ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

பேரறிவாளன் கைது முதல் விடுதலை வரை..வழக்கு கடந்துவந்த பாதை

பேரறிவாளன் கைது முதல் விடுதலை வரை..வழக்கு கடந்துவந்த பாதை

பேரறிவாளன்

பேரறிவாளன்

Rajiv Gandhi Murder case: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனை விடுவித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் பின்னணி என்ன?

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வந்தார். போரூர் மற்றும் பூந்தமல்லியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று இரவு 10.30 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் சென்றடைந்தார் ராஜீவ் காந்தி. அப்போது இளம்பெண் ஒருவர் ராஜிவ் காந்திக்கு மாலை அணிவித்தார். சில நொடிகளில் அங்கு வெடிகுண்டு வெடித்தது.

  இந்த வெடிகுண்டு வெடிப்பில் ராஜீவ் காந்தி உயிரிழந்தார். அவரது உடல் கண்டுபிடிக்க முடியாத அளவு சிதலமடைந்திருந்தது. ராஜீவ் அணிந்திருந்த ஆடையைவைத்து அவரது  உடலை  ஜி.கே.மூப்பனர் அடையாளம் கண்டுபிடித்தார்.  நாட்டையே உலுக்கிய இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.

  அவர்களில் ஒருவர்தான் பேரறிவாளன்.  ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக ஜூன் மாதம் 11-ம் தேதி பேரறிவாளன் கைது செய்யப்பட்ட போது அவருக்கு வயது 19. சிவராசனுக்கு இரண்டு பேட்டரிகளை வாங்கிக் கொடுத்ததாகவும், பேரறிவாளன் வாங்கிக் கொடுத்த பேட்டரி மூலமாகவே ராஜீவ் காந்தியை படுகொலை செய்வதற்கான குண்டு இயக்கப்பட்டதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், கடந்த 1998 ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்பட இந்த வழக்கில் தொடர்புடைய 25 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது பேர் 1999-ஆம் ஆண்டு மே மாதம் விடுவிக்கப்பட்டனர். பேரறிவாளன், நளினி, முருகன் மற்றும் சாந்தனுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி பேரறிவாளனின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் தன்னை விடுதலை செய்யக் கோரி தமிழக ஆளுநருக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பினார்.

  இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலைக்கு வழிவகுத்த சட்டப் பிரிவு 142 கூறுவது என்ன?

  2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் எழுவரையும் விடுதலை செய்யக்கோரி மத்திய அரசுக்கு, தமிழக அரசு சார்பில் கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் 2017 ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதன்முறையாக பரோலில் வந்தார் பேரறிவாளன். அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் பேரறிவாளனுக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சிபிஐயின் முன்னாள் விசாரணை அதிகாரி தியாகராஜன் தெரிவித்தார். வழக்கு விசாரணையின் போது பேரறிவாளன் தெரிவித்த மிக முக்கியமான வாக்குமூலத்தை பதிவு செய்ய தவறிவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

  இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசின் கருத்துருவை மத்திய அரசு நிராகரித்தது. சிபிஐ வசம் இருக்கும் ஒரு வழக்கில் முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை எனக் கூறியது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த நிலையில் விடுதலை குறித்த முடிவு எட்டப்படாமலே இருந்தது. 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாறிய நிலையில், பேரறிவாளனுக்கு அடுத்தடுத்து பரோல் வழங்கப்பட்டது.

  மேலும் படிக்க: அம்மாவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: விடுதலை குறித்து பேரறிவாளன் நெகிழ்ச்சி

  சிறையில் இருந்த காலகட்டத்தில் சிறையிலிருந்தபடி பி.சி.ஏ., எம்.சி.ஏ முடித்த பேரறிவாளன் ஐந்துக்கும் மேற்பட்ட சான்றிதழ் படிப்புகளையும் முடித்துள்ளார். மேலும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் டெஸ்க்டாப் பப்ளிஷிங் டிப்ளோமா படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்று தங்கப் பதக்கம் வென்றார். 'தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' என்ற நூலை எழுதியுள்ள பேரறிவாளன், தான் நிரபராதி என்பதற்கான ஆதாரங்களை அதில் அடுக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில்தான் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம், அவரை விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆளுநர் முடிவு எடுக்காமல் காலதாமதம் செய்ததாக ஏற்கனவே கூறியிருந்த உச்ச நீதிமன்றம் 142வது பிரிவுப்படி  தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவரை விடுதலை செய்துள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Arputham Ammal, Perarivalan, Rajiv Gandhi Murder case, Supreme court judgement