ஒரு நாட்டின் அரசை மாற்றக்கூடிய அல்லது தீர்மானிக்கக்கூடிய அளவுக்கு சமூகவலைதளங்கள் வளர்ந்துள்ளன. அரசிடம் கோரிக்கையை எளிதாக கொண்டு சேர்க்கவும், ஆட்சியாளர்களின் தில்லமுல்லுகளை நேரடியாக மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தவும் பாலமாக செயல்படும் சமூகவலைதளங்கள் பொழுபோக்கு தளமாகவும், மிகப்பெரிய வணிக, வியாபார சந்தையாகவும் திகழ்கிறது. அதேவேளையில் போலிச்செய்திகளின் கூடாரமாகவும் சமூகவலைதளங்கள் மாறியிருப்பது கவலையளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.
போலிச் செய்திகள்
போலிச்செய்திகள் என்பது தவறான அல்லது திரிக்கப்பட்ட தகவல்களை பரப்புவது மற்றும் உண்மை தன்மையை ஆராயாமல் யாரோ அனுப்பிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்புவது போலிச் செய்திகள் ஆகும். சமூகவலைதளங்கள் இருபக்கமும் கூர்முனை கொண்ட கத்தியாக இருப்பதால், எதிரியை வீழ்த்துவதற்கு இட்டுக்கட்டிய அல்லது கட்டுக்கதைகளை புகைப்படங்களாக சித்தரித்து மக்களிடையே பரப்பப்படும் பொய் தகவல்கள் ஆகும். வேறு எங்கோ பதிவு செய்யப்பட்ட வீடியோவை, மற்றொரு சம்வத்தின் வீடியோவாக சித்தரித்து அனுப்புவதும் போலி செய்தியின் ஒரு ரகம்.
போலிச்செய்திகளின் வகை
தவறான உள்நோக்கம் இல்லாமல் நையாண்டி அல்லது பகடி செய்வது, செய்தியை தவறாக புரிந்துகொள்வது, ஜோடிக்கப்பட்ட தகவல்கள், ஒருவரை மற்றொருவருடன் யூகத்தின் அடிப்படையில் இணைத்து பேசுதல், தவறாக அல்லது உண்மையை மறைத்து திரித்து கூறுவது ஆகியவை எல்லாம் போலிச்செய்திகளாக குறிப்பிடலாம். உண்மைத் தகவல்களைவிட போலிச் செய்திகள் இணையத்தில் வேகமாக பரவுவதால், பலரும் அதனை உண்மையென நம்பி, தன்னை சார்ந்தோருக்கு அப்படியே பகிர்வதை கடமையாக கருதுகின்றனர். ஆனால், அப்படி செய்வதும் சட்டத்தின் பார்வையில் குற்றம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நமக்கு வரும் செய்திகளை முழுமையாக அலசி ஆராய்ந்து, உண்மைத் தன்மையை முழுமையாக பெற்றபின்னர் அந்த செய்தியை நம்பவேண்டும், மற்றவர்களுக்கும் அனுப்ப வேண்டும்.
சட்டம் என்ன சொல்கிறது?
போலிச்செய்திகளை பரப்புபவர்கள் மீது சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனையும் வழங்கமுடியும். ஒருவர் அனுப்பும் போலிச்செய்திகளின் தன்மைக்கு ஏற்ப அவர் மீது வழக்கு பதிவு செய்ய முடியும். அதாவது, தகவல் தொழில்நுட்ப சட்டம் 2008 - சட்டப்பிரிவு 66டி, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 - சட்டப்பிரிவு 54, இந்திய தண்டனைச் சட்டம் 1860 - சட்டப்பிரிவுகள் 153,499,500, 505 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் போலிச்செய்திகள் பரப்புபவர்களை தண்டிக்க முடியும்.
1. சமூகவலைதள போலிச் செய்திகள்
தனிநபர் அல்லது நிறுவனம் மீதான போலிச் செய்திகளை டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பரப்புபவர்கள் தெரிந்தவர்கள் என்றால் அவர்களுக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கலாம். அதனையும் மீறி அவர் செயல்படும்பட்சத்தில் 66சி, 66டி, 66இ, 67, 67ஏ, 71, 72 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். இந்த சட்டப்பிரிவுகள் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
2. பேரிட மேலாண்மை போலிச்செய்தி
மழை, புயல், நிலச்சரிவு, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்கள் தொடர்பாக போலி தகவல்களை பரப்பி, மக்களிடையே அசாதாரண சூழலை உருவாக்குபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவு 54 கீழ் தண்டிக்க முடியும். உண்மை தகவலை ஆராயாமல் மற்றவர்களுக்கு பரப்பும் அனைவரும் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, பேரிடர் தொடர்பாக
3. மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துதல்
பொய் தகவல்கள், வதந்தி மற்றும் தவறான கூற்றுகளை உருவாக்கி மக்களின் அமைதியை குலைந்து, பொது அமைதிக்கு பங்கம் விளைப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்திய தண்டனைச் சட்டம் 505 (1)- கீழ் தண்டிக்க முடியும்.
Also read... பாட்னாவில் ஜூம் மீட்டிங்கின்போது மதிய உணவை சாப்பிட்ட வக்கீல் - வைரலாகும் வீடியோ!
4. போலி செய்தியால் வன்முறை
வன்மத்துடன் தவறான தகவல்களை அல்லது பொய் தகவல்களை பரப்பி, பொதுவெளியில் அமைதியை குலைத்து இரு சமூகங்களுக்கு இடையே வன்முறை ஏற்படுவதற்கு காரணமாக இருப்பவர்கள் மீது வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் ஐ.பி.சி 153 கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும்.
5. புகழுக்கு களங்கம் விளைவித்தல்
ஒருவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசினாலோ, படித்தாலோ அல்லது செய்திகளை பதிவிட்டாலோ, பாதிக்கப்பட்ட நபர் புகார் அளிக்கும்பட்சத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவரை காவல்துறை கைது செய்ய முடியும்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fake News