Home /News /explainers /

திருப்புமுனை: ஜெயலலிதா அரசியலில் உச்சம்தொட காரணம் இதுதான்..!

திருப்புமுனை: ஜெயலலிதா அரசியலில் உச்சம்தொட காரணம் இதுதான்..!

Youtube Video

தமிழக அரசியலில் நீங்கா இடம்பிடித்த ஜெயலலிதா வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவம் அவரது அரசியல் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.

எம்ஜிஆரின் கதாநாயகியரில் யாரும் காட்டாத அரசியல் ஆர்வத்தை காட்டிய ஜெயலலிதா திரையுலகிற்கு முழுக்குப் போட்டு 1982-ல் அதிமுக-வில் ஐக்கியமானார். அரசியல் ஏணியில் ஏற்றிவிட நினைத்த எம்ஜிஆர் சத்துணவு திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினராக நியமித்ததுடன் 1983ல் கடலூரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் கொள்கை பரப்புச் செயலாளராகவும் அறிவித்தார். 1984ம் ஆண்டில் அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகுபார்த்தார் எம்.ஜி.ஆர். சர்ச் பார்க்பள்ளியில் பயின்ற நுனிநாக்கு ஆங்கிலப்புலமையுடன் பேச்சாற்றலும் சேர்ந்து கொண்டதால் இந்திரா காந்தியின் கவனத்தையும் ஜெயலலிதா ஈர்த்தார்.

1984 பொதுத் தேர்தலில் அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்றபோது தேர்தலில் பிரசார பீரங்கியாக திகழ்ந்தார். அதீத அரசியல் ஆர்வத்தால் 1982ல் அதிமுக-வில் சேர்ந்த ஜெயலலிதா, குறுகிய காலத்தில் கொள்கை பரப்புச் செயலாளராக உயர்த்திய எம்ஜிஆர்

1984ல் மாநிலங்களவை உறுப்பினராக்கிய எம்ஜிஆர்

நுனிநாக்கு ஆங்கிலம், பேச்சாற்றலால் இந்திராவை அசத்திய ஜெயலலித்தா 1984 தேர்தலில் பிரசார பீரங்கியாக திகழ்ந்தார். எம்ஜிஆர் உயிருடன் இருந்திருந்தால் எட்டியிருக்கக் கூடிய உயரத்தைக் காட்டிலும் அவர் மறைந்த நான்கே ஆண்டுகளில் முதலமைச்சராக உயர்ந்து சிகரத்தைத் தொட்டார் ஜெயலலிதா, அதற்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது எம்ஜிஆரின் மரணத்தின்போது நடைபெற்ற சம்பவம்.

1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி எம்ஜிஆர் மறைந்தபோது அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகனத்தில் ஜெயலலிதா ஏறியபோது அவரை ஜானகி அம்மையாரின் உறவினரும் கட்சியில் சிலரும் கீழே தள்ளிவிட்டனர். தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரலையில் அதை பார்த்த லட்சக்கணக்கான மக்களின் மனக்கண்ணிலும் அக்காட்சி பதிந்தது. பலருக்கு ஜெயலலிதா மீது இரக்கமும் ஏற்பட்டது.

சாத்தூர் ராமச்சந்திரன், திருநாவுக்கரசர் போன்ற அமைச்சர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவளித்தனர்.  அதன்பிறகு முதலமைச்சர் பதவிக்கான ரேஸ் தொடங்கியது. தற்காலிக முதல்வராக இருந்த நெடுஞ்செழியன் அதை தக்க வைக்க விரும்பியபோது ஜெயலலிதா அவருக்கு ஆதரவளித்தார், ஆனால் ஆர்.எம். வீரப்பன் போன்றோர் எம்ஜிஆரின் மனைவி ஜானகியை ஆதரித்தனர்.

அப்போது ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக நெடுஞ்செழியன் அறிவித்தார். இதனிடையே ஜானகியை முதல்வராக ஆளுநர் குரானா அறிவித்தபோது ஜெயலலிதா அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் ஜானகி பதவியேற்றதும் பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸை நாடினார். ஆனால் ராஜீவோ, ஜெயலலிதா கட்சியை நிர்வகிக்கட்டும் நீங்கள் முதல்வராக இருங்கள் என அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பினார்.

1989 சட்டமன்றத் தேர்தலில் ஜானகி அணி, ஜெயலலிதா அணிகள் களமிறங்கின. இரட்டை இலைச் சின்னம் முதல் முறையாக முடக்கப்பட்டு ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு இரட்டைப் புறா சின்னமும் ஒதுக்கப்பட்டன. கலங்கிய குட்டையாக தமிழக அரசியல் நிலவியதைப் பார்த்து காங்கிரஸ் தனியாக களமிறங்கியது.

4 முனைப் போட்டியின் முடிவில் திமுக வென்றாலும், எம்ஜிஆரின் அரசியல் வாரிசு ஜெயலலிதாதான் என தமிழக மக்கள் அங்கீகரித்தனர். ஜெயலலிதா அணி 26 இடங்களில் வென்றது, ஜானகி அணியில் பி.எச். பாண்டியன் மட்டுமே வென்றார். அரசியலை விட்டு ஜானகி விலக, அதிமுக முழுவதுமாக ஜெயலலிதா வசம்வந்தது.

மேலும் படிக்க...கிராம சபை கூட்டம் நடத்தும் ஸ்டாலின் மக்களுக்கு என்ன நன்மை செய்துள்ளார்?: முதலமைச்சர் கேள்வி

ராணுவ வண்டியில் இருந்து ஜெயலலிதா தள்ளிவிடப்பட்ட சம்பவமும், பின்னாளில் முதல்வர் ஆவதற்கு அச்சாரமாக இருந்தது.  முதல் முறையாக எம்எல்ஏ-வாக ஆக காரணமான 1989 தேர்தலும், தேர்தல் அரசியலில் திருப்புமுனையாக அமைந்தவை என்பது மிகையாகாது.

 உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Jayalalithaa, TN Assembly Election 2021

அடுத்த செய்தி