• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வதற்கு மத்திய, மாநில அரசின் வரிவிதிப்புதான் காரணமா?

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வதற்கு மத்திய, மாநில அரசின் வரிவிதிப்புதான் காரணமா?

பெட்ரோல் நிலையம்

பெட்ரோல் நிலையம்

பெட்ரோல் டீசல் எரிபொருளின் விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. அதுமட்டுமல்லாது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் தனித்தனியாக அவற்றிக்கு வரி விதிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத்தான், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்கிறதா?

  • Share this:
    ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் கடந்த புதன்கிழமை (பிப்.17) பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 பைசா அதிகரித்து ரூ.100.13 ஆக உயர்த்தப்பட்டது. இதையடுத்து வழக்கமான பெட்ரோலின் சில்லறை விலை நாடு முழுவதும் முதல் முறையாக மூன்று இலக்கங்களை எட்டியது. அதே நேரத்தில் டீசல் 27 பைசா அதிகரித்து ரூ.92.13 ஆக உயர்ந்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இணையதளத்தில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 9 நாட்களாக தொடர் விலை உயர்வினை சந்தித்து வருகிறது.

    பெட்ரோல் டீசல் எரிபொருளின் விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. அதுமட்டுமல்லாது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் தனித்தனியாக அவற்றிக்கு வரி விதிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத்தான், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்கிறதா? இல்லை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு தான் காரணமா? ஏன் இவ்வளவு விலை உயர்ந்தது? என்பதை இங்கு காண்போம்.

    பெட்ரோல் டீசல் விலை ஏன் உயர்கிறது?

    கச்சா எண்ணெய் விலை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை சுமார் 50%-திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஜனவரி மாத நிலவரப்படி கச்சா எண்ணையின் விலை ஒரு பேரலுக்கு ரூ.63.7 டாலர்களாக உயர்ந்திருந்தது. கடந்த 2020 அக்டோபரில் ஒரு பேரலின் விலை 40.1 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. பிற நாடுகளில் பெட்ரோல் டீசலின் விலை தொற்றுநோய்க்கு முன்பு இருந்த விலையை கூட இன்னும் எட்டவில்லை என்றாலும், இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகின்றன.

    உலகளாவிய கச்சா எண்ணெய் விலை



    கொரோனா தொற்று சமயங்களில் கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்து வந்ததால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதன் விலையில் சரிவு ஏற்பட்டது. இருப்பினும், சமீபகாலமாக தடுப்பூசிகள் விநியோகம் ஆரம்பித்துள்ளதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 40 டாலரிலிருந்து 63.49 டாலராக உயர்ந்துள்ளது. அதேசமயம், எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒரு முக்கிய நாடான சவுதி அரேபியா பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஒரு நாளைக்கு 8.125 மில்லியன் பேரல்களாக அதன் உற்பத்தியைக் அதிகரிப்பதற்காக ஒரு நாளைக்கு 1 மில்லியன் பேரல்கள் கூடுதல் உற்பத்தி செய்ய முடிவெடுத்தது.

    இதன் காரணமாகவும் எண்ணெய் விலை அதிகரித்திருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்தப் போதும் இப்போதைய பெட்ரோல் டீசல் விலையை விட குறைவாகவே இருந்தது. ஆனால் இப்போதைய பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்புக்கு மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்பு மட்டுமே காரணம் என்று துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.

    மத்திய மற்றும் மாநிலங்களின் வரி விதிப்பு:



    மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் கலால் வரி மற்றும் விற்பனை வரிகளை உயர்த்தியுள்ளன. இது கூட பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு, டெல்லியில், மாநில மற்றும் மத்திய வரி பெட்ரோலின் அடிப்படை விலையில் 180% -ஆகவும் மற்றும் டீசலின் அடிப்படை விலையில் 141% -ஆகவும் உள்ளது.

    மத்திய அரசின் கலால் வரி உயர்வு:

    கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.19.98- ஆக இருந்தது. அதுவே தற்போது, பெட்ரோலுக்கு விதிக்கப்படும் காலால் வரி லிட்டருக்கு ரூ.32.98- ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் டீசலுக்கு விதிக்கப்பட்ட கலால் வரி லிட்டருக்கு ரூ.15.83 ஆக இருந்தது. அதுவே, இப்போது லிட்டருக்கு ரூ.31.83 -ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பணவீக்கத்தின் தாக்கம்:

    அதிகரித்து வரும் எரிபொருள் பணவீக்கம், உணவு பணவீக்கத்தின் வீழ்ச்சியால் ஈடுசெய்யப்படுகிறது. ஆனால் பயணத்தில் அதிக செலவு செய்யும் மக்கள் ஏற்கனவே அதிக எரிபொருள் விலையின் சுமையை உணர்கிறார்கள். இந்த விலை உயர்வு கிராமப்புறங்களில் உள்ள பலவீனமான விவசாயிகளை பாதிக்கலாம். ஏனெனில் அவர்கள் டீசல் மூலம் இயங்கும் நீர்ப்பாசன முறைகளை அதிகம் நம்ப வேண்டியிருக்கும். அதேபோல பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் இருப்பதாக மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: