சமீபத்தில் திருப்பத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 மாணவன் ஒருவன் வகுப்பறைக்குள்ளேயே ஆசிரியரை அவமதிக்கும் வகையிலும் அறுவெறுக்கத்தக்க வகையிலும் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிய நிலையில் அந்த மாணவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டான். இதனை தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பாக தேனி தேவதானப்பட்டியில் வகுப்புக்கு தாமதமாக வந்த மாணவனை கேள்வி கேட்ட ஆசிரியர் கத்தியை காட்டி மிரட்டப்பட்டார்.
இப்படியான சம்பவங்கள் சமீப காலமாக அரங்கேறிக்கொண்டு வருகின்றன. இதற்கு என்ன காரணம்? பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் மொபைல் போன் கலாச்சாரமும் இதற்கு ஒரு காரணமா? இதுகுறித்து செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உதவி பேராசிரியர் மற்றும் மருத்துவ உளவியலாளராக இருக்கும் நித்யாவிடம் பேசினோம்.
அவர் கூறியதாவது, ஒருவரின் வாழ்வில் மொபைல் போன் என்பது ஆக்கத்திற்கும் பயன்படுகிறது. ஒரு சிலரின் வாழ்வில் அழிவிற்கும் அச்சுறுத்தலுக்கும் பயன்படுகிறது. கொரோனா நேரத்தில் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் இருந்த நேரத்தில் பாடங்களுக்காக மொபைல் பயன்பாடு அதிகரித்தது. ஆனால், அறிவு பகிர்தலுக்கு மட்டும் அது வழிவகுக்கவில்லை. அதற்கு அடிமையாகவும் மொபைல் போன் வழிவகுத்து விட்டது. பெரும்பாலான பெற்றோருக்கும் அவர்களின் குழந்தைகள் பாடம் கவனிக்கிறார்களா, கேம் விளையாடுகிறார்களா இல்லை சேட் செய்து கொண்டிருக்கிறார்களா என்பதை கவனிக்க தவறிவிடுகிறார்கள். சமூகமயமாக்கல் என்பது பள்ளி மாணவர்களிடையே வெகுவாக குறைந்து விட்டது.
மாணவர்கள் என்ன மாதிரியான விஷயங்களை இணையத்தில் தேடி பார்க்கின்றனர் என்பது தெரிவதில்லை. சில மாணவர்கள் வன்முறையான வீடியோக்களை பார்க்கின்றனர். விளையாடவும் செய்கின்றனர். அது, விரோதமான அல்லது வன்முறை நடத்தை மற்றொருவரை நோக்கிய அணுகுமுறையாகவே மாறிவிடுகிறது. மேலும், உணவு குறித்த வீடியோக்கள் வந்துகொண்டே இருந்தால், அவர்கள் அடுத்தபடியாக உணவை ஆர்டர் செய்ய தொடங்கிவிடுகின்றனர். ஆகவே, இதில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இவற்றுக்குள்ளேயே குழந்தைகள் அடைபட்டு இருந்தால், அவர்களுக்கு பள்ளிக்குச் செல்லும் ஆர்வம் குறையும் அல்லது பயம் ஏற்படும்.
அதனால் என்னவாகும்? மாணவர்களுக்கு கோபம் அதிகரித்து பொருத்தமற்ற நடத்தையை பள்ளியில் வெளிகாட்டத் தொடங்கிவிடுவர். மேலும், சமூகமயமாக்கல் இல்லாததால் மாணவர்களுக்கு இடையே கோஷ்டி மோதலுக்கும் வழிவகுக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஆசிரியர்கள் முன் மாணவர்கள் பேசவே தயங்குவர். ஆனால் இப்போது ஆசிரியர்கள் மீதே வன்முறையை தொடுக்க மாணவர்கள் தயங்குவதில்லை என்றால் அவற்றுக்கு மேற்கூறியவையே காரணம்.
தொழில்நுட்பம் தேவை; ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். பொதுவாக, வீட்டில் மாணவர்களுக்கு மொபைல் போன் கொடுக்கிறோம் என்றால் அதனை கண்காணிக்க வேண்டும். வீட்டில் எல்லோரும் இருக்கும் இடத்தில் இணையத்தை பயன்படுத்த வைக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, குழந்தைகளிடம் திறந்த உரையாடல் வைத்துக்கொள்வது பெற்றோரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அது மிக மிக அவசியம்.
பள்ளிக்கூடங்களுக்கு மொபைல் போன் கொண்டுவர வேண்டிய அவசியம் பெரிதாக இல்லை. பெற்றோரிடம் ஏதேனும் தகவல் தேவையென்றால் பள்ளியில் உள்ள ஆபிஸ் போனில் இருந்து கூட ஆசிரியர்கள் அனுமதியுடன் தகவலை பரிமாறிக்கொள்ள முடியும். சில நேரங்களில் மொபைல் அவசியம்தான் அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பள்ளிக்கூடங்களுக்கு மொபைல் கொண்டு செல்லும் மாணவர்கள் அவரவர்களின் மொபைலை ஒப்பிட்டு பேச ஆரம்பித்தால் அது வேறு பிரச்சனையில் சென்று முடியும்.
அதேபோல், மாணவர்களிடத்திலும் ஆசிரியர்கள் எப்போதும் கோபத்தை காட்டாமல் பண்புடன் எடுத்துச் சொல்வதும் கூட அந்த மாணவரின் நடத்தையில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு மாணவனை இன்னொரு மாணவனுடன் ஒப்பிட்டு பேசுவது அந்த மாணவனை ஏதோ ஒரு விதத்தில் பாதித்து அதை கோபமாக மாற்றும். ஆகவே, இதில் அனைவரின் பங்கும் அவசியம்தான்! என்று கூறுகிறார் மருத்துவ உளவியலாளர் நித்யா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Explainer, Mobile phone, Students