புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோய் என்பது அனைவரும் அறிந்ததே. பெண்கள் அதிகமாக பாதிப்படைவது மார்பக புற்றுநோயால் தான். ஆனால், அதிர்ச்சியூட்டும் விதமாக ஒரு சில ஆண்களும் மார்பகப் புற்றுநோயால் பாதிப்படைகிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோயின் தாக்கத்தை முதல் நிலையிலேயே கண்டறிந்து விட்டால் அதனை முழுவதுமாக குணப்படுத்துவது சாத்தியமானதே. எனவே, புற்றுநோயின் அறிகுறிகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட இரண்டு சதவிகிதம் ஆண்கள் உள்ளனர் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பயம், தயக்கம் அல்லது அறியாமை காரணமாக ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோயின் அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன. ஆண்களைத் தாக்கக்கூடிய புற்றுநோயின் அறிகுறிகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
ஆண்களில் யாருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்?
வொக்கார்ட் மருத்துவமனையில் மார்பக மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வரும் டாக்டர் அதிதி அகர்வால், க்ளீனேஃபெல்டர் சிண்ட்ரோம் (Klinefelter Syndrome) என்னும் குரோமோசோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கு
மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஒரு சில ஆண்கள், சில நேரங்களில் கூடுதலாக ஒரு X குரோமோசோமுடன் பிறப்பார்கள். (X என்பது பெண் குரோமோசோம் ஆகும்). இந்த குரோமோசோமினால், ஆண்களின் உடலில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரக்கும். இதனால் பெண்களுக்கு மார்பகங்கள் வளர்வது போலவே, ஆண்களுக்கும் மார்பகங்களில் திசுக்கள் வளரத் தொடங்கும். மருத்துவ ரீதியாக இந்த நிலை கைனகோமாஸ்டியா (Gynecomastia) என்று அழைக்கப்படுகிறது.
மார்பகப் புற்றுநோய், பால் உற்பத்தியாகும் சுரப்பிகளான, மில்க் டக்ட்ஸ் மற்றும் சுரப்பிகள் அமைந்திருக்கும் லோபுல்ஸ் ஆகியவற்றில் தான் முதலில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. ஆண் மற்றும் பெண், இரு பாலருமே பருவம் அடையும் வரை, முலைக்காம்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியின் கீழே ஒரு சில குழாய்கள் உள்ளன. பெண்கள், பருவம் அடையும் போது, உடலில் பல்வேறு ஹார்மோன்கள் உற்பத்தியாகி, மார்பகத் திசுக்கள் வளரத் துவங்கும்.
புற்று செல்கள் இந்த சுரப்பிகளில் தான் வளரத் தொடங்குவதால், பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. அதே நேரத்தில், பருவம் அடைந்த ஆண்களுக்கும் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரந்தால், அவர்களின் திசுக்களும் வளரத் தொடங்கும். ஆண்களுக்கும் பெண்களைப் போல மார்பகங்கள் இருக்கும். இரு பாலருக்குமே, வயது மற்றும் மரபணு ஆகிய இரண்டும் தான் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணமாக டாக்டர் அகர்வால் கூறுகிறார்.
Must Read | மெனோபாஸ் நெருங்கும்போது உடல் எடை அதிகரிக்குமா?
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பொதுவாகக் காணப்படும் மார்பகப் புற்றுநோய் அறிகுறிகள் என்ன?
மார்பகங்களில் (ஒரு மார்பில் அல்லது இரண்டு மார்புகளிலும்) வீக்கம் அல்லது கட்டிகள், வலி, மார்பகத்தின் வடிவம் மற்றும் அளவு உள்ளிட்ட தோற்றத்தில் மாறுதல், முலைக்காம்பு உட்புறமாக வளைதல், மார்பிலிருந்து திரவம் வெளியேற்றம், ஆகியவை பொதுவான மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள். ஆண்களைப் பொறுத்தவரை, மார்பகம் சிறிய அளவில் இருப்பதால், எளிதில் உடலின் மற்ற உறுப்புகளுக்கு, பாகங்களுக்கு பரவும் வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர் அகர்வால் தெரிவித்தார்.
பயாப்சி எனப்படும் சிறிய அளவிலான திசு மற்றும் தோலை வெட்டியெடுத்து புற்று பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதிப்பது பொதுவானவது. மார்பகப் புற்றுநோய் என்று வரும் போது, மேமோகிராம் செய்வதும் பயனளிக்கிறது. என்ன வகையான பாதிப்பு, எந்த இடத்தில் புற்றுநோய் தாக்கியிருக்கிறது மற்றும் நோயாளி எந்த நிலையில் இருக்கிறார் என்பதற்கு ஏற்றவாறு சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.