வளர்ந்து வரும் கேட்ஜெட்ஸ் உலகில் அதன் பேட்டரி திறன் என்பது தான் முக்கிய கவனிப்பாக உள்ளது. ஒரு போன் வாங்கினால் கூட அது எத்தனை நாளைக்கு பேட்டரி தாங்கும் என்பதைத்தான் முதலில் தேடுவோம். இல்லையென்றால் பவர் பேங்கை கையில் வைத்து கொண்டே அலைய வேண்டும். கைக்கடிகாரம் முதல் கார் பேட்டரிகள் வரை ஒரு பொதுவான விஷயத்தை கவனித்திருப்பீர்கள். எல்லாமே லித்தியம் அயன் பேட்டரி என்று குறிப்பிடப்பட்டிருக்கும். உலக வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாக மாறிவிட்ட இந்த லித்தியம் பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
உலகில் எத்தனையோ கோடி கேட்ஜெட்ஸ் வந்துவிட்டன. இவை அனைத்திற்கும் சக்தி ஊட்ட வேண்டும் என்றால் எத்தனை லட்சம் கோடி டன் லித்தியம் தேவைப்படும். இவை எல்லாம் எங்கிருந்து கிடைக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா?ஆஸ்திரேலியா, சிலி மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் தான் உலகின் முக்கியமான லித்தியம் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள். மற்ற உலக நாடுகளின் தலையெழுத்தை இவர்கள் தான் நிர்ணயித்து வருகிறார்கள் என்று கூட சொல்லலாம்.
தற்போது இந்த பட்டியலில் இந்தியா கூட சேர இருக்கிறது. இந்திய வரலாற்றில் ஜம்மு & காஷ்மீரில் முதன்முறையாக சுமார் 60 லட்சம் என்ற பெரிய அளவிலான லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) தெரிவித்துள்ளது. முன்னதாக, கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் 1,600 டன் லித்தியம் இருப்பு இருந்தது. இருப்பினும், இது வணிக ரீதியாக பயன்படுத்தும் அளவில் இல்லை.
இதுவரை லித்தியத்தை இறக்குமதி செய்து வந்த நிலையில், காஷ்மீரில் தற்போது கண்டுபிடித்துள்ள கனிமம் தன்னிறைவு தேசமாக இந்தியாவை மாற்ற உதவும். அது மட்டுமின்றி, ஏற்றுமதி செய்யவும் வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நோக்கில் ஓடிக்கொண்டு இருக்கும் இந்தியாவிற்கு இது ஒரு பேருதவியாக இருக்கும்.
லித்தியம் பற்றி….
இன்று உலகளவில் மிகவும் விரும்பப்படும் கனிமங்களில் ஒன்றான லித்தியம் முதன்முதலில் 1817 ஆம் ஆண்டில் ஜோஹன் ஆகஸ்ட் அர்ஃப்வெட்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. லித்தியம் என்ற சொல் கிரேக்க மொழியில் லித்தோஸிலிருந்து வந்தது. அதாவது கல் என்று பொருள். குறைந்த அடர்த்தி கொண்ட லித்தியம், தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிவதோடு இயற்கையில் நச்சுத்தன்மை கொண்டது.
ஆனால் , காலநிலை மாற்றத்தால் கார்பன் உமிழாத சுத்தமான ஆற்றலை நோக்கி உலகம் நகர்ந்து வரும் நிலையில் மற்ற ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி அமைப்புகளுடன் ஒப்பிடுகையில், லித்தியம்-அயன் பேட்டரிகளின் தோற்றம், அதிக ஆற்றல் அடர்த்தி காரணமாக மின்னணு உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
லித்தியம் கிரகத்தில் இயற்கையாக உருவாகவில்லை. இது நோவா எனப்படும் பிரகாசமான நட்சத்திர வெடிப்புகளிலிருந்து உருவான ஒரு அண்ட பொருள் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரபஞ்சத்தின் ஆரம்ப உருவாக்கமான பிக் பேங் வெடிப்பின் போது ஒரு சிறிய அளவு லித்தியம் உருவாகியுள்ளது. ஆனால் அந்த லித்தியம் அணுக்கரு எதிர்வினை புரிந்து நோவா வெடிப்பாக மாறி அண்டம் முழுக்க உள்ள கிரகங்களில் படிந்துள்ளது என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: இனி அயர்ன்மேன் போல நாமும் பறக்கலாம்... இந்திய ராணுவத்தில் சேரவிருக்கும் ஜெட் சூட்!
லித்தியம் அயன் பேட்டரி பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜான் குட்னஃப் மற்றும் அகிரா யோஷினோ ஆகியோருக்கு 2019 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric bike, Electric Buses