தாய்ப்பால் அருந்திய, 111 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை என்று உத்தர பிரதேச மாநிலம், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?
உத்தர பிரதேசம், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் லக்னோவைச் சேர்ந்த குயின் மேரி மருத்துவமனை சார்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 130 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அந்த பெண்களின் உடலில், பூச்சிக்கொல்லி மருந்தில் உள்ள பல இரசாயனங்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன், கருவுற்று குழந்தை பெற்றுக்கொண்ட தாய்ப்பால் மட்டும் எடுத்துவந்த 111 குழந்தைகள் கடந்த ஆண்டு (2022-ம் ஆண்டு) பலியாகியுள்ளனர். அதற்கு, அந்த பெண்களின் உடலிலிருந்த இரசாயனம்தான் காரணம் என்று குயின் மேரி கல்லூரி குறிப்பிட்டுள்ளது.
அதிலும் முக்கியமான சைவ உணவு சாப்பிட்ட பெண்களின் தாய்ப்பாலிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை விட, அசைவ உணவு சாப்பிட்ட பெண்களின் தாய்ப்பாலிலிருந்த பூச்சிக்கொல்லி இரசாயனத்தின் அளவு அதிகமாக இருந்துள்ளது. இதுகுறித்து ஆய்வாளர்கள் தரப்பில் சொல்லப்பட்ட அறிக்கையில், “பல்வேறு விதமான, பூச்சிக்கொல்லி மருந்துகள், பயிர்களுக்குப் போடப்படுகிறது. அதை விலங்குகள் உண்ணுகின்றன. அத்துடன் விலங்கள் வளர்ச்சிக்காக சில வகை பூச்சிகொல்லி மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. அது, மாமிசம் உண்ணும் தாய்மார்களுக்கு இரத்தத்தில் அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கக் காரணமாகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், உணவின் மூலம் தாய்மார்களின் உடலில், பூச்சிக்கொல்லி மருந்து கடத்தப்பட்ட அளவு வேறுபட்டாலும், பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கம் புதிதாகப் பிறந்த குழந்தையைப் பெருமளவில் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பல்வேறு ஆய்வுகளில்
தாய்மார்களின் உடலில் இருக்கும் கன உலோகங்களான, பாலிகுளோரினேட்டட் பைபினைஸ் உள்ளிட்ட பூச்சிக்கொல்லிகள் குழந்தை பிறப்பு பிரச்சனையை உருவாக்கும் என்று sciencedirect.com (page no:908) வெளியிடப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாய்மார்களின் உடலில் எடுத்துக்கொள்ளப்படும் இரசாயனம், சிறுநீர், இரத்தம், தொப்புள்கொடி இரத்தம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் எங்கும் பரவி, அது குழந்தையின் உடலுக்குக் கடத்தப்படுகிறது என்று ஆய்வு குறித்து விவரித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? இன்டர்நேசனல் ஜேர்னல ஆஃப் கேன்சர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வில், 40 சதவீதம் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளையில் கட்டி ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட ஆய்வில், பூச்சிக்கொல்லி மருந்தைக் கட்டுப்படுத்தும் பிரச்சனைக்குரியது என்று தெரியவந்துள்ளது.
கிளைபோசேட் என்ற பூச்சிக்கொல்லி மருந்திருக்கும், பொருளை பயன்படுத்துவது, கருக்கலைப்பிற்கான அபாயத்தை உருவாக்குவாக்கும் Environmental Health Perspectives ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
பல பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, நரம்பியல் தொடர்பான பிரச்சனைகளை உருவாக்குவதாக, Annuals of Epidemiology ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றன.
இந்த தகவல்களை கொண்டு, தாய்ப்பால் என்பது ஒரு குழந்தைக்கு எவ்வளவு அவசியமாகிறது? தாய்ப்பாலில் பூச்சிக்கொல்லி இரசாயனம் இருந்தால் என்ன பிரச்சனை ஏற்படும் என்பது பற்றி மருத்துவர் ஜெயஸ்ரீ சர்மா அவர்களிடம் பேசியிருந்தோம்.
உலகத்தில் பல உயிரினங்கள் இருக்கின்றன. மற்ற எல்லா உயிரினங்களையும் விட, மனித குழந்தைகள் மிக பலவீனமாகவும், இயலாமையுடனுமேதான் இருக்கின்றன. எல்லா விலங்குகளும் பிறந்ததும் உணவு தேட துவங்கும். ஆனால் மனிதர்கள் மட்டும், தாய்ப்பால் கொடுத்தால் மட்டும்தான் உயிருடனே இருக்க முடியும். ஒரு மனிதன் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் தாய்ப்பால் கட்டாயம் வேண்டும்.
குறைந்த பட்சம் தாய் 9 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம். உலக சுகாதார நிறுவனம் 2 வயது வரை ஒரு தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்று தெரிவித்திருந்தது. 6 மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், அதன்பின் மற்ற உணவுகளுடன் தாய்பால் கொடுக்கலாம்.
தாய்ப்பாலில் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதற்கு, அவர்கள் எடுத்துக்கொண்ட உணவுதான் காரணமாகிறது. கடந்த ஆண்டில் நுண்நெகிழி நஞ்சுக்கொடியில் கலந்திருப்பதை ஆராய்ச்சியில் கண்டறிந்தனர். ஏன் என்றால், உண்ணக்கூடிய உணவு மற்றும் மேக்கப் பொருட்களில் மைக்ரோ பிளாஸ்டிக் அதிக அளவில் இருக்கிறது. நாம் உண்ணும் உணவில் எவ்வளவு சேர்க்கை பொருட்களை கலக்கிறோமோ, அந்த அளவு அது தாய்ப்பாலில் கலப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ஒரு பாரசிட்டமல் மாத்திரை எடுத்துக்கொண்டாலும், அது தாய்ப்பாலில் சிறிய அளவில் வரத்தான் செய்யும். ஆனால், அது குழந்தையை பாதிக்கிற அளவில் இருப்பதில்லை.
இதுபோன்ற சூழலில் இருந்து முற்றிலும் தப்பிக்க முடியாது. முதலில், குடிக்கும் தண்ணீர் என்பதே கிணற்றில் கிடைப்பதில்லை. குடிக்கும் நீரே பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்தே ஆரம்பிக்கிறது. அந்த தண்ணீர், கெட்டுபோகாமல் இருக்க அதில் பூச்சிக்கொல்லி மருந்து சேர்க்கப்படுகிறது. குடிநீர் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வதில், 50 சதவீதம் இந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். அதேபோல எல்ல காய்கறிகளிலும், பூச்சிக்கொல்லி மருந்து சேர்க்கப்படுகிறது. அதுபோன்ற காய்கறிகளை தவிர்ப்பது நல்லது. முக்கியமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், குறிப்பாக ஒரு உணவு பல நாட்கள் பத்திரப்படுத்த வேண்டும் என்றாலே, அதில் பூச்சிக்கொல்லி மருந்து நிச்சயம் இருக்கும். பிஸ்கட், சிப்ஸ் போன்ற உணவுகளும் நீண்ட நாட்கள் இருக்க அதிலும் பல இரசாயனங்கள் சேரக்கப்பட்டிருக்கும். இது பாதிப்பை உருவாக்கும்.
தாய்ப்பாலின் சிறப்பு என்பது, தாய் என்ன உணவு எடுத்துக்கொண்டாலும், அது தாய்பாலின் மூலம் குழந்தையை பாதிப்பதில்லை. அது இயற்கையாக உள்ள தடுப்பு அரண். அதையும், தாண்டி பூச்சிக்கொல்லி மருந்து தாய்ப்பாலில் இருந்து குழந்தைக்கு செல்கிறது என்றால், அது குழந்தையின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். அது குழந்தையில் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம், எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படலாம். வயிறு, குடல் போன்ற உறுப்புகளில் புண் ஏற்படலாம். அதில் கலக்கப்பட்டிருக்கும் இரசாயனம், என்ன மாதிரியானது என்பதன் பொறுத்து பாதிப்பை ஏற்படுத்தலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Breast feeding diet, Breast milk, Breastfeeding, Children, Women