ஆளுநர், துணை நிலை ஆளுநர் வித்தியாசம் என்ன? அதிகாரங்கள் என்ன?

ஆளுநராக பதவியேற்கும் தமிழிசை(மாதிரிப் படம்)

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி இடையேயான அதிகார மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநருக்கான அதிகாரங்கள் குறித்து விரிவாக அறியலாம்.

 • Share this:
  இந்தியாவில் டெல்லி, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபார் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு மட்டுமே துணை நிலை ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். துணை நிலை ஆளுநர்கள் மற்றும் மாநில ஆளுநர்கள் பெரும்பாலும் சமமான அதிகாரம் கொண்டவர்களாகவே உள்ளனர்.

  முதலமைச்சரை நியமித்து அவர்களது ஆலோசனைப்படி அமைச்சர்களை நியமிப்பது, மாநில தேர்தல் ஆணையர்கள், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை நியமிப்பதோடு, பல்கலைக்கழக வேந்தர்களாகவும் அவர்கள் திகழ்கின்றனர். தேவைப்படும்போது மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டசபையை கலைப்பதோடு, சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறாதபோது அவசர சட்டத்தையும் பிரகடனம் செய்யலாம்.

  தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி சட்டமன்ற உறுப்பினரை பதவி நீக்கம் செய்யலாம். அவர்களின் அனுமதிக்கு பிறகே எந்தவொரு மசோதாவும் சட்டமாகும். சட்ட மசோதாவை நிறுத்தி வைத்து அவர்கள் குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்கலாம். ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்தால் அரசு நிர்வாகத்தை கையாள்வது, மாநில குற்றவாளிகளின் தண்டனையை ஒத்திவைப்பது மற்றும் குறைப்பதற்கான அதிகாரத்தை பெற்றுள்ளனர்.

  எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத போது தனது விருப்பத்தின் பேரில், முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்து பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பை ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் வழங்கலாம். ஆனால், அமைச்சரவைக் குழுவின் ஆலோசனைப்படியே செயல்பட வேண்டும் என்ற விதி எல்லா ஆளுநரின் அதிகாரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது.


  அதேசமயம், டெல்லி துணை நிலை ஆளுநரின் அதிகாரம் மட்டும் மாறுபட்டுள்ளது. அங்கு நிலம், காவல்துறை மற்றும் பொது அமைதி ஆகிய துறைகளில் மத்திய அரசின் பிரதிநிதியாக, அத்துறைகளின் மீது தனது அதிகாரத்தை செலுத்து முடியும் என்பதால், டெல்லி துணை நிலை ஆளுநர் கூடுதல் அதிகாரம் படைத்தவராக செயல்படுகிறார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: