கி.பி. 257 ஆம் ஆண்டு சமயத்தில் ரோமானிய பேரரசை அரசன் கிளாடியஸ் மிமி கொடூரமாகவும், கோமாளித்தனமாகவும், ’23 ஆம் புலிகேசி’ வடிவேல் போல் ஆட்சிபுரிந்த காலம். ரோமாபுரி மக்களோ காதலின் பேரன்பினால் காதல் போதையில் திளைத்து கொண்டிருந்தனர். போர் படையை வலுவாக்குவதில் வெறி கொண்ட மன்னனுக்கு மக்களின் இந்த பெருங்காதல் பெருங்கோபத்தை ஏற்படுத்தியது. ரோமாபுரி நாட்டில் இனி காதல் என்ற ஒரு சொல்லே இருக்கக் கூடாது, அரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைது செய்யப்பட்டு பொது இடத்தில் தலைதுண்டிக்கப்படும் என்று அரசன் ஆணையிட காதலும்… திருமணமும் கனவாகிப் போனதை எண்ணி சோகத்தில் மிதந்தது ரோம்.
அரசனின் தடையை மீறி காதலிக்கும் ஆண்களும் பெண்களும் கைது செய்யப்பட்டு பொது இடத்தில் கல்லால் அடித்து தலை துண்டித்து கொல்லப்பட்டார்கள். இச்சமயத்தில் தான் பூந்தோட்ட காவல் காரனாக வந்தார் பாதிரியார் வாலண்டைன். அவர் காதலர்களுக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்தார். காதலர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைக்கும் வாலண்டனை பற்றி அரசனுக்கு தெரியவர வாலண்டைனை கைது செய்து சிறையில் அடைத்தார் கிளாடியஸ். "மதம்ங்கிறது மனுசங்ககிட்ட மட்டும்தான் இருக்கு... ஆனா காதல்ங்கிறது காக்கா குருவிகிட்ட கூட இருக்கு" என்ற பூவே உனக்காக விஜய் போல் வசனம் பேசி மரண தண்டனைக்கும் தயாரானார் வாலன்டைன்.
மரணதண்டனை நிறைவேற்றபடுவதற்கு சில நாட்கள் இருக்கும் போது, வாலண்டைனுக்கும், சிறை துறை அதிகாரியின் பார்வை அற்ற மகள் அஸ்டோரியாசுக்கும் காதல் மலர்ந்தது.
மரணத்தின் வாசற்படியில் நின்றுகொண்டிருந்த வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்த சிறைத் துறைத் தலைவனான அவளது அப்பா மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். வாலண்டைன் மேல் உள்ள காதலால் சின்ன தம்பி குஷ்புவாய் ஒரு கூண்டு கிளியாய் தவித்தாள் காதலி அஸ்டோரியஸ்.
கடும் சிறை பாதுகாப்பையும் மீறி, தனது காதலிக்கு வாழ்த்து அட்டை ஒன்றை எழுதினார் வாலண்டைன். பல பக்கங்களில் தன் காதலை கவிதையாய் வடித்தார் வாலண்டைன்.
வாலண்டைனின் காதல் கடிதம் தகவல் ரோமாபுரி முழுவதும் பரவி வாலண்டைன் புகழ் பெற்றார். ஆனால் காதலின் விதியை சதி மாற்றி எழுதியது.. 270வது வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி வாலண்டைனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
வாலண்டைனை வாழ்த்த அதுமுதல் அவரது இறந்த நாளை ’காதலர் தினம்’ அதாவது வாலண்டைன்ஸ் டே என கொண்டாடி வருகிறது உலகம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lovers day, Valentine's day