திருப்பு முனை: காமராஜர் விடுத்த சவால் தமிழக அரசியலில் திமுகவுக்கு திருப்புமுனை..

Youtube Video

தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவர் உதிர்த்த வார்த்தைகள் திராவிட முன்னேற்றக் கழகத்தை தேர்தல் அரசியலை நோக்கி உந்தித் தள்ளியது. 

 • Share this:
  அது 1957ம் வருடம். 1952ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல், கடும் போராட்டங்களுக்குப் பிறகு, சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா தன்னை விடுவித்துக் கொண்டிருந்த சமயம். நாடு முழுவதும் இதுபோன்ற மொழிவாரி மாநிலங்களைப் பிரிக்கும் இடியாப்பச் சிக்கலில் மத்திய அரசு தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தது. அதனால் பொதுத்தேர்தல் நடத்தப்படாது என அரசியல் கட்சிகள் கருதின. ஆனால், 1957ல் பிப்ரவரி 24 முதல் மார்ச் 1ம் தேதி வரை பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. அந்த சட்டப்பேரவைத் தேர்தல் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானதாக பார்க்கப்பட்டது.


  100 ஆண்டுகளைக் கடந்த வரலாற்றைக் கொண்டிருந்ததும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்களத்தில் நின்று போராடிய கட்சியுமாக இருந்த ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் 1952ல்நடைபெற்ற சென்னை மாகாணப் பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற முடியாமல் போனது ஒரு கரும்புள்ளியாகவே இருந்து வந்தது. அதனால் பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்க வைக்கும் நெருக்கடி முதலமைச்சர் காமராஜருக்கு ஏற்பட்டிருந்தது.


  ராஜாஜிக்குப் பிறகு 1954ல் முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த காமராஜருக்கு தன் மூன்றாண்டு ஆட்சி மீது நம்பிக்கை இருந்தபோதிலும், துடிப்போடு இயங்கி வந்த அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உணர்ச்சிப்பூர்வமான முழக்கங்கள் உறுத்தலாகவே இருந்து வந்தது.  1949ம் ஆண்டில் உருவானபோதிலும் அதுநாள்வரை நேரடியாக தேர்தல் களத்தில் இறங்காத அங்கீகரிக்கப்படாத கட்சியாகவே திமுக இருந்து வந்தது. 1952 பொதுத் தேர்தலில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி மற்றும் காமன்வீல் கட்சிகளை திமுக ஆதரித்தது.

  இடைப்பட்ட காலத்தில் கல்லூரி மாணவர்களிடையேயும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரிடையேயும் மிக வேகமாக வளர்ந்திருந்தது. திமுக-வின் அசுர வளர்ச்சியை உணர்ந்து திமுக-வை காமராஜரும் விமர்சித்து வந்தார்.

  வெட்டவெளியில் நின்றுகொண்டு தங்களை விமர்சிப்பவர்களுக்கு மக்களின் ஆதரவில்லை என்றும் மக்களின் ஆதரவு இருந்தால் சட்டசபைக்கு வந்து பேசத்தயாரா என்றும் திமுக-வுக்கு சவால்விட்டார் காமராஜர்.

  சுயமரியாதை பாசறையில் வளர்ந்த திமுக-வின் இளமைப் பட்டாளத்துக்குள் கனன்று கொண்டிருந்த கனலுக்கு காமராஜர் விடுத்த சவால் அதை விசிறி விட்டது போல் ஆயிற்று. திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது என திமுக முடிவெடுத்து சவாலை ஏற்றது.

  திமுக-வின் தமிழுணர்வு பிரசாரத்தால் கவரப்பட்ட இளைஞர்களும், மாணவர்களும் அதன் முற்போக்குக் கருத்துக்களை கிராமம்தோறும் கொண்டு சென்றனர். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்றும் தமிழ்நாடு என மாநிலத்துக்குப் பெயர் சூட்டவேண்டும் என்றும் திமுக முழங்கியது.

  தேர்தல் முடிவுகள் வந்தபோது 205 இடங்களில் 152 இடங்களை காங்கிரஸ் வென்று பெரும்பான்மை பெற்றது. அதே நேரத்தில் பின்னாளில் காங்கிரஸை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றிய திமுக- 15 இடங்களில் வென்று தன் தேர்தல் வெற்றிக் கணக்கை தொடங்கியிருந்தது.

  மேலும் படிக்க... அரசு நிலத்தை விற்க முயன்றவர்களை தடுத்த திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

  அதன் அசுர வளர்ச்சிக்கு அத்தேர்தல் அச்சாரமாக அமைந்தது. திமுக-வை தேர்தல் களத்திற்கு இழுத்தவந்தது காமராஜரின் பேச்சு. தமிழக அரசியல் மற்றும் தேர்தல் வரலாற்றில் இது மிகப் பெரிய திருப்புமுனை என்றால் மிகையாகாது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: