பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு ஆதரவு அளித்துவந்த முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட், பலுசிஸ்தான் அவாமி உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளன.
இதனையடுத்து, 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவையில் தற்போது ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 162 ஆக குறைந்துள்ளது.
முன்னதாக, இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இதன்மீதான விவாதம் நடைபெறுவதற்கு முன்பாகவே, ஆட்சிக் கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசியல் : உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசு என்ற பெருமைமிக்க வரலாறு பாகிஸ்தானுக்கு உண்டு. இஸ்லாமிய மார்க்கத்தையும், குடியரசையும் ஒருங்கே இணைத்த பெருமையும் அதற்கு உண்டு. பஞ்சாபியர்கள், சிந்து, பத்தான், பலூச், முகாஜிர் ஆகிய பல இனங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன. குறிப்பிடத்தக்க அளவிலான இந்துக்களும், கிறித்தவர்களும் வாழ்கின்றன.
இருந்தாலும், அதன் மண்ணில் அரசியல் ஜனநாயக ரீதியிலான ஆட்சி என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு, முக்கிய காரணம் அந்நாட்டின் ராணுவம். பாகிஸ்தான் அரசியலில் ராணுவத்தின் செல்வாக்கு என்பது தவிர்கக முடியாத ஒன்று. அந்நாட்டின், நாடாளுமன்றத்தை நிர்ணயிக்கும் சக்தியாக அது உருவெடுத்துள்ளது. எளிதாக, புரிந்து கொள்ள வேண்டுமெனில், இந்தியா அணி கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இணையான செல்வாக்கை அந்நாட்டின் ராணுவ அதிகாரி பெற்றிருப்பார்.
கிட்டத்தட்ட 76 ஆண்டுகால சுதந்திர பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில், ஒரே முறை தான் ஆளும் அரசாங்கம் (2008- 13) தனது முழு பதவிக்காலத்தையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறது. ஏனைய அரசுகள் யாவும் ராணுவ சதிப் புரட்சி, உள்நாட்டு கலகங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் தூக்கி எறியப்பட்டுள்ளன. பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் ஜனநாயக நிர்வாக முறை சீர்படுத்தப்படும் என்ற உறுதிமொழியுடன் கடந்த 2018ம் ஆண்டு பதவியேற்ற இம்ரான் கான் தலைமையிலான அரசும் தற்போது கவிழ்க்கப்பட்டால் பாகிஸ்தான் நீண்ட நெடிய வரலாற்றின் தொடர்ச்சி எவ்வளவு மூர்க்கத்தனமானது என்பதை நம்மால் உணர் முடியும்.
காலம் | ஆட்சிமுறை | அரசியல் சூழல் |
1957 - 62 | நேரடி ராணுவ ஆட்சி | ஐயூப் கான் ராணுவ சதிப் புரட்சி |
1962 -69 | மறைமுக ராணுவ ஆட்சி (ராணுவ அதிபர் ) | ஜனாதிபதி நிர்வாக முறை அமல்படுத்தப்பட்டது- பிரதமர் பதவி ரத்து செய்யப்பட்டது |
1969-71 | நேரடி ராணுவ ஆட்சி | ராணுவ தளபதி யாஹ்யா கான் ராணுவப் புரட்சி |
1971-77 | உண்மையான ஜனநாயக ரீதியிலான ஆட்சி | சுல்பிகார் அலி பூட்டோ ராணுவச் சட்டத்தை நீக்கினார் (1971 இந்தியா- பாகிஸ்தான் போர் நடந்த காலம் ) |
1977- 85 | நேரடி ராணுவ ஆட்சி | முகமது ஜியா-உல்- அக் இராணுவ சதிப் புரட்சி |
1985-88 | மறைமுக ராணுவ ஆட்சி (ராணுவ அதிபர் ) | மீண்டும் ராணுவ அதிகாரிகள் ஜனாதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். |
1988-99 | ராணுவம் முதன்மையுடன் கூடிய மக்களாட்சி | ஜனாதிபதியின் தன்னிச்சையான அதிகாரம் பறிக்கப்பட்டது. ராணுவத்தின் மறைமுக தலையீடு தொடர்ந்தது. |
1999-2002 | நேரடி ராணுவ ஆட்சி | பர்வேஷ் முஷாரப் ராணுவ சதிப் புரட்சி |
2002-07 | மறைமுக ராணுவ ஆட்சி (ராணுவ அதிபர் ) | மீண்டும் ராணுவத் தளபதிகள் ஜனாதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். |
2008 முதல் தற்போது வரை | ராணுவம் முதன்மையுடன் கூடிய மக்களாட்சி | ராணுவத்தின் மறைமுக தலையீடு தொடர்கிறது. |
ராணுவத்தின் ஆதிக்கம்:
1947ல் ஆங்கிலேயர்கள், இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து பாகிஸ்தான் நாட்டை உருவாக்கினர். விடுதலைப் பெற்ற சமயத்தில் பொருளாதார ரீதியாகவும், அரசியல் நிர்வாக ரீதியாகவும் மிகவும் பலவீனம் கொண்ட நாடாக அது பார்க்கப்பட்டது. 'பாகிஸ்தான்' என்ற தனிநாடு நிலைக்குமா? என்ற அடிப்படை கேள்வியை அதன் ஆட்சியாளர்கள் எதிர் கொண்டனர்.
இஸ்ரேலைப் போன்று முழுக்க முழுக்க மத அடையாள அடிப்படையில் பாகிஸ்தான் கட்டமைக்கப்பட்டது (இரண்டு நாடுகள் பிறப்பிலும் இங்கிலாந்து முக்கிய பங்கு வகிக்கிறது). உலகம் முழுவதும் குறிப்பாக தெற்காசியாவில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தாய் நாடாக தன்னை கருதி வருகிறது.
குடிமகன்களின்- அரசு என்பதைத் தாண்டி இஸ்லாமியர்கள் வந்து தங்கிய/தங்கும்/தங்கபோகும் ஒரு வாழ்விடமாக பாகிஸ்தான் தன்னை கற்பனை செய்து வருகிறது. சவுதி அரேபியா, துருக்கி, இந்தோனேசியா, இரான், இராக் போன்ற நாடுகளில் மதம் முக்கிய பங்கு வகித்தாலும், மொழி, இனம் போன்ற இதர அடையாளங்களும் மக்களை ஒருங்கிணைகின்றன.
ஆனால், பாகிஸ்தானில் இருந்து இஸ்லாமை எடுத்து விட்டால் அது சீட்டுக்கட்டு போல் சரிந்து விழும் என்று அரசியல் சிந்தனையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பொதுவாக, இந்திய அரசியலில் பழங்கால நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை மீளமைக்கப்பட வேண்டும் என்ற பொதுவான அரசியல் சொல்லாடல் நிகழ்கிறது. அகண்ட பாரதம் என்ற நிலப்பரப்பை முதன்மை அடையாளமாகக் கொண்டு தேசியவாத கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், பாகிஸ்தானில் 'நிலப்பரப்பு சார்ந்த அரசியல்' முக்கியத்துவம் பெறவில்லை. உதாரணமாக, 1971ல் போரில் கிழக்குப் பாகிஸ்தானை இழந்தது கூட அதன் அரசியலில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
பாகிஸ்தான் தனக்கே உரித்தான நியாபங்களையும், வரலாற்று நாயகர்களையும் தேடவில்லை. அது, எதிர்காலத்தில் நிற்கும் நிரந்தர எதிரிகளை தேடுகிறது. முடிவில்லா யுத்தத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்கிறது. இந்த சாரசமத்தில் தான் அதன் ராணுவத்தின் முக்கியத்துவத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
பாகிஸ்தான் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்று முடிவெடுக்கும் திறனை அந்நாட்டின் ராணுவம் கொண்டுள்ளது. பல்வேறு காலகட்டங்களில் இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை பகையாளிகயாக அந்நாட்டின் ராணுவம் அடையாளப்படுத்தி வருகிறது. இதற்கேற்ப, மத குருமார்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் ஆகியோரை ராணுவம் தனக்கு சாதகமாக தந்திரமாக பயன்படுத்தி வருகிறது.
ராணுவத்தின் தலையீடுகள் இல்லாமல் அரசின் சொந்த விருப்பங்களை தன்னிச்சையாக நிர்ணயித்துக் கொள்ள விரும்பிய அரசியல்வாதிகள் அகற்றப்பட்டனர். பெனசீர் பூட்டோ சுட்டுக் கொல்லப்பட்டார். நவாஸ் ஷரிப் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். 2018ல் ராணுவத்தின் உதவியால் ஆட்சிக்கட்டில் அமர்ந்த இம்ரான் கானுக்கும் தற்போது இதே நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவ முதன்மை ஜெனரல் குவாமர் ஜாவித் பஜ்வாவுடன் ஏற்பட்ட முரண்பாடு தற்போது விஸ்வரூபமாக மாறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரும்பான்மையை இழந்த பாகிஸ்தான் அரசு.. ராஜினாமா செய்கிறார் பிரதமர் இம்ரான் கான்?
வரலாறு என்பது ஆன்மத்தின் விடுதலை நோக்கிய நகர்வு (History is the Movement of Spirit Towards Freedom) என்பார் ஹெகல். ஒரு தேசத்தின் ஆன்மாவாக விளங்கும் குடியரசை மீட்டெடுக்க அம்மக்கள் முன்வர வேண்டும். இந்தியா, சீனா போன்ற புற சக்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தனக்கான நண்பர்களை, எதிரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இஸ்லாமிய மார்க்கமும், குடியரசும் ஒன்றிணையும் போதுதான் தனிமனித நிறைவு காண முடியும் என்று எடுத்து செல்லக்கூடிய பொறுப்பு, தகுதி, உரிமை அந்நாட்டுக்கு உண்டு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Imran khan, Pakistan Army, Politics