கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு, இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண் (Consumer Price Index) அதிகரித்துள்ளது. இதனால், பாமர மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவிலான பொருளாதார சவால்களை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
முன்னதாக, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின், தேசியப் புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ), 2012=100 என்ற அடிப்படையில் கிராமப்புறம், நகர்ப்புறம், மற்றும் இரண்டும் இணைந்தவற்றுக்கான 2022-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்களை வெளியிட்டுள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டின் (பொது) அடிப்படையில், ஏப்ரல் மாதத்தில் (தற்காலிகம்) கிராமப்புறங்களில் பணவீக்கம் 8.38 ஆகவும், நகர் புறங்களில் பணவீக்கம் 7.09 ஆகவும், இரண்டும் இணைந்து 7.79 ஆகவும் இருந்தன.
அதேபோன்று, பணவீக்க விகிதங்களை நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் அடிப்படையில் சதவீதத்தில் கணக்கிட்டபோது, ஏப்ரல் மாதத்தில் (தற்காலிகம்) கிராமப்புறங்களில் 8.50 ஆகவும், நகரங்களில் 8.09 ஆகவும், இரண்டும் இணைந்து 8.38 ஆகவும் இருந்தன.
பணவீக்க சவால்கள்: கொரோனா பொது முடக்கத்துக்குப் பின் ஏற்பட்ட பொருளாதார மீட்சி காரணமாக, உலக நாடுகள் பணவீக்க சவால்களை சந்தித்து வருகின்றன. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டதொழில் உற்பத்தி காரணமாக நுகர்வோரின் செலவு செய்யும் சக்தி அதிகரித்துள்ளது. இதன், காரணமாக ஏற்பட்ட பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை (quantitative tightening) அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால் இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.

1982க்குப் பிறகு, 2021 டிசம்பர் மாதத்தில் முதன்முறையாக அமெரிக்காவில் நுகர்வோர் குறியீடு எண் 7 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம், முதன் முறையாக நாட்டின் நுகர்வோர் குறியீட்டு எண், இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 6%-ஐ கடந்தது. அதன்பின், பணவீக்கம் விகிதம் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கத் தொடங்கின. பொருட்களின் விலையேற்றம் மிக விரைவான விகிதத்தில் அதிகரித்து வருவதை ஏப்ரல் மாத புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன.
பணவீக்கம் எப்படி மதிப்பிடப்படுகிறது?
இந்தியாவில் நுகர்வோர் வாழ்க்கைச் செலிவினை துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் மாதந்தோறும் வெளியிடப்படுகிறது.
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 1114 நகர்ப்புற சந்தைகளில் இருந்தும், 1181 கிராமப்புற சந்தைகளில் இருந்தும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின், களப்பணி பிரிவினரால், விலை குறித்த புள்ளி விவரங்கள் வாராந்திர பதிவேட்டில் சேகரிக்கப்படுகின்றன.

நுகர்வோர் விலை குறியீட்டு எண் - ஒரு கூடையில் உள்ள ஆயிரக்கணக்கான பொருட்களின் மாதந்திர விலைத் தளம்பலை இது குறிக்கிறது.
நுகர்வோர் வாழ்க்கையில் உணவு மற்றும் குடிபானங்கள் அதிக முக்கியத்துவம் பெறுவதால், அதற்கு அதிகப்படியான முக்கியத்துவும் இந்த குறியீட்டு எண்ணில் கொடுக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் குடிபானங்கள் பிரிவில் உள்ள துணை வகைகள்
போக்குவரத்து, பொழுதுபோக்கு, எரிபொருள், சுகாதாரம், ஆடைகள், காலணிகள் போன்ற அன்றாட வாழக்கைச் செலவில் ஏற்படும் மாற்றங்களை இந்த குறியீட்டு எண் கணக்கிடுகிறது.
சமீபத்திய பணவீக்கத்துக்கு காரணம் என்ன?
உணவு விலைகளில் ஏற்படும் அசைவுகளே சமீபத்திய பணவீக்கத்துக்கு முக்கிய காரணமாக அமையலாம் என்று பார்க்கப்படுகிறது.

உதாரணாமாக, 2022 ஏப்ரல் மாதத்தில் அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்களின் பணவீக்க வளர்ச்சி விகிதம் 5.96 ஆக உள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, உலகளாவிய விநியோக கோதுமை சங்கிலியில் இடையூறு ஏற்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தத் தொடங்கிய இந்தியா,தனது கோதுமை ஏற்றுமதியை அதிகரிக்கத் தொடங்கியது.
இதையும் வாசிக்க:
30 ஆண்டுகளில் இல்லாத அளவு உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு குறைவது என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?
2021-22 ஏப்ரல் முதல் ஜனவரி வரையில் 1742 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. இது கடந்த 2020-21ம் ஆண்டின் இதே கால ஏற்றுமதியை விட 387 சதவீதம் அதிகம்.
ஆனால், மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட அதிக வெப்பநிலை காரணமாக கோதுமை உற்பத்தியில் கடும் பின்னடைவைச் சந்தித்தது. அரசின் கோதுமை கொள்முதலிலும் தாக்கங்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக, தற்போது கோதுமை உணவு தானியங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் சூழல் உருவாகியுள்ளது.
அதே போன்று, குறியீட்டு எண்களில் அதிகபட்ச அதிகரிப்பு சமையல் எண்ணையில் ( 17.28% வளர்ச்சி) ஏற்பட்டுள்ளது. சூரியகாந்தி விதை, சோயா விதை , பாமாயில் ஆகியவற்றால் விலையேற்றம் காணப்படுகிறது. கருங்கடல் பிராந்தியத்தில் (Black Sea Regions) நிலவும் பதற்றமான சூழல் காரணமாக விநியோக சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகள் இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. அதேபோன்று, காய்கறிகள், வாசனைப்பொருள் போன்ற உணவு பொருட்களிலும் விலைத்தளம்பல்கள் காணப்படுகின்றன.
ஆடைகள் மற்றும் காலணிகள், எரிபொருள் (கச்சா எண்ணெய்) ஆகிய பொருட்கள் வகைகளில் அதிக விலையேற்றம் காணப்பட்டுள்ளது.

2014க்குப் பிறகு, கடந்த ஜனவரி மாதம் சர்வதேச சந்தையில் கச்சா ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலராக அதிகரித்தது.
பொதுவாக, பணவீக்கம் செல்வந்தர்களை விட அடித்தள பாமர மக்களை அதிகம் பாதிக்கும். செலவு செய்யும் சக்தி குறையும். பணத்தின் மதிப்பே குறைவதால், பாமர மக்களின் சேமிப்புகள் அர்த்தம் இழந்து போகும். தொழில் உற்பத்தி குறையும் (கடன்களுக்கான வட்டி அதிகரிப்பதால்), வேலைவாய்ப்பின்மை பெருகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.