Home /News /explainers /

செல்போனுக்குள் ஒளிந்திருக்கும் ஆன்லைன் சூதாட்டம் எனும் அரக்கன்! முற்றுப்புள்ளி வைப்பதாக முதல்வர் வாக்கு… சட்டம் சொல்வதென்ன?- Explainer

செல்போனுக்குள் ஒளிந்திருக்கும் ஆன்லைன் சூதாட்டம் எனும் அரக்கன்! முற்றுப்புள்ளி வைப்பதாக முதல்வர் வாக்கு… சட்டம் சொல்வதென்ன?- Explainer

எந்த வகையில் செயல்பட்டால் ஆன்லைன் ரம்மியை (online rummy) ஒழிக்க முடியுமோ அதனை குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து வருவதாக சரவணன் கூறியுள்ளார்.

எந்த வகையில் செயல்பட்டால் ஆன்லைன் ரம்மியை (online rummy) ஒழிக்க முடியுமோ அதனை குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து வருவதாக சரவணன் கூறியுள்ளார்.

எந்த வகையில் செயல்பட்டால் ஆன்லைன் ரம்மியை (online rummy) ஒழிக்க முடியுமோ அதனை குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து வருவதாக சரவணன் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
இந்த புத்தாண்டு அனைவருக்கும் ஒரே மாதிரியாக அமைந்துவிடவில்லை. ஜனவரி 1ம் தேதி, சென்னையில் ஆன்லைன் ரம்மியால் ஒரு குடும்பமே இல்லாமல் போனது. பெருங்குடி பகுதியில் 35 வயது பெண், பதினொரு வயது மற்றும் ஒரு வயதுடைய குழந்தைகள் என நான்கு பேர் கொண்ட குடும்பம் அவர்களது வீட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்டனர். 36 வயதான வங்கி ஊழியர் மணிகண்டன் சமையல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

விசாரணையில் மணிகண்டன் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாகவும், இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. சம்பவத்தன்று, ஆத்திரத்தில், அவர் தனது மனைவியை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொன்றுள்ளார். மேலும் தனது இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், ஜனவரி 3 ஆம் தேதி, சென்னை திருவான்மியூர் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் ரூ.1.32 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடியதாக தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கிய ரயில்வே ஊழியர், ரயில்வே டிக்கெட் கவுன்டரில் தன்னிடம் இருந்த பணத்தை துப்பாக்கி முனையில் மூன்று பேர் கொள்ளையடித்ததாக நாடகம் அரங்கேற்றிய சம்பவத்தில், தனது மனைவியுடன் சேர்ந்து அந்த ரயில்வே ஊழியரே பணத்தை கொள்ளையடித்தது விசாரணையில் அம்பலமானது. இதற்கிடையில், இந்த இரண்டு முக்கிய சம்பவங்களிலும், ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிக்கப்பட்ட இந்த இருவரும் நல்ல பணியில் இருந்தவர்கள் மற்றும் அதிக ஊதியம் பெற்றவர்கள் ஆவர். இன்றைய காலக்கட்டத்தில், கசப்பான உண்மை என்னவென்றால், நம் உள்ளங்கையில் மறைந்திருக்கும் மொபைல்போன்கள் மூலமாகவும் மரணங்கள் வந்தடைகின்றன.

இதையும் படிங்க | பனை மரங்கள் ஏன் அவசியம்? கடல் அரிப்பை தடுக்க பனை மரங்கள் எவ்வாறு பங்களிக்கின்றன?

அதிமுக ஆட்சியின் போது, ​​2020 நவம்பரில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாநிலம் முழுவதும் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து, கடன் தொல்லையால் 12 பேர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அந்த விளையாட்டை தடை செய்து, அதன் அமைப்பாளர்கள் மற்றும் விளையாடுபவர்களை கைது செய்ய சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று கூறினார். குறிப்பாக, கோவையில் 28 மற்றும் 32 வயதுடைய இருவர் 2020 நவம்பரில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டனர். பின்னர், தடையைக் கொண்டு வந்ததும் அதைச் சரியாகச் செயல்படுத்தாமல் இருப்பதும் அதிமுகவின் ‘அரசியல் ஸ்டண்ட்’ என்று திமுக போன்ற கட்சிகள் விமர்சித்தன.

2021ஆம் ஆண்டில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாடு அரசின் கேமிங் சட்டத்திருத்தம் ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் தமிழக அரசின் சட்டத் திருத்தத்தை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை ஏற்று நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. அத்தகைய தடை அரசியலமைப்பிற்கு முரணானது என்றும், இந்திய அரசியலமைப்பின் 19(1) (g) விதியை மீறுவதாகவும் இருக்கும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

பின்னர், டிசம்பர் 2021-ல், ரம்மி போன்ற ஆன்லைன் கேம்களை தடை செய்யும் 2021ஆம் ஆண்டின் தமிழ்நாடு கேமிங் (திருத்தம்) சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இருப்பினும், இந்த விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் இயற்றுவதற்கு தடை எதுவும் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் குறிப்பிடிருந்தது.

இதையும் படிங்க | பச்சிளங் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நிமோனியா! விழிப்புணர்வு மூலம் தடுக்க முடியுமா? முதன்மை மருத்துவர் சொல்வது என்ன?- பகுதி 1

இதுகுறித்து நியூஸ்18 இணையப்பிரிவிடம் பேசிய வழக்கறிஞர் மற்றும் திமுகவின் சரவணன் அண்ணாதுரை, “ஆன்லைன் ரம்மியை எதிர்த்து ஏற்கெனவே அதிமுக அட்சியில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அவசரகதியில் அந்த சட்டம் சரியான முறையில் நிறைவேற்றப்படாத நிலையில், சட்ட சிக்கல்களால் நீதிமன்றம் அதற்கு எதிராக சென்று ரத்து செய்துவிட்டது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. மேலும், இதற்கு தேவையான சரியான சட்டம் என்னவோ அதை அமல்படுத்துவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

எந்த வகையில் செயல்பட்டால் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க முடியுமோ அதனை குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம். இதற்கு தடையாக இருப்பது எதுவென்றால், ‘ரம்மி ஒரு விளையாட்டு; அது சூதாட்டமல்ல’ என்பது உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பாக உள்ளது. எனவே, இதனை எப்படி கடந்து சாமானியர்களின் வாழ்வையும், இளைஞர்களின் வாழ்வையும் மீட்டெடுப்பது என்பது குறித்து தீவிர ஆலோசனை நடைபெறுகிறது. நிச்சயமாக தமிழக அரசு இதற்கு ஒரு சிறந்த தீர்வினை கொண்டு வரும். அரசுக்கு கொள்கை முடிவு எடுக்க அதிகாரம் இருந்தாலும் அரசியல் அமைப்புக்கு கட்டுப்பட்டாக வேண்டும். அதில் தலையிடக்கூடிய அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்குதான் உள்ளது. எனவே, அதுவே நமக்கு பெரிய தடைக்கல்லாக உள்ளது. இதில் உள்ள சிக்கல்களை கலைந்து ஒரு நல்ல முடிவு விரைவில் எடுக்கப்படும், அதில் சந்தேகம் வேண்டாம்” என்று கூறினார்.

மேலும், “அரசாணை மூலம் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் உரிமை தமிழக அரசுக்கு உள்ளது. ஆனால், உடனடியாக நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு வாங்கிவிடுவார்கள். மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தால் தமிழகத்திற்கு மட்டும் தடையை கொண்டுவர மாட்டார்கள். எனவே, ஆன்லைன் ரம்மி போன்ற விளம்பரங்களை தடை செய்வது தற்போதைய குறைந்தபட்ச தேவையாக உள்ளது. அதற்கான ஆலோசனையும் தற்போது செய்து கொண்டிருக்கிறார்கள். முதல்வரின் கவனத்தில் இது இருப்பதால் கண்டிப்பாக இதற்கு ஒரு முடிவு விரைவில் வரும்” என்று வழக்கறிஞர் சரவணன் கூறினார்.

இதையும் படிங்க | பச்சிளங் குழந்தைகள் வாரம் கடைபிடிக்கப்படுவது ஏன்? அதன் நோக்கம் என்ன? முதன்மை மருத்துவர் பகிரும் தகவல்கள்- பகுதி 2

சமீபத்தில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக சட்டத்தை பாதுகாக்க தவறியதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை சாடினார். இந்நிலையில், பாமக போன்ற அரசியல் கட்சிகளும் மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை விரைவில் தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தன. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Archana R
First published:

Tags: Explainer, Online rummy

அடுத்த செய்தி