவு பார்க்க அமெரிக்க இராணுவம் 'ப்ராஜெக்ட் ஜெனெட்ரிக்ஸ்' எனப்படும் பெரிய அளவிலான  உளவு பலூன் ஆராய்ச்சியைத்  தொடங்கியது. இந்த  திட்டம் மூலம் 1950 களில் சோவியத் பிளாக் பிரதேசத்தில் புகைப்பட பலூன்களை பறக்கவிட்டது.

அதே போலத்தான் இப்போது சீனாவின் பலூன் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் மொன்டானாவில் உள்ள விமான படை தளவாடத்தின் மீது பறந்து அதன் ராணுவ தகவல்களை உளவு பார்த்துள்ளது. அதன் பாதுகாப்பு நிலை கருதி அதை சுட்டு வீழ்த்தியுள்ளனர். அமெரிக்க  வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் சீனாவிற்கு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு சீனாவில் உளவு பார்க்கும் பலூன் பறந்ததும் அதை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதும் என்ன விளைவுகளை ஏற்படுத்த இருக்கிறது என்பது அடுத்த வாரங்களில் தெரியும்.

First published:

Tags: China