ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

பெண்களே, பணியிடத்தில் உங்களுக்கு பாலியல் சீண்டலா! நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய சட்டங்கள்?

பெண்களே, பணியிடத்தில் உங்களுக்கு பாலியல் சீண்டலா! நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய சட்டங்கள்?

ஆபாசப் படங்களை, எழுத்துகளை பெண்களிடம் காண்பிப்பது இவற்றில் ஏதேனும் ஒன்றும் பணியிடத்தில், பெண்கள் சந்திக்க நேரிட்டால், அதற்குப் புகார் தெரிவிக்கலாம். 

ஆபாசப் படங்களை, எழுத்துகளை பெண்களிடம் காண்பிப்பது இவற்றில் ஏதேனும் ஒன்றும் பணியிடத்தில், பெண்கள் சந்திக்க நேரிட்டால், அதற்குப் புகார் தெரிவிக்கலாம். 

ஆபாசப் படங்களை, எழுத்துகளை பெண்களிடம் காண்பிப்பது இவற்றில் ஏதேனும் ஒன்றும் பணியிடத்தில், பெண்கள் சந்திக்க நேரிட்டால், அதற்குப் புகார் தெரிவிக்கலாம். 

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

2012-ல் நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி வெளிப்படையான விவாதத்தைக் கிளப்பியது. அதன்பின் பல பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி விவாதங்களை உருவாக்கினாலும், சில நாட்களுக்கு பின் அவை யாராலும் நினைவில் வைத்திருக்கப்படுவதில்லை. அப்படி ஒரு விஷயமாக எதிரொலித்ததுதான் metoo... MeToo, பெண்களுக்கு எதிராக பணியிடங்களில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாகப் பேச உதவிய ஹேஷ்டேக். இப்போதும் நீங்கள் உங்கள் சமூக வலைத்தளத்தில் தேடினால், MeToo என்ற ஹேஷ்டேக் உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் டிரெண்டாகிக் கொண்டு இருக்கும். 

பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படும் பெண்கள், பொதுவெளியில் வெளிப்படையாகப் பேசும் மனோபாவம், தற்போது சற்று முன்னேறியிருக்கிறது என்றே சொல்லவேண்டும். அதேபோல், பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் குற்றவாளிகளும் தங்களுக்குத் தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் ஏற்படும் வகையில், பல வரைமுறைகளும் தற்போது நடைமுறையில் உள்ளது. இதுவே, 80 மற்றும் 90களில் இதே நிலை இருந்ததில்லை. வேலைக்குச் செல்லும், பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்களை வெளியில் பேசுவதற்கே அச்சப்பட்டு, ஏற்றுக்கொள்வது அல்லது வேலையை விட்டு நின்றுவிடுவது போன்றவைதான் அரங்கேறியுள்ளன. 

சில வருடங்களுக்கு முன் டிரெண்டான metoo ஹேஷ்டேக்

1992-ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்தில், கிராமம் ஒன்றில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர், சில ஆண்களால் கொடூர பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுசாதிய ரீதியிலான தாக்குதலாகவும் இருந்தது. இது குறித்து, அந்த சமூக செயற்பாட்டாளர் புகார் தெரிவித்திருந்தார். வழக்கு விசாரணையில் 5 முறை நீதிபதிகள் மாற்றப்பட்டதுடன், சில  சாதிய அடிப்படையிலான காரணங்களைச் சுட்டிக்காட்டி குற்றவாளியை விடுவித்தனர். 

இதனைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் மற்றும் டில்லியைச் சேர்ந்த அரசு சாரா அமைப்புகளிலிருந்து “விஷாகா” கூட்டுத்தளத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில் சமூக செயற்பாட்டாளருக்கு நிகழ்ந்த பாலியல் தாக்குதலும், சுட்டிக்காட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.எஸ்.வர்மா, பணி செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், விஷாகா என்ற வழிகாட்டுதல் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். சட்டத்தின் கீழ் பல விவரங்கள் வழிவகை செய்யப்பட்டது. 

அதன்படி, 

 • அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும், விஷாகா கமிட்டி அமைத்திருக்க வேண்டும். 
 • கமிட்டியின் தலைவராகப் பெண் அதிகாரி நியமிக்கப்படவேண்டும். 
 • கமிட்டியின் மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பெண்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 
 • கமிட்டியில் நியமிக்கப்படும் ஒரு உறுப்பினர், பெண்களுக்கான தன்னார்வ தொண்டு அமைப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 
 • கமிட்டி ஆண்டுதோறும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிக்கையைத் தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். 

என்று குழுவைப்பற்றிய விரிவான விவரங்கள் வெளியிடப்பட்டது. அத்துடன், எது? எது? பாலியல் குற்றங்கள் என்பதையும் உச்சநீதிமன்றம் வரைமுறை செய்தது. 

பணியிடத்தில் பாலியல் சீண்டல்கள்

 • பெண் ஊழியரைத் தொட்டுப் பேசுவது
 • அவரை பாலியல் உறவுக்கு அழைப்பது
 • அதிகாரத்தை வைத்து பாலியல் ரீதியான தாக்குதலில் ஈடுபடுவது. 
 • பெண் ஊழியர்களிடம், பாலியல் ரீதியிலான வார்த்தைகளை பயன்படுத்துவது 
 • ஆபாசப் படங்களைக் காட்டுவது மற்றும் எழுத்துகள் மூலமாகப் பரிமாறுவது

ஆகியவை பாலியல் குற்றங்களாக வரைமுறைக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்ப்பே வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகப் பார்க்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கே இருக்கிறது. இந்த சட்டம்தான்,  நீதிமன்றமே சட்டமியற்றி செயல்படுத்த உத்தரவிட்ட முதல் சட்டம் என்று நீதிபதி சந்துரு பத்திரிகை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய அரசு பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்றும் வரை, விஷாகா கமிட்டியின் நடைமுறை தொடரும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது. 

ஆனால் சட்டம் இயற்றப்பட்டுச் சரியாக அடுத்த ஆண்டே, அதாவது 1998-ம் ஆண்டே சென்னையில், கல்லூரி மாணவி சரிகா என்பவர், சில ஆண்களால் துரத்தப்பட்டார். அதில், நிலைகுலைந்த சரிகா, கீழே விழுந்து உயிரிழந்தார். எனவே, விஷா கமிட்டி என்பது பணியிடங்களில் பெண்களைப் பாதுகாக்கிறதே தவிர, பொது இடத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. எனவே அப்போதைய தமிழக அரசு சார்பாக,‘தமிழ்நாடு பொதுவெளிகளில் பெண்களைச் சீண்டுதலைத் தடுக்கும் சட்டம்’ சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது. 

இவை அனைத்தும் கடந்து, 16 ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பின், 2013-ம் ஆண்டு “பெண்களுக்குப் பணியிடங்களில் பாலியல் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம்” கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, பணியிடங்கள் என்பதற்கான வரையறை கொண்டுவரப்பட்டது. அத்துடன், உள் விசாரணைக் குழு அமைப்புக்கான வரையறை எல்லாம் இச்சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது. மேலும், உள் விசாரணைக் குழுவின் முடிவு இறுதி முடிவு அல்ல என்றும் அந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான அதிகாரம் இருப்பதாகவும் வரையறை செய்யப்பட்டது. குழு விசாரணையின் போது புகார்தாரருக்கும், குற்றம்சாட்டப்பட்டவருக்கும் இடையே சமாதானம் செய்யும் வாய்ப்பு வழங்கப்படவும், இச்சட்டம் வழிவகுத்தது. 

16 வருடக் காத்திருப்பிற்குப் பின் நிறைவேற்றப்பட்ட சட்டம்

முக்கியமாக, பெண்கள் ஆண்கள் மீது பொய் புகார் தெரிவித்திருந்ததாக நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் சட்டம் வழிவகை செய்ததுடன், பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய புகாரை 90 நாட்களுக்குள் பதிவு செய்யவும், நடவடிக்கை எடுப்பதற்கான கால அவகாசத்தையும் வழிவகை செய்தது. 

அரசால் இயற்றப்பட்ட பெண்களுக்குப் பணியிடங்களில் பாலியல் கொடுமைகளைத் தடுக்கும் சட்டத்திலும், உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டத்தைப் போலவே எவை எவை பாலியல் சீண்டல்கள் என்று வரைமுறை அறிவிக்கப்பட்டது. அதில், 

 • பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குதல்
 • பாலியல் ரீதியில் பார்த்தல்
 • பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகக் கூறி, வேலைவாய்ப்புகளுக்காக மறைமுகமாகவே, நேரடியாகவோ வாக்குறுதி வழங்குதல் அல்லது மிரட்டல் விடுத்தல்
 • பெண்களை வார்த்தைகளால் பாலியல் ரீதியில் தாக்குதல்
 • ஆபாசப் படங்களை, எழுத்துகளை பெண்களிடம் காண்பிப்பது இவற்றில் ஏதேனும் ஒன்றும் பணியிடத்தில், பெண்கள் சந்திக்க நேரிட்டால், அதற்குப் புகார் தெரிவிக்கலாம். 

நிறுவனங்கள், தங்கள் தரப்பில் செய்ய வேண்டியவை 

 • 10க்கும் அதிகமானோரைக் கொண்டும் இயங்கும் நிறுவனங்கள்( பெண் பணியாளர்கள் இடம்பிடித்திருந்தால்) கட்டாயம் விஷாகா மாதிரியான குழு அமைக்கப்பட வேண்டும். 
 • பணியிடத்தில் மூன்றாவது நபர் வருவதைத் தடுக்க வேண்டும்.
 • பாலியல் துன்புறுத்தல்களுக்கான தண்டனைகளை, பணியாளர்களின் பார்வையில் தெரியும்படி ஒட்ட வேண்டும். 
 • அலுவலகத்தில் செயல்படும் புகார் குழு பற்றி, வெளிப்படையாகப் பொதுவெளியில் எழுதி வைக்க வேண்டும். 
 • பாலியல் துன்புறுத்தல் பணிவிதிகளின் கீழ் ஒரு தவறான நடவடிக்கையாகக் கருதப்பட்டு அதற்கான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்த சட்டம் நிரந்தரப் பணியாளர்கள், தற்காலிகப் பணியாளர்கள், தினக்கூலி வேலை செய்பவர்கள், பணியில் பயில்வதற்காக நியமிக்கப்பட்டவர்கள் என்று அனைத்து பெண்களுக்கும் பொருந்தும். பாலியல் ரீதியிலான பிரச்சனைகளுக்குப் புகார் அளித்தால், அவர்களின் தகவல்கள் ரகசியமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இது அந்தந்த நிறுவனத்தில் இருக்கும் குழுக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயமாக சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Abisha
First published:

Tags: Sexual abuse, Sexual harrasment, Sexually harassed women, Women, Work Place