முகப்பு /செய்தி /Explainers / President Election: இந்தியா தனது குடியரசுத் தலைவரை எப்படித் தேர்ந்தெடுக்கிறது?

President Election: இந்தியா தனது குடியரசுத் தலைவரை எப்படித் தேர்ந்தெடுக்கிறது?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

குடியரசுத் தலைவர் தேர்தல் மறைவான வாக்களிப்பு என்ற முறையில் நடத்தப்படுகிறது. இதன்மூலம்,  உறுப்பினர்கள் எந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்படும்.            

  • Last Updated :

இந்திய குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்  2022, ஜூலை 25ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்திய அரசியலமைப்பின் 62வது பிரிவின் படி, குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் முடிவுறுவதால் ஏற்படும் காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தலை, அந்த காலம் முடிவுறுவதற்கு முன்பே நடத்தி முடித்தல் வேண்டும். மேலும், 1952ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டத்தின் படி (President Election ACt , 1952), குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு, பதவிக் காலம் முடிவுறுகிற 60 நாட்களுக்கு முன்பாக வெளியிட வேண்டும்.

மாநில சட்டப்பேரவைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்றத்துக்கு தேர்ந்ததெடுக்கப் பெற்ற உறுப்பினர்களையும் கொண்ட வாக்காளர் கொண்ட குழுமத்தால் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இங்கே, நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்தியாவில் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் பாராளுமன்றமும், மாநில சட்டப்பேரவையும் சமமான முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. ஒன்றிய அமைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையை (A federation with strong centralizing tendency) இந்திய அரசியலமைப்பு வடிவமைத்துள்ளளது என்பதற்கு குடியரசுத் தேர்தல் மிகச் சிறந்த உதாரணமாக அமையும்.

குடியரசுத் தலைவர் ஏன் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை: 

குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் முறை குறித்து இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தில் பல்வேறு விவாதங்கள்  எழுப்பப்பட்டன. மக்களாட்சி முறை அமைந்த குடியரசை நிறுவும்  வகையிலும், நாட்டின் ஒருமைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலும் குடியரசுத் தலைவர், நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பலர் முன்வைத்தனர். ஆனால்,  அண்ணல் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் நேரடித் தேர்தல் பல்வேறு முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்று எடுத்துரைத்தனர்.

உதாரணமாக, இந்தியா அரசியலமைப்பு நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட அமைச்சரவை தான் உண்மையான அதிகாரத்தைக் கொண்டதாக இருக்க முடியும்.  எனவே, அமைச்சரவையின் அறிவுரையின் பெயரிலே குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும் என்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம்.

மேலும், குடியரசுத் தலைவர் என்ற மனிதரை முன்வைப்பது அவசியமற்றது. அமெரிக்கா போன்ற நாடுகளில்  ஒட்டுமொத்த அரசியலும் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதோடு நின்று விடுகிறது. தனிமனிதனின் வெற்றி/தோல்வி என்றளவில் தான் அரசியல் பேசப்படுகிறது. ஆனால், இந்தியாவின் அரசியல்  தனிமனிதனைப் பற்றியதல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களவைக்குத் தான் தேர்தல் நடத்தப்படுகிறது. நாடாளுமன்றம் தான் பிரதமரை கைகாட்டுகிறது. 5 ஆண்டுகள் செயல்பட வைக்கிறது.

இந்த விவாதங்களின் பயனாகவே, தேர்ந்தடுக்கப்பெற்ற வாக்காளர்களைக் (Elected Representative) கொண்டே குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறையை இந்திய அரசியலமைப்பு  நிர்ணய மன்றம் ஏற்றுக் கொண்டது.

தேர்ந்தெடுக்கும் முறை: 

குடியரசுத் தலைவர் தேர்தலில், ஒன்றிய அமைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையை (A federation with strong centralizing tendency) பிரதிபலிக்கும் விதமாக இரண்டு முக்கிய கோட்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.

பிரிவு 55: குடியரசுத் தேர்தலில் பல்வேறு மாநிலங்களுக்குள்ள பிரிதிநிதித்துவ விகிதப்பாடு  (Uniformity of Representation) முடிந்தளவு ஒரே சீர்மையானதாக இருக்க வேண்டும்.

ஏன்?உதாரணமாக, டெல்லி, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களை எடுத்துக் கொள்ளலாம்.1971, மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி,டெல்லி  மக்கள் தொகை -  40,65,698, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை - 70தமிழகத்தின் மக்கள் தொகை - 4,11,99,168, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை - 234எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில், சட்டப்பேரவை உறுப்பினர் மு.க.ஸ்டாலின் ஒற்றை வாக்கின் மதிப்பு -170ஆகவும். அரவிந்த் கெஜ்ரிவாலின் வாக்கின் மதிப்பு 58 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், மு.க.ஸ்டாலின் அதிகமான மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.  உ.பி சட்டமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யநாத்தின் ஒற்றை வாக்கின் மதிப்பு 208 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.

2 . குடியரசுத் தலைவர் தேர்தலில், மாநிலங்கள் அனைத்திற்கும் ஒன்றியத்திற்கும் இடையே சரிசமநிலை எய்திட வேண்டும் என்று அரசியலமைப்பு கூறுகிறது. 

ஏன்?நாடாளுமன்ற இரண்டு அவைகளிலும் தேர்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை - 776அனைத்து  மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 4,120எனவே, 4,120 உறுப்பினர்கள் வாக்கின் மதிப்புக்கு இணையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு இருத்தல் வேண்டும்.

முதலாவது கோட்பாட்டைத் தீர்மானிக்க, ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும், அந்த மாநிலத்தின் மக்கள் தொகையை அச்சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையால் வகுத்திட வேண்டும் ;

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை, 4,11,99,168/மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் (234)  =  1,76,000.

இந்த எண்ணை 1000-ஆல் வகுத்தல் வேண்டும்.

அதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டப்பேரவை  உறுப்பினர் ஒருவரின் வாக்கு மதிப்பு 176 ஆக கணக்கிடப்படுகிறது. தமிழ்நாட்டு சட்டமன்ற  உறுப்பிர்களின் ஒட்டுமொத்த மதிப்பு 41184 (176 ×234) ஆக உள்ள நிலையில் ஒவ்வொரு மாநில சட்டப்பேரவைக்கு மக்கள் தொகை எண்ணிக்கையைப் பொறுத்து இந்த மதிப்பு  மாறுபடும். உதாரணமாக, உத்தர பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு 83824 (208 ×403)ஆக உள்ளது.

இதன் படி , இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலச் சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த மதிப்பு 5,49,495 ஆக உள்ளது .

இரண்டாவது, கோட்பாடு:   

நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும்,  அனைத்து மாநிலச் சட்டமன்றப் பேரவைகளின் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை, நாடாளுமன்ற அவைகள் இரண்டிற்கும் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களை மொத்த எண்ணிக்கையால் வகுக்க வேண்டும்.

அதாவது,

Total  no of votes assigned to the elected members of the state assembly (5,49,495 - மேலே கணக்கிட்டது )

--------------------------------------

Total no of Elected members of both house of the parliament   (776)

= 708 (1000 ல் வகுத்தல் வேண்டும்)

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வாக்கின் மதிப்பு 708ஆக உள்ளது. கிட்டதட்ட தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் மதிப்பை விட 4 மடங்கு அதிக மதிப்பு  கொண்டதாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்கு உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்கின் மதிப்பின் = 776*708 =  5,49,408

எனவே, 10,98,903 மதிப்பிலான வாக்குகள் குடியரசுத் தேர்தலில் செலுத்தப்படுகின்றன.

top videos

    மேலும், குடியரசுத் தலைவர் தேர்தல், ஒற்றை வாக்கு வாக்கு வழியிலான வீதச்சார்பற்ற முறையில் நடத்தப்படுகிறது (proportional Representation By means of single transferable vote ). மேலும், குடியரசுத் தலைவர் தேர்தல் மறைவான வாக்களிப்பு என்ற முறையில் நடத்தப்படுகிறது. இதன்மூலம்,  உறுப்பினர்கள் எந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்படும்.

    First published:

    Tags: President