Plasma Donation: பிளாஸ்மா தானம் என்றால் என்ன? எவ்வளவு நாள் இடைவெளியில் தானம் செய்யலாம்? முழு தகவல் இங்கே...

பிளாஸ்மா தானம்

பிளாஸ்மா தானம் செய்தால் மீண்டும் ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்படுவோம் என அஞ்சுகிறார்கள். அந்த பயம் தேவையற்றது என தெரிவிக்கும் நிபுணர்கள், பிளாஸ்மா தானம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் எனவும் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
கொரோனா வைரஸின் 2வது அலையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்வதற்கான தேவையும் அதிகரித்து வருகிறது. பிளாஸ்மா தானம் செய்வதற்கு மக்கள் பலருக்கும் தயக்கம் இருப்பதையும் வெளிப்படையாக பார்க்க முடிகிறது. பிளாஸ்மா தானம் செய்தால் மீண்டும் ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்படுவோம் என அஞ்சுகிறார்கள். அந்த பயம் தேவையற்றது என தெரிவிக்கும் நிபுணர்கள், பிளாஸ்மா தானம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யும் போது, அதன்மூலம் தற்போது கொரோனாவுக்காக சிகிச்சை பெற்றுவருபவரைக் குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு 14 நாட்களைக் கடந்திருந்தால், பிளாஸ்மா தானம் செய்ய முடியும். ரத்தத் தானம் செய்வதுபோன்று பிளாஸ்மாவையும் கொடையளிக்கலாம். இதற்காக அச்சப்பட தேவையில்லை.

பிளாஸ்மா என்றால் என்ன?

ரத்தத்தில் சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் என மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் பிளாஸ்மாவும் உள்ளது. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 55 சதவீத அளவுக்கு பிளாஸ்மா இருக்கும். ரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்கள் ஆகியவை 45 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருள்கள் இருக்கும். ரத்த உறைவை தடுப்பு, நோய்களுக்கு எதிராக போராடுவதில் பிளாஸ்மா முக்கிய பங்கு வகிக்கிறது.



பிளாஸ்மா தானம் யார் செய்யலாம்?

கடந்த 4 மாதங்களுக்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் யாராக இருந்தாலும் பிளாஸ்மா தானம் செய்யலாம். உங்கள் உடலில் இருக்கும் ஆன்டிபாடிகள் கொரோனா வைரஸை வெற்றிகரமாக வீழ்த்தியதைப்போன்று, நீங்கள் தானம் செய்யும் பிளாஸ்மா பாதிக்கப்பட்டவரின் உடம்பில் செலுத்தும்போது அதே வேகத்தில் வைரஸூக்கு எதிராக போராடி, அவரை பாதிப்பில் இருந்து குணமடையச் செய்யும். 2 வாரங்களுக்கு ஒரு முறை நீங்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம். கொரோனா சிகிச்சைக்காக மற்றவர்களிடம் இருந்து பிளாஸ்மா தானமாக பெற்றவர்கள் உள்ளிட்ட சிலர் பிளாஸ்மாவை தானம் செய்ய முடியாது.

கொரோனா : வீட்டு தனிமையில் இருக்கிறீர்களா..? செய்ய வேண்டியவை...செய்யக் கூடாதவை..!



யாரெல்லாம் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது?

* 18 வயதுக்கும் குறைவாக இருப்பவர்கள், 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள்
* 50 கிலோவுக்கு குறைவான எடையில் இருப்பவர்கள்
* தற்போது கர்ப்பமாக இருந்தால் கொடையளிக்க முடியாது
* சிறுநீரக கோளாறு, இன்சுலின் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள்
* டாட்டூ அல்லது மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்திருந்தால் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது.



பிளாஸ்மா தானம் எப்படி செய்யலாம்?

பிளாஸ்மா தானம் செய்ய முன்வருபவர்கள் 1031 என்ற எண்ணுக்கு அழைத்து தங்களின் விருப்பத்தை தெரிவிக்கலாம். உங்கள் மாநிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இணைய தளம் மூலமும் நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். முறையான உடல் பரிசோதனைக்குப் பின்னர் பிளாஸ்மா தானதுக்காக உங்களுக்கு அழைப்பு வரும். அதன்படி, பிளாஸ்மா தான மையத்துக்கு சென்று நீங்கள் கொடையளிக்கலாம்.

 
Published by:Sivaranjani E
First published: