முகப்பு /செய்தி /Explainers / தமிழக தேர்தல்களும் மதிமுகவும்.. தனிச்சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாக வைகோ திட்டவட்டம்...

தமிழக தேர்தல்களும் மதிமுகவும்.. தனிச்சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாக வைகோ திட்டவட்டம்...

வைகோ

வைகோ

சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச்சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள மதிமுக, இதுவரை தேர்தல்களில் எவ்வாறு செயல்பட்டது என்பதை குறித்து தெரிந்துக்கொள்ளலாம். 

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

மாணவப்பருவம் முதலே, திமுக-வில் தீவிரமாக செயல்பட்டவர் வைகோ எனப்படும் வை.கோபால்சாமி. கட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறைக்கு சென்றுள்ளார். திமுக தலைமையுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அதிலிருந்து வெளியேறி 1994-ம் ஆண்டு மே 6-ம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை தொடங்கினார். 1996-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக மதிமுக களமிறங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதாதளம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

மக்களவைத் தேர்தலில் 24 தொகுதிகளிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் 177 தொகுதிகளிலும் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. அதேநேரம், 1998-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக-வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதன்மூலம், முதன்முறையாக மக்களவையில் கால்பதித்தது.

1999-ம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் திமுக இணைந்த நிலையில், அந்தக் கூட்டணியில் இடம்பெற்று 4 தொகுதிகளில் மதிமுக வெற்றிவாகை சூடியது. அவர்களில் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் மத்திய இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். 2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய வைகோ, தனித்துப் போட்டியிட்டார். ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை.

2004-ல் நடந்தேறிய மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இடம்பிடித்து 4 தொகுதிகளில் வாகை சூடியது மதிமுக. இந்நிலையில், 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து 35 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், 6 இடங்களில் மட்டுமே மதிமுகவால் வெல்ல முடிந்தது.

2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை, அதிமுக கூட்டணியில் இடம்பெற்று ஒரு தொகுதியில் வெற்றிபெற்றது. 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தாங்கள் விரும்பிய தொகுதிகளை அதிமுக வழங்காததால், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வைகோ அறிவித்தார்.

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்ட நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் களமிறங்கியது மதிமுக. 7 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தலைமையில் மக்கள்நலக் கூட்டணி உருவானது. அதில் இடம்பெற்று 28 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை.

இந்த சூழலில், மீண்டும் திமுக கூட்டணியில் இணைந்தது மதிமுக. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கணேசமூர்த்தி வெற்றிபெற்று மக்களவை உறுப்பினரானார்.

மேலும் படிக்க... கூட்டணி கட்சிகளை குறைத்து மதிப்பிடுகிறதா திமுக?

திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராக வைகோ தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், தனி சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 26 ஆண்டுகாலத்தில் பல்வேறு கூட்டணியில் களமிறங்கியுள்ள மதிமுக, 15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் தடம்பதிக்குமா?

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: MDMK, Mdmk leader vaiko, TN Assembly Election 2021