• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • Explainer: தேர்தல் நிதி பத்திரத் திட்டம் என்றால் என்ன? அதன் வெளிப்படைத்தன்மையின்மையை சமூக ஆர்வலர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?

Explainer: தேர்தல் நிதி பத்திரத் திட்டம் என்றால் என்ன? அதன் வெளிப்படைத்தன்மையின்மையை சமூக ஆர்வலர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

2017 யூனியன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு பெயரை வெளிப்படுத்தாமல் பணத்தை நன்கொடையாகப் பயன்படுத்தும் ஒரு வட்டி இல்லாத பத்திர திட்டமாகும். மேலும் அந்த பத்திரத்தில் நன்கொடையாளர் பெயர் பற்றிய எந்த தகவலும் இருக்காது.

  • Share this:
மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெறும் மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய தேர்தல் நிதி பத்திரங்களை விற்பனை செய்வதை நிறுத்தக் கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இந்த விவகாரத்தை பற்றி தெரிவித்துக்கொள்வதற்கு முன்பு, தேர்தல் நிதி பத்திர நிதி திட்டம் என்றால் என்பதை பற்றி முதலில் தெரிந்துக்கொள்வோம்.

தேர்தல் நிதி பத்திரங்கள் என்றால் என்ன?

2017 யூனியன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, தேர்தல் பத்திரங்கள் என்பது அரசியல் கட்சிகளுக்கு பெயரை வெளிப்படுத்தாமல் பணத்தை நன்கொடையாகப் வழங்கும் ஒரு வட்டி இல்லாத பத்திர திட்டமாகும். மேலும் அந்த பத்திரத்தில் நன்கொடையாளர் பெயர் பற்றிய எந்த தகவலும் இருக்காது. எனவே, குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு யாரிடம் இருந்து நன்கொடை பெற்றோம் என்பது தெரியாது. எனவே, பத்திரத்தை வாங்கிய பிறகு அந்த குறிப்பிட்ட அரசியல் கட்சியே அதன் உரிமையாளராக கருதப்படுகிறது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெறும் நிதிக்கு அரசியல் கட்சிகள் வருமான வரி விலக்கும் பெற முடியும். இந்த பத்திரங்கள் ரூ .1,000, ரூ. 10,000, ரூ. 1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி என விற்கப்படுகின்றன.

மேலும் அவற்றை விற்க அங்கீகரிக்கப்பட்ட ஒரே வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஆகும். இந்தப் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில், ஒரு தனி நபர் அல்லது இந்தியாவில் நிறுவப்பட்ட அமைப்பு ஒன்றால் வாங்க முடியும். ஒவ்வொரு காலாண்டிலும் முதல் பத்து நாட்கள் இவை விற்பனைக்குக் கிடைக்கும். வங்கி மூலமாகவே அதை அவர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிக்கு நன்கொடையாக வழங்கலாம். பின்னர் கட்சி அதன் சரிபார்க்கப்பட்ட கணக்கு மூலம் 15 நாட்களுக்குள் பணம் எடுக்க முடியும்.

ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் வாங்கக்கூடிய பத்திரங்களின் எண்ணிக்கையில் எந்த வரம்பு இல்லை. 15 நாட்களுக்கு பிறகு எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் இணைக்கப்படாத பத்திரங்களை எஸ்பிஐ பிரதமரின் நிவாரண நிதியில் டெபாசிட் செய்கிறது. தற்போதுவரை ரூ.6,534.78 கோடி மதிப்புள்ள மொத்தம் 12,924 தேர்தல் பத்திரங்கள் 2018 மார்ச் முதல் 2021 ஜனவரி வரை பதினைந்து கட்டங்களாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

இது அறிவிக்கப்பட்ட நேரத்தில், மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற பட்ஜெட் உரையில், தேர்தல் நிதி பத்திரங்கள் நிறுவனங்கள் பெயர் இல்லாமல் நன்கொடைகளை வழங்குவதற்கான ஒரு வழியாக புரிந்து கொள்ளப்பட்டன. எவ்வாறாயினும், தனிநபர்கள், தனிநபர்களைக் கொண்ட குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மத மற்றும் பிற அறக்கட்டளைகள் கூட தங்கள் விவரங்களை வெளியிடாமல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க அனுமதிக்கப்படுவதாக கூறியிருந்தார்.

தேர்தல் பத்திரங்களின் வெளிப்படைத்தன்மையின்மையை செயற்பாட்டாளர்கள் ஏன் கடுமையாக எதிர்க்கின்றனர்?

பெயர் வெளியிடாமல் தேர்தல் பாத்திரங்கள் மூலம் நன்கொடையளிப்பது நாட்டில் சிறிது சர்ச்சையை ஏற்படுத்தியது. நிதிச் சட்டம் 2017-இல் செய்யப்பட்ட திருத்தம் மூலம், தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடைகளை வெளியிடுவதில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு மத்திய அரசு விலக்கு அளித்திருந்தது. இன்னும் தெளிவாக கூறவேண்டுமானால், ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்தில் கட்டாயமாக தாக்கல் செய்யப்படும் பங்களிப்பு அறிக்கைகளில் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பங்களிப்பவர்களின் விவரங்களை அவர்கள் வெளியிட வேண்டியதில்லை.

இதன் பொருள் ஒரு தனிநபர், நிறுவனம் அல்லது அமைப்பு எந்தக் கட்சிக்கு நிதியுதவி அளித்தது. மேலும் எவ்வளவு அளித்தது என்பதை பற்றி வாக்காளர்களால் தெரிந்து கொள்ள முடியாது. தேர்தல் நிதி பத்திர திட்டங்கள் அறிமுகமாவதற்கு முன்பு, அரசியல் கட்சிகள் தங்களுக்கு ரூ. 20,000க்கு மேல் நன்கொடை வழங்கிய அனைத்து நன்கொடையாளர்களின் விவரங்களையும் வெளியிட வேண்டியிருந்தது. இந்த நிலையில் சமூக ஆர்வலர்களின் கூற்றுப்படி, இந்த அரசியல் நிதி பத்திர மாற்றம் குடிமகனின் ‘தகவல் அறியும் உரிமையை’ (Right to Know) மீறுகிறது மற்றும் அரசியல் வர்க்கத்தை இன்னும் கணக்கிட முடியாததாக மாற்றுகிறது என குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் (ஏடிஆர்) தேர்தல் நிதி பத்திரங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

நன்கொடைக்கான ஒரு வழியாக தேர்தல் நிதி பத்திரங்கள் எவ்வளவு பிரபலமாக உள்ளன?

நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிட தேவையில்லை என்பதால், அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வருடங்களுக்கும் குறைவான காலங்களிலேயே தேர்தல் பத்திரங்கள் நன்கொடையின் மிகவும் பிரபலமான பாதையாக மாறியுள்ளன. 2018-19 நிதியாண்டிற்கான தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகளின் மொத்த வருமானத்தில் பாதிக்கும் மேலானது தேர்தல் பத்திர நன்கொடைகளிலிருந்து வந்தது. அதிலும் இந்த திட்டத்தின் மிகப்பெரிய பயனாளி பாரதிய ஜனதா கட்சி தான். 2017-18 மற்றும் 2018-19 ஆண்டுகளில், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்களிலிருந்து மொத்தம் ரூ.2,760.20 கோடியைப் பெற்றன. அவற்றில் ரூ.1,660.89 கோடி அல்லது 60.17% பாஜகவால் மட்டுமே பெறப்பட்டது.

தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்து தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன?

தேர்தல் ஆணையம், மே 2017-ல் பணியாளர்கள், பொது குறைகளை, சட்டம் மற்றும் நீதி தொடர்பான நிலைக்குழுவுக்கு சமர்ப்பித்ததில், மக்கள் பிரதிநிதித்துவம் (RP) சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதை ஆட்சேபித்திருந்தது. இந்த சட்டங்கள் அரசியல் கட்சிகள் தேர்தல் மூலம் பெறப்பட்ட நன்கொடைகளை வெளிப்படுத்துவதில் இருந்து விலக்கு அளித்தது. இது இந்த நடவடிக்கையை "பிற்போக்கு நடவடிக்கை" என்று விவரித்தது. அதே மாதத்தில் சட்ட அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில், மேற்கண்ட திருத்தத்தை "மறுபரிசீலனை செய்ய" மற்றும் "மாற்றியமைக்க" ஆணையம் அரசாங்கத்திடம் உரிமை கோரியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

புதிய விதிமுறையை திரும்பப் பெறுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்ட தேர்தல் ஆணையம், “தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட பங்களிப்பு அறிவிக்கப்படாத சூழ்நிலையில், அரசியல் கட்சிகளின் பங்களிப்பு அறிக்கையை ஆராயும்போது, ​​அரசியல் கட்சி ஏதேனும் எடுத்துள்ளதா என்பதைக் கண்டறிய முடியாது. அரசியல் கட்சிகள் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து நன்கொடைகளை எடுப்பதைத் தடுக்கும் ஆர்.பி. சட்டத்தின் பிரிவு 29 (b) இன் கீழ் இது விதிமுறைகளை மீறும் நன்கொடை என அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: