எளிமையான, நியாயமான முறையில் காவல்துறை புலனாய்வு விசாரணைக்கு இந்திய அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால், சமீப காலமாக அரசியல் எதிராளிகள், மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சி நிர்வாகிகள் ஆகியோரைக் குறிவைப்பதற்காக காவல்துறை பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
டெல்லி பாஜக தலைவர் தேஜிந்தர் பால் சிங் பாகாவை பஞ்சாப் காவல்துறை கடத்தி சென்றதாக கூறி, அவரை டெல்லி காவல்துறை விடுதலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, 'காஷ்மீர் ஆவணம்'(Kashmir Files) திரைப்படத்தை விமர்சித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தை பாரதி ஜனதா இளைஞர் அணி நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில், மத, இனம் சம்பந்தமாக விரோத உணர்ச்சிகளை தூண்டி விட முயற்சி செய்ததாகவும், அதீத விரோத உணர்ச்சி போக்குடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மிரட்டியதாகவும் பஞ்சாப் காவல்துறை தேஜிந்தர் பால் சிங் மீது குற்றப்பதிவு தாக்கல் செய்தது.
இந்நிலையில், 5 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத காரணத்தினால், பஞ்சாப் காவல்துறை நேற்று காலை தேஜிந்தர்-ஐ அவரது இல்லத்தில் வைத்து கைது செய்து, மொகாலிக்கு அழைத்து சென்றது. இது, அரசியல் பழிவாங்கல் என்றும் , முறையான குற்றவியல் நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் பாஜக நிர்வாகிகள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், தனது மகனை பஞ்சாப் காவல்துறை கடத்தி சென்றுவிட்டதாக கூறி டெல்லி காவல் துறையில் தேஜிந்தரின் தந்தை புகார் அளித்தார்.
இதையும் படிக்க: 1973-ம் வருட Roe vs Wade வழக்கு என்றால் என்ன? ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது
இதனையடுத்து, தென்கிழக்கு டெல்லி திவார்கா நீதிமன்றம் (Diwarka Court) தேஜிந்தர் மீது பிடி கட்டளையை (Search Warrant) பிறப்பித்தது. குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி, பிடி கட்டளையை இந்தியாவின் எந்த மூலையிலும் நடைமுறைப் படுத்த முடியும். தேஜிந்தர் எங்கிருந்தாலும் அவரைப் பற்றிய தகவலை உடனே தருமாறு ஹரியானா மற்றும் நாட்டின் இதர காவல்துறைக்கு டெல்லி காவல்துறை அதிகாரிகள் தகவல் அனுப்பினர். இதனையடுத்து, குருச்சேத்திர மாவாட்டத்தில் தேஜிந்தர்-ஐ பஞ்சாப் காவல்துறையிடமிருந்து மீட்டு டெல்லி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
நாட்டின் அரசியலமைப்பின் படி காவல் துறையும் பொது அமைதியும் மாநிலப் பட்டியலில் இருந்து வருகிறது. ஹரியானா மாநிலத்தில், பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. மாநில சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றிபெற்ற ஆம் ஆத்மீ கட்சி பஞ்சாப்பில் ஆட்சி புரிந்து வருகிறது. டெல்லியில் ஆம் ஆத்மீ ஆட்சியில் இருந்தாலும், யூனியன் பிரதேசம் என்பதால் அரசியலமைப்பின் படி காவல்துறை மற்றும் பொது அமைதி ஆகியவை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் வசமே உள்ளது.
சில கருத்து பரிமாற்றங்கள்:
டெல்லி காவல்துறையின் இத்தகைய போக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்ட பிறகும், தேஜிந்தர் கடத்தி செல்லப்பட்டார் என்று எப்படி எப்ஐஆர்-ல் பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, கைது செய்யப்பட்டு காவலில் எடுத்துவைக்கப்பட்ட ஒவ்வொருவரும், 24 மணி நேர கால அளவிற்குள் (பயண நேரம் நீங்கலாக) குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்த வேண்டும். ஆனால், நேற்று காலை 8 மணி வாக்கில் பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்ட தேஜிந்தர், இன்னும் மொகாலிக்கு கொண்டு செல்லப்படவில்லை.
மேலும் படிங்க: வெப்ப அலை என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது
மேலும், பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் தற்போது ஜனக்பூரி காவல்நிலையத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பாஞ்சாப் காவல்துறையின் செயல்பாடுகள் சட்ட ரீதியற்றதாக இருந்தாலும், அதை விசாரிக்க நீதிமன்றம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே , இதுகுறித்து கருத்து தெரிவித்த டெல்லி காவல்துறை அதிகாரிகள், " பஞ்சாப் காவலர்கள் சிறைபிடிக்கப் பட்டுள்ளதாக வரும் தகவல் முற்றிலும் தவறானது. அவர்கள், தங்கள் விருப்பத்தின் பேரிலே அங்குள்ளனர். ஒரு மாநிலத்தின் வெளியே நடைபெறுகிற ஒரு குற்றத்திற்காக ஒருவரை குற்றஞ்சாட்டி விசாரிக்க வேண்டுமென்றால், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், உள்ளூர் காவல்நிலையத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். சட்ட ரீதியான முறையில் சட்ட வழிகளைப் பின்பற்றி கைது நடவடிக்கை மேற்கொள்ள வில்லை" என்று தெரிவிக்கின்றனர்.
மாநிலத்தின் வெளியே நடைபெறுகிற குற்றத்திற்காக கைது செய்யும் நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது முக்கியத்துவம் பெறுகிறது. முன்னதாக, பெங்களூரைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் காலநிலை செயற்பாட்டாளர் திஷா ரவி டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று, பிரதமர் மோடி மீது அவதூறு பரப்பிய குற்றத்திற்காக மன்மோகன் மிஸ்ரா என்பவரை சென்னை மாதவரத்தில் வைத்து உத்தர பிரதேச காவல்துறை கைது செய்தது.
எனவே, அரசியல் எதிராளிகளை நியாயமற்ற முறையில் புலன்விசாரணைக்கு உட்படுத்துவதில் இருந்து பாதுகாப்பதற்கான உரிய நெறிமுறைகளும், விரோத உணர்ச்சிகளால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றவாளிகளை இந்தியாவின் எந்த மூலையிலும் புலன்விசாரணைக்கு உட்படுத்துவதற்கான நெறிமுறைகளும் வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.