Home /News /explainers /

தேசிய நினைவுச் சின்னமாகுமா ராமர் பாலம்? - சேது சமுத்திர திட்ட வரலாறும் சர்ச்சைகளும் ஒரு பார்வை

தேசிய நினைவுச் சின்னமாகுமா ராமர் பாலம்? - சேது சமுத்திர திட்ட வரலாறும் சர்ச்சைகளும் ஒரு பார்வை

Ram Setu | ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது.

Ram Setu | ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது.

Ram Setu | ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது.

  • News18 Tamil
  • 5 minute read
  • Last Updated :
  • Chennai, India
தமிழ்நாட்டை மையமாக கொண்ட பல விவகாரங்கள் உச்சநீதிமன்றத்தில் பல வருடங்களாக பலமுறை விசாரணைக்கு மீண்டும் மீண்டும் வருவதை வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக, ஏழு தமிழர்கள் விடுதலை,  காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் போன்றவை உச்சநீதிமன்றத்தில் ஆண்டுக் கணக்கில் விசாரிக்கப்பட்ட வழக்குகள். இந்த வழக்குகளைப் பொறுத்தவரை, தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு நிலைப்பாட்டிலும், மத்திய அரசு வேறு நிலைப்பாட்டிலும் இருக்கும். ஆனால், சேது சமுத்திர வழக்கு சற்று வித்தியாசமானது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடு பலமுறை ஒன்றாக இருந்தபோதும் இந்த விவகாரம் முடிவுக்கு வரவில்லை. தற்போது, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது சேது சமுத்திரத் திட்டம். சேது சமுத்திர திட்டத்தைப் பொறுத்தவரை சுப்ரமணிய சுவாமி முக்கிய எதிர்தாரராக இருந்துவருகிறார்.

ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம்:

இந்தியாவின் கடைக்கோடிப் பகுதியான ராமேஸ்வரத்திற்கும், இலங்கையின் மன்னார் தீவுகளுக்கும் இடையே அமைந்துள்ள இந்தப் பகுதியைத்தான் ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் என்று அழைக்கிறோம். இதனை இந்தியாவில் ராமர் பாலம் என்று குறிப்பிட்டாலும் சர்வதேச அளவில் ஆதாம் பாலம் என்ற பெயரிலும் குறிப்பிடப்படுகிறது. 48 கிலோ மீட்டம் நீளம் கொண்ட இந்தப் பாலம் சுண்ணாம்புக் கற்களால் ஆனது. ராமாயணத்தை நம்புபவர்கள் இதனைப் புராணக் கண்ணோட்டத்துடன் அணுகுகின்றனர். ராவணனால் கடத்தப்பட்ட சீதையைக் காப்பாற்ற ராமன் இலங்கை செல்வதற்காக உருவாக்கப்பட்ட பாலம்தான் இது என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. அதனால், தீவிரமாக இந்து நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் இதனை புனிதப் பகுதியாக கருதுகின்றனர். வால்மீகி எழுதிய ராமாயணத்திலும் ராமர் பாலம் குறித்த விவரங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது.

புராண ரீதியாக ராமர் பாலம் என்று இந்தப் பகுதி அறியப்பட்டாலும் இந்தப் பாலம் எப்படி உருவானது என்று அறிவியல்பூர்வமாக இதுவரையில் நிறுவப்படவில்லை. தேசிய கடல்சார் நிறுவனம் (என்.ஐ.ஓ) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) ஆகிய இரண்டு அமைப்புகள் ராமர் சேது பாலத்தை ஆய்வு செய்ய அனுமதி கோரியதன் அடிப்படையில் மத்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இருப்பினும், அந்த ஆய்வு முடிவுகள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.சேது சமுத்திரத் திட்டம்:

பாக் ஜலசந்தியையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் அல்லது ராமர் பாலம் என சொல்ல கூடிய பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாய்தான் ‘சேது சமுத்திர கால்வாய்’ ஆகும். இதுவரையிலும் பாக் ஜலசந்தியிலிருந்து மன்னார் வளைகுடா, இந்திய பெருங்கடலில் செல்லும் கப்பல்கள், இலங்கையை சுற்றிதான் சென்று வருகிறது. அவ்வாறு சுற்றி செல்லாமல் குறுக்கு வழியில் சென்று வங்கக்கடலை அடைய செய்யும் திட்டமே ‘சேது சமுத்திர கால்வாய் திட்டம்’.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து சென்னை, எண்ணூர், விசாகப்பட்டினம், பாரதீப், கொல்கத்தா உள்ளிட்ட கிழக்கு கடற்கரை துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் இலங்கையை சுற்றி செல்ல வேண்டிய் நிலை இருக்கிறது. இதனால் சுமார் 254 முதல் 424 கடல் மைல் வரை கூடுதல் பயணம் மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக கூடுதலாக 32 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் பெரும் பொருளாதார இழப்பை இந்தியா சந்தித்து வருகிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு இடையிலான 424 கடல்மைல் தூரம் வரை குறையும். பயண நேரம் 30 மணி நேரமும் குறையும்.

300 மீட்டர் அகலமும், 167 கி.மீ நீளமும், 12 மீட்டர் ஆழமும் கொண்ட கால்வாய் திட்டம், 1860ஆம் ஆண்டு இந்திய கடற்படையை சேர்ந்த ஏ.டி.டெய்லரின் சிந்தனையில் உதித்தது. அதன்பிறகு 1955-ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த போது ராமசாமிமுதலியார் தலைமையிலான குழு ரூ.9.98 லட்சத்திலும், 1983-ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது லட்சுமிநாராயணன் தலைமையிலான குழு ரூ.282 கோடியிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதன்பிறகு, பிரதமர் மன்மோகன்சிங் இத்திட்டத்தை கடந்த 2005ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி மதுரையில் துவக்கி வைத்தார். 2,427 கோடி ரூபாய் அதுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், பல்வேறு சர்ச்சைகளின் காரணமாக இதுவரை முற்று பெறவில்லை. மறைந்த தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பெருங்கனவு கொண்டிருந்தார். அவரின் தொடர்ச்சியாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டார். 2004- 2014-ம் ஆண்டு வரை மத்தியில் தி.மு.க கூட்டணியில் இருந்தநிலையிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.கருணாநிதி ஆதரவு - ஜெயலலிதா எதிர்ப்பு:

சேது சமுத்திரத் திட்டம் கருணாநிதியின் கனவுத் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. நீண்டகாலமாக சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற தீவிர முயற்சிகளை எடுத்து வந்தார் கருணாநிதி. 2004-ம் ஆண்டு மத்தியில் தி.மு.க கூட்டணியுடன் கூடிய காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தது. அப்போது, 2005-ம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டத்துக்கு 2,427 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

2006-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு, அ.தி.மு.க சார்பில் இந்தத் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்தார். பின்னர், 2008-ம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னர், 2011-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா சேதுசமுத்திரத் திட்டக்கு தமிழக அரசின் சார்பாக எதிர்ப்பு தெரிவித்தார். சூழலியல் ரீதியாகவும் இந்தத் திட்டம் பெறும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வாதிட்டார். கருணாநிதி தரப்பில் பொருளாதார ரீதியாக தமிழகத்துக்கு பெரும் நன்மை பயக்கும் திட்டம் என்று வாதிட்டார். இந்தத் திட்டத்துக்காக பேசும்போது, ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று கேள்வி எழுப்பினார். இது தேசிய அளவில் பெரும் பேசுபொருளானது. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் ராமர் சேது சமுத்திரத் திட்டம் என்று கூட பெயர் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

மீனவர்கள், சூழலியலாளர்கள் எதிர்ப்பு:

சேது சமுத்திரத் திட்டத்துக்கான முக்கிய எதிர்ப்பு மத நம்பிக்கையாளர்களிடம் இருந்துதான் பெரிய அளவில் வந்தன. ஆனால், அது மட்டுமே எதிர்ப்பு அல்ல. சேது சமுத்திரத் திட்டத்துக்கு ராமேஸ்வரப் பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல, சூழலிலியல் ஆர்வலர்கள் தரப்பில் மன்னார் வளைகுடா பகுதி ஒரு பாதுகாக்கப்பட்ட உயிர்கோளக் காப்பகமாகவும் கடல்சார் தேசிய பூங்காவும் அறிவிக்கப்பட்ட பகுதி. இங்கு மீன்பிடிக்கக் கூட அனுமதி கிடையாது. ஏராளமான தனித்துவம் வாய்ந்த கடல் உயிரிகள் இந்தப் பகுதியில் வாழ்வதால் இந்தத் திட்டத்தால் பல்லுயிர் சூழல் பாதிக்கப்படும் என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிரான வழக்குகள்:

சேது சமுத்திரத் திட்டத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்தாலும், உச்ச நீதிமன்ற தடை உத்தரவுதான் திட்டம் நிறைவேற்றப்பட முடியாததற்கு முக்கிய காரணம். சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் வழக்குத் தொடர்ந்தன. குறிப்பாக, தற்போதைய பா.ஜ.க எம்.பியான சுப்ரமணிய சுவாமி முதலில் வழக்குத் தொடர்ந்தார். சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த ஆறாவது கடல் பாதையில் ராமர் பாலம் இருப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர். அதனால், அந்தப் பாதையில் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று 2007-ம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தார்.

இதே கோரிக்கையை முன்னிருத்தி ஜெயலலிதாவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதனையடுத்து, ஆறாவது வழித் தடத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த 2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர், மாற்றுப் பாதையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. அதன்பிறகு, ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சுப்ரமணிய சுவாமி சமீபத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக விரைவில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ராமர் பாலம் தேசிய நினைவுச் சின்னமாக அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் சேது சமுத்திரத் திட்டம் என்றும் நிரந்தரமாக நிறைவேற்றப்பட முடியாத கனவுத் திட்டமாகிவிடும்.
Published by:Archana R
First published:

Tags: Rameshwaram, Subramaniyan swamy, Supreme court

அடுத்த செய்தி