Explainer : ஜான்சன் அண்ட் ஜான்சனின் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் ஒப்புதல்.. தெரிந்துகொள்ளவேண்டியவை என்ன?

ஜான்சன் அண்ட் ஜான்சன் கோவி 19 தடுப்பூசி

ஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட் -19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகரித்துள்ள

  • Share this:
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) சனிக்கிழமை ஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட் -19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகரித்துள்ளது. அடுத்த வார தொடக்கத்தில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக ஜான்சன் அண்ட் ஜான்சனின் தடுப்பூசி போடப்பட உள்ளது. அமெரிக்காவில் உருமாறும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு ஒரு முக்கியமான தருணத்தில் வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி, அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 28.55 மில்லியனாகவும், மற்றும் 512,000 இறப்புகளும் பதிவாகியுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக வலைத்தளம் காட்டுகிறது.

ஜூன் மாத இறுதிக்குள் அமெரிக்காவிற்கு 100 மில்லியன் டோஸ் வழங்குவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதேபோல ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி 600 மில்லியன் டோஸ்கள் ஜூலை இறுதிக்குள் வரவிருக்கிறது, அமெரிக்காவின் மருத்துவ சோதனை தளத்தில் ஜே & ஜே தடுப்பூசியின் செயல்திறன் 72% என்றும், ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னாவின் தடுப்பூசியின் செயல்திறன் சுமார் 95% என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கிய உயர்மட்ட தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி எஸ். ஃபாசி, ஜே & ஜே தடுப்பூசி 72% செயல்திறன் கொண்டது என்றாலும், இது ஒரு நல்ல தடுப்பூசி, எங்களுக்குத் தேவையானது பல நல்ல தடுப்பூசிகள் என்று கூறினார். 95% மற்றும் 72%-க்கு இடையிலான வித்தியாசம் குறித்து யோசிப்பதை விட்டுவிட்டு இப்போது நம்மிடம் மூன்று பயனுள்ள தடுப்பூசிகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்தார்.

ஜே & ஜே நிறுவனத்தின் தடுப்பூசி, JNJ-78436735 அல்லது Ad26.COV2.S என அழைக்கப்படுகிறது, இதை பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட ஜான்சன் நிறுவனத்தின் பார்மாசூட்டிகா உருவாக்கியுள்ளது. பெத் இஸ்ரேல் டீகோனஸ் மருத்துவ மையம் மற்றும் பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் போதனா மருத்துவமனை இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி SARS-CoV-2 வைரஸின் ஸ்பைக் புரதத்தை உருவாக்குவதற்கான மரபணு வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆர்.என்.ஏ -க்களை சேமிக்கும் ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளை போலன்றி, ஜே & ஜே நிறுவனத்தின் தடுப்பூசி இரட்டை அடுக்கு டி.என்.ஏவை பயன்படுத்துகிறது. ஃபைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகா, பாரத் பயோடெக் தடுப்பூசிகளை விட ஜே & ஜே நிறுவனத்தின் தடுப்பூசி ஒற்றை டோஸாக வழங்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையங்களுக்கு (சி.டி.சி) ஆலோசனை வழங்கும் தடுப்பூசி நிபுணர்களின் குழ, ஜே & ஜே நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தும் பணியில் யாருக்கு முன்னுரிமை வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்தியது. ஜே & ஜே நிறுவனம் ஜனவரி 2020ல் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளைத் தொடங்கியது, மார்ச் மாதத்தில் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து 456 மில்லியன் டாலர் உதவியைப் பெற்றது. முதற்கட்ட சோதனைகள் ஜூலை மாதத்தில் தொடங்கியது, செப்டம்பரில் 3ம் கட்ட சோதனைகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Published by:Gunavathy
First published: