ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சுகாதாரம் மட்டுமின்றி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அன்றாட வருமானத்தை நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒருவேளை சாப்பாட்டுக்காக நிவாரணப் பொருட்களை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
பொருளாதாரம், வேலை இழப்பு பல இன்னல்களை ஏற்படுத்தியிருக்கும் உயிர்க்கொல்லி வைரஸான கொரோனாவை ஒழிக்க இப்போது இருக்கும் ஒரே வழி தடுப்பூசி மட்டுமே. இந்தியாவில் இரண்டு விதமான தடுப்பூசிகள் இருக்கின்றன. கோவாக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு. இந்த இரு தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதில் மக்களிடையே பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் இருக்கின்றன. அவற்றுக்கான பதில் இங்கே தெரிந்து கொள்வோம்.
1. தடுப்பூசி கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டுமா?
தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. இது அவரவர் விருப்பம் சார்ந்தது. கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், தடுப்பூசியைத் தவிர வேறு வழியில்லை என்பதால், அதனை நிபுணர்கள் உள்ளிட்டோர் பரிந்துரைக்கின்றனர். தடுப்பூசி எடுத்துக்கொண்டால் நோயின் தீவிரத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
2. யாரெல்லாம் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்?
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி எடுத்துகொள்ளலாம். 2 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்னும் பரிசோதனையில் இருக்கின்றன. சோதனை சாதகமான முடிவுகளை கொடுத்தவுடன், விரைவில் நடைமுறைப்படுதப்பட உள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் இருந்து விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், சிறுநீரக பிரச்சனை, கல்லீரல் நோய், தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள், கொரோனா வைரஸூக்கு அதிகம் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனையின்பேரில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்.
3. தடுப்பூசி எடுத்துக்கொள்ளக்கூடாது?
அலர்ஜி உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் வேக்சின் எடுப்பதற்கு முன்பு, தங்களுக்கான பிரச்சனைகளை சுகாதார பணியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். அவர்களின் அறிவுறுத்தலுக்குப் பிறகே தடுப்பூசி எடுத்துக் கொள்வது குறித்து முடிவெடுக்க வேண்டும். முதல் முறை தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு அலர்ஜி மற்றும் பக்கவிளைவுகள் ஏதேனும் இருப்பின் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டாம். சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டாம். பிரச்சனைகள் குணமானவுடன் எடுத்துக் கொள்ளலாம். ரத்த உறைவு மற்றும் குறைவான பிலேட்லெட்டுகள் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
4. எந்த தடுப்பூசி சிறந்தது?
நடைமுறையில் இருக்கும் இரு தடுப்பூசிகளில் சிறந்தது என்ற பேச்சுக்கு இடமில்லை. பாதுகாப்பு மற்றும் வைரஸூக்கு எதிராக போராடும் தன்மை இரண்டு தடுப்பூசிகளுக்குமே உண்டு.
5. இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் மாற்றி போட்டுக்கொள்ளலாமா?
முதல் டோஸ் கோவாக்சின் போட்டுக்கொண்டவர்கள், அடுத்த டோஸ் கோவிட்ஷீல்டு போட்டுக்கொள்ளலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், அவ்வாறு தடுப்பூசி எடுத்துக்கொள்ளக்கூடாது.
6. தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு வேலை அல்லது வாகனம் ஓட்டலாமா?
தடுப்பூசி எடுத்துக்கொண்டபிறகு சில நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம். பின்னர் வழக்கம்போல் உங்களது பணியை தொடரலாம். உங்கள் உடம்பு ஒத்துழைக்கும்பட்சத்தில் எந்தபிரச்சனையும் இல்லை.
7. கட்டாயம் 2 தடுப்பூசிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?
இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு வைரஸ் தொற்று மற்றும் பாதிப்பு மிக குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
8. எவ்வளவு நாள் இடைவெளியில் 2 தடுப்பூசிகளையும் எடுத்துக் கொள்ளலாம்?
கோவிட்ஷீல்டு தடுப்பூசியை 12 முதல் 16 வாரங்கள் இடைவெளியில் எடுத்துக்கொள்ளலாம். கோவாக்சின் 28 நாட்கள் இடைவெளியில் எடுத்துக்கொள்ளலாம்.
9. தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு உடலில் வைரஸ் தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகும். 2வது டோஸ் எடுத்துக்கொண்ட பிறகு ஒருவேளை தொற்று உங்களுக்கு ஏற்பட்டால், பாதிப்பு மிக குறைவாக இருக்கும். எளிதில் மீண்டு வரலாம். தடுப்பூசி எடுத்துக் கொண்ட பலருக்கும் தலைவலி, வயிற்றுப்போக்கு, மந்தமான நிலை, வாந்தி, அடிவயிறு வலி, அரிப்பு, தடிப்பு மற்றும் உடல் வலி, சோர்வு, காய்ச்சல் போன்றவை ஏற்படுகின்றன. இதில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் வழக்கமான மாத்திரையான பாராசிட்டமாலை எடுத்துக்கொள்ளலாம். பயப்படத்தேவையில்லை.
10. தடுப்பூசிக்குப் பிறகு மாஸ்க் அணிய வேண்டுமா?
கட்டாயம் அணிய வேண்டும். எந்தவொரு தடுப்பூசியும் 100 விழுக்காடு பாதுகாப்பை வழங்குவதில்லை. தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் முன்னெச்சரிக்கை வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
11. புகைப்பிடித்தல், மது அருந்துதல் பிரச்சனைகளை ஏற்படுத்துமா?
மது அருந்துவபர்கள், புகைபிடிப்பவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை பதிவாகவில்லை. ஆனால், தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு மது மற்றும் புகைப்பிடித்தலை தவிர்த்துவிடுவது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Vaccine