ஹோம் /நியூஸ் /Explainers /

Explainer: தேசிய பணமாக்கல் திட்டம் (National Monetization Pipeline) என்றால் என்ன? சிறு நிறுவனங்களுக்கு என்ன பலன்?

Explainer: தேசிய பணமாக்கல் திட்டம் (National Monetization Pipeline) என்றால் என்ன? சிறு நிறுவனங்களுக்கு என்ன பலன்?

National Infrastructure Pipeline - NIP

National Infrastructure Pipeline - NIP

தேசிய பணமாக்கல் திட்டம் புதிதாக பல நிறுவனங்கள் வளர்ச்சி அடையவும், அதன் மூலம் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உற்பத்தி அதிகரிக்கவும் உதவும்.

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :

  நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான திட்டங்களுக்காக நிதி திரட்டும் நோக்கில், மத்திய அரசு பல முயற்சிகளை‌ மேற்கொள்ளும். அந்த வகையில் புதிதாக மத்திய நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட திட்டம் தான் தேசிய பணமாக்கல் திட்டம் (National Monetization Pipeline). தனது கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகள் மூலம் மத்திய அரசு வருமானம் ஈட்டுவதே இந்தத் திட்டத்தின் சாராம்சம்.

  இந்தத் திட்டம் மூலம் அடுத்த நான்கு வருடங்களில், அதாவது, 2022 முதல் 2025 வரை மத்திய அரசின் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களின் உட்கட்டமைப்பு சொத்துகளான (Infrastructure Core Assets) தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே வழித் தடங்கள், விமான தளங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி மற்றும் விநியோக உட்கட்டமைப்பு, சுரங்கம், எரிவாயு குழாய் ஆகியவற்றை குத்தகைக்கு விட்டு அதிகப்படியான வருவாய் ஈட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

  அரசு நிறுவனங்கள் விற்கப்படுகின்றன, தனியார்மயமாகின்றன என்று இந்த திட்டம் பற்றி பல தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆனால் அரசு நிறுவனங்களின் பங்குகளைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்பதோ (Disinvestment) அல்லது முக்கியமில்லாத சொத்துகளை (Non Core Assets) தாரை வார்ப்பதோ இந்தத் தேசிய பணமாக்கல் திட்டத்தின் நோக்கம் அல்ல.

  தேசிய பணமாக்கல் திட்டத்தின் நோக்கம் என்ன?

  அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அரசுக்கு சொந்தமான உட்கட்டமைப்பு வசதிகளை‌ தனியார் பயன்படுத்திக் கொண்டு அதற்கு ஈடாக அரசுக்கு ஒரு தொகையை செலுத்துவதே தேசிய பணமாக்கல் திட்டம். உதாரணமாக ஏற்கனவே ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்களின் முதலீட்டை அனுமதிக்க அரசு முடிவெடுத்தது. அதிகம் பயன்படுத்தப்படாத, குறைவான வருவாய் ஈட்டித் தரும் ரயில்வே வழித்தடங்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு வாடகைக்கு விட்டு, அதன் மூலம் அதிகப்படியான வருமானத்தை ஈட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே போன்று விமானத் தளங்களையும் தனியாருக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் அதிகப்படியான வருமானத்தை ஈட்ட பணமாக்கல் திட்டத்தின் கீழ் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

  Also read:  ₹10 கோடி சேமிப்புடன் 35 வயதில் ஓய்வு பெற்ற பெண் – எப்படி சாத்தியமானது? – ரகசியம் அறிந்துகொள்ளுங்கள்..

  ரூ.6 லட்சம் கோடி வருமானம்:

  கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்திருக்கும் இந்தச் சூழலில், அத்தியாவசியமான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி திரட்ட, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நான்கு ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வருமானம் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 8,160 திட்டங்களை செயல்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. இவற்றில் 23 திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்ட போதும், நிதியில்லாத காரணத்தால் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன.

  கடன் வாங்குவதற்கு பதிலாக...

  கொரோனா பெருந்தொற்றால் வருமானம் அதிகம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ள சூழலில் புதிதாக கடன் வாங்குவதைத் தவிர்த்து ஏற்கனவே இருக்கும் சொத்துக்களை நிதி திரட்ட பயன்படுத்துவது சாமர்த்தியமான முடிவு. உட்கட்டமைப்பு சொத்துக்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் ஆண்டுக்கு இவ்வளவு என்று குத்தகை/வாடகையாகவோ அல்லது, உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி ஈட்டப்பட்ட வருவாயில் இத்தனை சதவீதம் என்றோ அரசுக்கு வருமானம் கிடைக்கும்.

  Also read:  ரெய்டு என்ற பெயரில் போலீசார் என் கணவரை அடித்துக் கொன்றுவிட்டு கொலையை மறைத்துள்ளனர் – மனைவி கண்ணீர்.. நடந்தது என்ன?

  பொதுவாக நிறுவனங்கள் மேலாண்மை ரீதியாக தாங்கள் நடத்தும் நிறுவனங்களை முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பது இயல்பு. அப்போது தான் லாபத்தை அதிகரிக்க தேவையான தீர்க்கமான முடிவுகளை அவர்கள் எடுக்க முடியும். அரசு நிறுவன பங்குகளை விற்றால், தனியார் நிறுவனங்கள் நிர்வாக மேலாண்மை ரீதியாக முழு கட்டுப்பாட்டை பெற முடியாது. அரசு மேற்பார்வைக்கு உட்பட்டே எதுவும் செய்ய இயலும். ஆனால் தனியார்மயத்திலோ அரசுக்கு நிர்வாகத்தில் எந்த கட்டுப்பாடும் இல்லை. தனியார் நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும்.

  மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு மீண்டும் வரும்:

  தேசிய பணமாக்கல் திட்டத்தில் அரசு சொத்துக்களை குத்தகைக்கு விடும் முறையிலோ, அரசும் தனது கட்டுப்பாடுகளை விட்டுக் கொடுக்கத் தேவையில்லை, தனியாருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்துவதில் சுதந்திரம் கிடைக்கும் என்ற மத்திய நிலை இருக்கிறது. ஏனெனில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே சொத்துக்கள் குத்தகைக்கு விடப்படும். பின்னர் மீண்டும் அரசின் முழு கட்டுப்பாட்டுக்கே வந்துவிடும்.

  Also read:  அறுவை சிகிச்சையின்போது அழுதது ஒரு குற்றமா? – அதுக்கும் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை

  இத்திட்டத்தால் சிறு நிறுவனங்களுக்கு என்ன பலன்?

  இந்த திட்டம் மற்றொரு புதிய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அரசு பொதுத் துறை நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் முழுவதுமாக அப்படியே குத்தகைக்கு விடப்பட வேண்டும் என்று அவசியமில்லை. சிறு சிறு அலகுகளாகவும் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்படலாம். முழுதாக உட்கட்டமைப்பு வசதிகளை குத்தகைக்கு எடுக்க மிகப்பெரிய அளவில் இயங்கும் நிறுவனங்களால் மட்டுமே முடியும். அவர்களிடம் மட்டுமே அதற்கான நிதி ஆதாரமும் பின்புலமும் இருக்கும்.

  ஆனால் அவை சிறு சிறு அலகுகளாகப் பிரித்து குத்தகைக்கு விடப்படும் பட்சத்தில் வளர்ந்து வரும் சிறு நிறுவனங்களும் இந்த திட்டத்தில் பங்கேற்கலாம். இது புதிதாக பல நிறுவனங்கள் வளர்ச்சி அடையவும், அதன் மூலம் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உற்பத்தி அதிகரிக்கவும் உதவும். வருங்காலத்தில் உட்கட்டமைப்பு தொழிலில் இடைநிலை தொழில் முனைவோர் அபிவிருத்தி அடையவும் இது வழி வகுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

  அரசு சொத்துக்களை ஏகபோகமாக சிலர் அனுபவிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு மாறாக இந்த முயற்சி ஒரு புதிய தலைமுறை தொழில் முனைவோரை உருவாக்கும் வாய்ப்புகளே பிரகாசமாக உள்ளன. இவ்வாறு குறைந்த காலத்துக்கு தனியார் முதலீடு மற்றும் நிர்வாகத்தில் அரசு நிறுவனங்களை‌ விடுவதன் மூலம், இது எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பதைப் பொறுத்து, காப்பீட்டு நிறுவனங்கள், பென்ஷன் முதலியவற்றுக்கு நிரந்தரமான நிதி ஆதாரத்தை ஏற்படுத்த தீர்வுகள் கிடைக்கும்.

  Also read:   இருளில் மூழ்கியுள்ள சீனா.. தினமும் 9 மணி நேரம் மின்தடை.. அடுத்த ஆண்டு மார்ச் வரை மின்தடை ஏன்?

  பாதகம் என்ன?

  இந்த திட்டம் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் வேலைக்கு உலை வைக்கலாம் என்ற அச்சம் தவிர்க்க முடியாதது. ஆனால் அவர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது, உட்கட்டமைப்பு வசதிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதியை ஏற்படுத்தி இந்த பிரச்சினை எதிர்கொள்ளப்படும்.

  அதே போன்று, இரயில்வே, இயற்கை எரிவாயு, மின் விநியோக தடங்கள் உள்ளிட்டவற்றை தனியார் பயன்பாட்டுக்கு வழங்குவதால் விலைவாசி அதிகரிக்கும் என்ற அச்சமும் உள்ளது. மாறாக, இந்தத் துறை சார்ந்த நிறுவனங்கள் விலை நிர்ணய கட்டுப்பாட்டு அமைப்புக்கு உட்பட்டே இயங்குவதால் அதற்கான வாய்ப்புகள் குறைவு. கடந்த காலத்தில் தொலை தொடர்பு மற்றும் விமான போக்குவரத்து துறைகளில் தனியாரை அனுமதித்த பின் கட்டணங்கள் குறைந்து, நடுத்தர வர்க்கத்தினரும் அவற்றின் சேவைகளை பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை முன்னேறியதே உண்மை.

  எனவே மத்திய அரசின் நிதி திரட்டும் முயற்சியான இந்த தேசிய பணமாக்கல் திட்டம் எல்லா வகைகளிலும் நன்மை பயப்பதாகவே உள்ளது. அடுத்தது என்ன என்று வளர்ந்த நாடுகளே பிரமித்து நிற்கும் இந்த அசாதாரண பெருந்தொற்று சூழலில், தொலைநோக்குப் பார்வையுடன் தீர்க்கமான முடிவுகள் எடுத்து எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள பாரதம் தயாராகி விட்டது என்பதையே இந்தத் திட்டம் காட்டுகிறது.

  கு. பிரதீப் குணசேகரன் - கட்டுரையாளர்

  Published by:Arun
  First published:

  Tags: BJP, Narendra Modi