Explainer : நுகர்வோர் உரிமைகளை பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டியவை என்னென்ன?

Explainer : நுகர்வோர் உரிமைகளை பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டியவை என்னென்ன?

மாதிரி படம்

சர்வதேச நுகர்வோர் அமைப்பு 1960 ஏப்., 1ல் தொடங்கப்பட்டது. இதில் 120 நாடுகளைச் சேர்ந்த 250 உறுப்பினர்கள் உள்ளனர்

  • Share this:
சர்வதேச நுகர்வோர் அமைப்பு 1960 ஏப்., 1ல் தொடங்கப்பட்டது. இதில் 120 நாடுகளைச் சேர்ந்த 250 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது. 1962-இல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, நுகர்வோரின் முக்கியத்துவம் குறித்து முதன்முதலில் வலியுறுத்தினார். இதையடுத்து 1983 மார்ச் 15-இல் இந்தத் தினம் உருவாக்கப்பட்டது. ஒரு பொருளை பயன்படுத்துபவரே நுகர்வோர். சந்தையின் முக்கிய எஜமானர் நுகர்வோர்தான். இவர்கள் இல்லையெனில் சந்தை இல்லை.

பொருட்களை வாங்கும் போது அக்மார்க், ஐ.எஸ்.ஐ., எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உள்ளிட்ட தர முத்திரைகள் உள்ளனவா என்பதை சோதிப்பது அவசியம். விலை, உற்பத்தியாளர் முகவரி, காலாவதி தேதி, விற்பனை ரசீது போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். இந்தியாவின் நிலை இந்தியாவில் 'நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-இல் தான் நிறைவேற்றப்பட்டது. இதில் புதிதாக நுகர்வோர் ஒழுங்குமுறை ஆணையம், தவறான விளம்பரங்கள் மூலம் விற்கப்படும் போலி பொருட்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை, புகார் செய்யும் முறையில் தாராளமயம், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை, புகார்களுக்கு விரைவில் தீர்வு, வாடிக்கையாளருக்கு பாதிப்பு ஏற்படும் போது இழப்பீடு பெறும் வசதி, கலப்படத்துக்கு தண்டனை போன்ற பல அம்சங்கள் உள்ளன.

நுகர்வோர் என்பவர் யார்?

நுகர்வோர் என்பவர் தனது தேவைக்காக எந்த ஒரு பொருளையும் பெறும் அல்லது சேவையை பெறும் ஒரு நபர் என்று வரையறுக்கப்படுகிறார். இது நேரடி பரிவர்த்தனை, மின்னணு மூலம் நிகழ்நேர, தொலைதூர வணிகம், பன்நிலை சந்தையிடல் அல்லது நேரடி விற்பனை ஆகிய அனைத்து முறைகள் மூலமான பரிவர்த்தனைகளையும் உள்ளடக்கியுள்ளது.

நுகர்வோர் இல்லாதவர் யார்?

மறுவிற்பனை அல்லது வணிக நோக்கங்களுக்காக பொருட்களைப் பெறும் எந்தவொரு நபரும் நுகர்வோர் அல்ல.

நுகர்வோர் உரிமைகள் என்றால் என்ன?

உயிருக்கு ஆபத்தான பொருட்கள் மற்றும் சேவைகளிலிருந்து தங்களையோ பிறரையோ பாதுகாப்பதற்கான உரிமை, பொருட்கள் மற்றும் சேவைகளைப் பற்றி அறிவிக்கப்படுவதற்கான உரிமை, பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம் குறித்து உறுதிப்படுத்தப்படுவதற்கான உரிமை, கேள்வி கேட்கும் உரிமை, நிவாரணம் தேடும் உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை. போன்றவையே நுகர்வோரின் முக்கிய உரிமைகள் ஆகும். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 ஜுலை 20, 2020ல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் 10வது பிரிவில் கூறப்பட்டுள்ளவாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உருவாக்கப்பட்டு 24 ஜுலை 2020 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்:

நுகர்வோரை ஒரு வகுப்பினராக எடுத்துக்கொண்டு அவர்களது உரிமைகளை மேம்படுத்த, பாதுகாக்க மற்றும் செயல்படுத்த வேண்டும் என்பது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் நோக்கம் ஆகும். நுகர்வோர் உரிமைகள் மீறப்படும் போது அதுகுறித்து புலனாய்வு மேற்கொள்ள இந்த ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. மேலும் புகார்கள் / விசாரணைகளைத் தொடங்குதல், பாதுகாப்பற்ற சரக்குகள் மற்றும் சேவைகளை திரும்பப் பெற ஆணையிடுதல், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் ஆகியவற்றை நிறுத்த ஆணையிடுதல், தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை தயாரித்தவர்கள், சான்றுரைத்தவர்கள் வெளியிட்டவர்களுக்கு அபராதம் விதித்தல் ஆகியவற்றுக்கான அதிகாரமும் இந்த ஆணையத்திற்கு உள்ளது.

நுகர்வோர் குறை தீர்ப்பு:

புகாரில் உள்ள பொருளின் மதிப்பை பொறுத்து, மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என்று, மூன்று அடுக்குகள் கொண்ட நுகர்வோர் வழக்குகள் தீர்ப்பாயம் அமைக்கப்படும். ஒரு கோடி ரூபாய் வரையிலான மதிப்புடைய பொருட்கள், சேவைகள் பற்றிய புகார்களை மாவட்ட தீர்ப்பாயம் விசாரிக்கும். ஒரு கோடியில் இருந்து பத்து கோடி ரூபாய் வரையிலான மதிப்புடைய பொருட்கள், சேவைகள் பற்றிய புகார்களை மாநில அளவிலான தீர்ப்பாயம் விசாரிக்கும்.

பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய பொருட்கள், சேவைகள் பற்றிய புகார்களை தேசிய அளவிலான தீர்ப்பாயம் விசாரிக்கும். புகார்தாரர் எழுத்துப்பூர்வமான புகார்களை தீர்ப்பாயத்தில் அளிக்க வேண்டும். மாவட்ட தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளை மாநில தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யலாம். மாநில தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளை தேசியதீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யலாம். அங்கும் நீதி கிடைக்கவில்லை என்று கருதும் நுகர்வோர், இறுதியாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும். ஒரு புகார் மீது மூன்று மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது சோதனை கூடங்களில் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய பண்டங்கள் பற்றிய புகார்களுக்கு பொருந்தாது. அது போன்ற பொருட்கள் மீதான புகார்கள் ஐந்து மாதங்களில் தீர்க்கப்பட வேண்டும். ஒரு புகார்தாரர் அளிக்கும் புகார் பற்றி 21 நாட்களில் தீர்ப்பாயத்தில் இருந்து பதில் வரவில்லை என்றால், அந்த புகார் ஏற்கப்பட்டதாக கருதப்படும். தீர்ப்பாயத்தின் முன் விசாரணை நடத்தப்படாமல் எந்த புகாரும் நிராகரிக்கப்பட முடியாது. சமரசம் செய்து கொள்ளவும் இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட, மாநில, தேசிய தீர்ப்பாயங்களில் சமரச மையங்கள் அமைக்கப்படும். இரண்டு தரப்பினரும் சம்மதித்தால், அவர்களின் வழக்குகள் இந்த சமரச மையங்கள் மூலம் தீர்க்கப்படும்.

நுகர்வோருக்கு தகவல் அறியும் உரிமை என்ன?

ஒவ்வொரு நுகர்வோருக்கும் அவர் வாங்கிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விவரங்கள் குறித்து அறிந்துகொள்ள முழு உரிமை உண்டு.

இழப்பீடு பெற நுகர்வோருக்கு உரிமை உள்ளதா?

ஆம், நுகர்வோர் வாங்கிய பொருட்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், சேதத்தின் அளவைப் பொறுத்து இழப்பீடு பெற அவருக்கு உரிமை உண்டு.

தயாரிப்புகளின் தரநிலைப்படுத்தல் என்றால் என்ன?

தயாரிப்புகளின் தரநிலைப்படுத்தல் என்பது நுகர்வோரின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வோடு தொடர்புடைய தரமான தயாரிப்புகளை உருவாக்குவதாகும்.

நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் பணி என்ன?

வழக்குகளை எவ்வாறு பதிவு செய்வது, நீதிமன்றங்களில் நுகர்வோரைப் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துவது, நுகர்வோருக்கு விழிப்புணர்வை எவ்வாறு ஏற்படுத்துவது, வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டவும் வசதி செய்யவும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் உதவுகிறது.

 
Published by:Gunavathy
First published: