முகப்பு /செய்தி /செய்தி விளக்கம் / ஆன்லைன் மூலம் ‘திருமணமாகாதவர்’ சான்றிதழ் வாங்கும் வழி இதோ..!

ஆன்லைன் மூலம் ‘திருமணமாகாதவர்’ சான்றிதழ் வாங்கும் வழி இதோ..!

மாதிரி படம்

மாதிரி படம்

திருமணமாகாத சான்றிதழ் அந்தந்த பகுதி தாசில்தார்களால் டிஜிட்டல் கையொப்பத்துடன் வழங்கப்படும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாட்டில் கோவில்களில் திருமணத்தை நடத்துவதற்கு கிராம நிர்வாக அலுவலர்களிடம் (விஏஓ) 'முதல் திருமண சான்றிதழ்' (எப்எம்சி) வழங்கும் நடைமுறை முன்னர் இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதை மாநில வருவாய் துறை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மாறாக, கோயில்கள் மற்றும் பதிவுத் துறை அலுவலகங்களில் திருமணம் தொடர்பான சேவைகளைப் பெறுவதற்கு 'திருமணமாகாதவர் சான்றிதழை'(யுசி) பெறுமாறு அறிவித்தனர். திருமணமாகாத சான்றிதழ் அந்தந்த பகுதி தாசில்தார்களால் டிஜிட்டல் கையொப்பத்துடன் வழங்கப்படும்.

கல்யாண சீசன் தொடங்கிவிட்ட நிலையில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ள நபர்கள் 'திருமணமாகாதவர் சான்றிதழை' எப்படி பெறுவது என்று குழம்பிக்கொண்டு இருப்பர். கவலை வேண்டாம்... எளிதாக பெறலாம். வழிமுறையை நாங்க சொல்றோம்.

https://www.tnesevai.tn.gov.in/ போர்ட்டலில் அரை மணி நேரத்தில் வேலை முடிந்து விடும். TN eSevai போர்ட்டலில் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் விண்ணப்பிக்க 10 நிமிடம் தான் ஆகும். இ-சேவை போரட்டலில் ‘பயனாளர் உள்நுழைவு’ மூலம் உள்ளே செல்ல வேண்டும்.

புதியவர் என்றால் பெயர், மாவட்டம், தாலுக்கா, ஆதார் எண், தொலைபேசி எண், மெயில் ஐடி கொடுத்து புதிதாக பதிவு செய்துகொள்ளலாம்.

பாஸ்வேர்ட் உருவாக்கி உள்நுழைந்த பின்னர் "வருவாய் துறை" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அந்த பட்டியலில் இருந்து “ REV-120 திருமணமாகாத சான்றிதழ்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதில் நுழைய  குடிமக்கள் அணுகல் எண் (CAN) பதிவு செய்ய வேண்டும். CAN என்பது TNeGA மூலம் பல்வேறு துறைகள் வழங்கும் அனைத்து e-Sevai சேவைகளையும் பெறுவதற்கு தேவையான எண். ஏற்கனவே பதிவு செய்திருந்தால் CAN எண்ணை வைத்து உள்நுழைந்து கொள்ளலாம்.

CAN பதிவுக்கு விண்ணப்பிக்க, "CAN பதிவு " பொத்தானைக் கிளிக் செய்யவும். பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பெயர், பெற்றோர் விபரம், பாலினம், பிறந்த தேதி, சாதி, மதம், முகவரி குறித்த அனைத்து கட்டாய விவரங்களையும் நிரப்பவும். சமர்பித்ததும் OTP வரும். அதை உள்ளிட்டால் CAN எண் கிடைத்துவிடும்.

அதை வைத்து , ஆதார் எண், பிறந்த தேதி உள்ளிட்டு சான்றிதழ் பக்கத்தில் உள்நுழையவும். விண்ணப்பதாரரின் தற்போதைய முகவரி விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் படிவத்தில் முன் நிரப்பப்பட்டதாகத் தோன்றும். இந்த விவரங்கள் திருத்த முடியாதவை. அதை சமர்ப்பித்ததும் அப்லோட் பக்கத்திற்கு செல்லும்.

போட்டோ, முகவரி, வயது ஆகியவற்றை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பித்து சுய அறிவிப்பு படிவத்தை டவுன்லோட் செய்து கையெழுத்திட்டு அப்லோட் செய்தால் கட்டண பக்கத்திற்கு நகரும். ரூ.60 செலுத்தியதும், விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் சீட்டு கிடைத்துவிடும்.

15 நாட்களுக்குள் டிஜிட்டல் கையெழுத்திடப்பட்ட  ‘திருமணமாகாதவர்’ சான்றிதழ் கிடைத்துவிடும். அதை டவுன்லோட் செய்து கொண்டால் போதும். திருமண நேரத்தில் எந்த டென்ஷனும் தேவை இல்லை.

First published:

Tags: Govt certificates, Marriage