முகப்பு /செய்தி /செய்தி விளக்கம் / மயில், அணில் உள்ளிட்ட 6 வகை உயிரினங்களை கொல்ல இலங்கை அரசு அனுமதி அளித்தது ஏன்? இது சரியான தீர்வா?

மயில், அணில் உள்ளிட்ட 6 வகை உயிரினங்களை கொல்ல இலங்கை அரசு அனுமதி அளித்தது ஏன்? இது சரியான தீர்வா?

மாதிரி படம்

மாதிரி படம்

இலங்கை அரசு பயிர்களை உண்டு அழிக்கும் 6 உயிரினங்களைக் கொல்ல அனுமதி அளித்துள்ளது.. இந்த விலங்குகளை அழிப்பதால், உணவு சங்கிலி தொடர், பாதிப்படையும் என்று கூறுகின்றனர் விலங்கள் நல ஆர்வலர்கள்.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • inter, Indiasri lankasri lankasri lankasri lankasri lanka

இலங்கையில், சமீப காலத்தில் விலங்குகள் விவசாய நிலத்தை நோக்கிப் படை எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பெருமளவில் விளைபொருட்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் விவசாய துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம், விவசாயிகள் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், தங்கள் பயிர்களை 6 வகையான காட்டுயிர்கள் அழிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

செங்குரங்கு, மயில், குரங்கு, மர அணில் (ராசத வகை அணில்) முள்ளம்பன்றி, காட்டுப் பன்றி ஆகிய விலங்குகள் சேதத்தை ஏற்படுத்துவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விலங்குகளை யார் வேண்டுமானாலும் கொல்லலாம் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். அதோடு இந்த விலங்குகள் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மர அணில்

அமைச்சர் தரப்பில் கூட்டம் ஒன்றில் பேசுகையில், இந்த விலங்குகள் 121 மில்லியன் தேங்காய்களையும், 8 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லையும் வருடத்திற்கு அழிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மெட்ரிக் டன் என்பது 1000 கிலோ கிராம். சாதாரணமாக 1 கிலோ அரிசியைச் சமைத்தால் 7லிருந்து 8 பேர் உண்ண முடியும். 80 லட்சம் கிலோ கிராம் அரிசி எத்தனை பேரின் உணவு என்பதை நாம் கணக்கிட்டுப் பார்க்கலாம்.

இலங்கையின் பொருளாதார சிக்கலும், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடும்!

2021-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இலங்கை மக்கள் தொகை 2.22 கோடி. இலங்கையைப் பொறுத்தவரையில் ஜாதிக்காய், கிராம்பு, ஏலக்காய், தேயிலை, மிளகு, காஃபி உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. 2021-ம் ஆண்டு, விவசாயிகள் அனைவரும் இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசு அறிவுறுத்தியது. அப்போது 30க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் குழு, இயற்கை உரத்திற்குக் குறுகிய நேரத்தில் மாறுவதால் கடும் பொருளாதார சிக்கல் ஏற்படும் என்று எச்சரித்தனர். ஆனால் அதை அப்போது அரசு பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

இழப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்ட விவரம்

தொடர்ந்து உற்பத்தியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்ட துவங்கியது. வேறு வழியில்லாமல், இலங்கை வேறு நாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யத் துவங்கியது. இதனால் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது. அதன் தொடர்ச்சியாகப் பொருளாதார வீழ்ச்சி ஆட்சிக்கு எதிராக மக்களின் போராட்டம் என்று கடும் இன்னலுக்கு ஆளானது இலங்கை.

மீண்டு வரும் இலங்கையில், விவசாயிகளின் சிக்கல்

பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர முயற்சிக்கும், விவசாயிகளுக்கு நிலங்களில் விலங்குகளின் படையெடுப்பால் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். காட்டு விலங்குகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதுதான் இந்த படையெடுப்பிற்கு காரணம் என்று விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

விலங்குகள் ஏன் பயிர்களை அழிக்கின்றன?

விலங்குகள் பெருக்கம் என்பது, அவற்றை வேட்டையாடு விலங்குகளின் அழிவு காரணமாக இருக்கலாம். காடுகளை அழிப்பு, காடுகளில் உணவு தட்டுப்பாடு போன்றவையும் காரணமாக இருக்கலாம் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் போரின்போது காடுகள் அழிக்கப்பட்டதால், விலங்குகள் உணவின்றி இறந்ததும், போரில் நடத்தப்பட்ட தாக்குதலில் அதிக அளவில் விலங்குகள் கொல்லப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.

இலங்கையில் ஆட்சியில் இருக்கும் கூட்டணிக் கட்சியே இலங்கை அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்காமல் உணவு தேடி வரும் விலங்குகளைக் கொல்வதும் அநீதியாகும்” என்று பதிவு செய்துள்ளார்.

அதேபோல் “விலங்குகள் வாழும் காடுகளை அழித்து மனிதர்கள், கட்டிடங்கள் கட்டுவதால், அவை உணவு தேடி ஊருக்குள் வருகின்றன. எனவே காடுகளை அழித்து கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் அரசுத் துறை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இதற்கு முன் விலங்குகளுக்கு எதிரான பிரச்சனைகள்?

2012-ம் ஆண்டில், தெருநாய்கள் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மனிதர்களைக் கடிப்பதால், ஆபத்து ஏற்படுவதாக 3 மில்லியன் நாய்களைக் கொல்ல அப்போதைய அரசு அனுமதி அளித்திருந்தது.

65,610 சதுர கிலோமீட்டர் நீளம் கொண்ட இலங்கையில், 1948 சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் அதிகமான யானைகள் கொல்லப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டில் வெளியான தகவல்படி, இலங்கையில் 7500க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், அவை பெரும் பாதிப்பில் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.

2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், தர்மபிளான் திலக்சன் என்ற புகைப்படக் கலைஞர் ஒலுவில் பாலக்காடு என்ற பகுதியில், குப்பைக் கிடங்கில் யானைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

தர்மபிளான் திலக்சன் எடுத்த புகைப்படங்களிலிருந்து

உலக அளவிலான விலங்குகளின் தாக்குதலும் அரசுகளின் நடவடிக்கையும்

குஜராத்து உள்ளிட்ட இந்தியாவின் சில மாநிலங்களில், வெட்டுக்கிளிகளின் பாதிப்பு அதிகமாக இருந்தது, அப்போது அவற்றை அழிக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்ததைப் பலரும் நினைவில் வைத்திருக்கலாம். அதேபோல் தற்போதய சூழலில், கென்யாவில் சிட்டுக்குருவி போன்று தோற்றமளிக்கும் ஒரு வகை பறவை ஒன்ற விவசாயிகளை ஆட்டிப்படைத்து வருகிறது. குயிலியா என்ற இந்த வகை பறவைகள், விரட்ட விவசாயிகள் பல முறைகளைக் கையாண்டாலும் அவை எதுவும் இதுவரை கைகொடுக்கவில்லை. நாள் ஒன்றுக்கு இருபது லட்சம் பறவைகள், 20 டன் நெற் பயிர்களை உண்டு அழித்து வருகின்றன. அரசு பலமுயற்சிகளை மேற்கொண்டும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் தற்போதும் திணறி வருகின்றது.

அழிக்கப்படும் விலங்குகளால் என்ன பாதிப்பு ஏற்படலாம்?

அணில் காடுகளை விதைப்பவன் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, அணில் எடுத்துச் செல்லும் 75 சதவீத விதைகளை நிலத்தில் மறைத்து வைக்கும் அவற்றை அந்த அணில் மறந்துவிடுவதால், மரமாக முளைக்கிறது. மயில்கள் எலிகள், பாம்புகள் போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்கின்றன. அவற்றை அழிப்பதால்,  எலிகளின் பெருக்கம் அதிகரிக்கலாம், அவற்றாலும் பயிர்கள் அதிக அளவில் பாதிப்படையலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டி காட்டிருக்கின்றனர். இதுபோன்று ஒவ்வொரு விலங்குகளும், உணவு சங்கிலியில் அதன் பங்கை வகிக்கிறது. அதேவேளையில் அவற்றைக் கொல்ல நினைத்தால், அது பின் விளைவுகளை உருவாக்கலாம் என்று, அதேபோல் குரங்கு, அணில், பன்றி, மயில் போன்றவை இறைச்சிக்காகவும், தவறான நோக்கத்துடனும் வேட்டையாடப்படலாம் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

First published:

Tags: Srilanka, Wild Animal