ட்ரோலிங் என்பது ஒருவரை பகடி அல்லது நையாண்டி செய்வதாகும். அதனை புகைப்படமாகவோ அல்லது வீடியோ வடிவிலோ உருவாக்கி சமூகவலைதளங்களில் உலாவ விடுவார்கள். இணைய பயன்பாடு அதிகரிப்புக்கு பின்னர் ஒருவரை அல்லது ஒரு குழுவை ட்ரோல் செய்வது என்பது கட்டுக்கடங்காமல் சென்றுவிட்டது. குறிப்பாக, பேசாத வார்த்தைகளை ஒருவர் பேசுவதுபோல் கற்பனையாக உருவாக்கி, அதற்கு கேலியான பதில் ஒன்றை கொடுப்பதுபோல் இமேஜ்ஜூகளை தயார் செய்து சமூகவலைதளங்களில் பரப்புவது வாடிக்கையாகிவிட்டது.
யாரெல்லாம் டிரோலிங்கில் சிக்குவார்கள் என்பது கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அரசியல்வாதிகள் முதல் திரைப்பிரபலங்கள் வரை அனைவரும் ட்ரோலிங்கில் சிக்குவார்கள். ஒருவரை அல்லது ஒரு குழுவினரை பிடிக்காத மற்றொரு குழு, அந்த குழுவை அசிங்கப்படுத்த அல்லது அவதூறுகளை அள்ளி வீசுவதற்கு, தரம்தாழ்ந்த விஷம பிரச்சாரங்களை மேற்கொள்ளும். அதற்கு வசதியாக, மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள ட்ரோலிங்குகளை கட்சிகளும், ரசிகர்களும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
சமூகவலைதளத்தின் மிகமோசமான அம்சங்களை பட்டியலிட்டால், அந்த வரிசையில் ட்ரோலிங் முதல் வரிசையில் இடம்பிடிக்கும். கண்ணியத்துடன், கொள்கை ரீதியில் அரசியல்வாதிகளை விமர்சிப்பதை தவிர்த்து தனிப்பட்ட விமர்சனங்கள் தரம் தாழ்ந்த வகையில் ட்ரோலிங் மூலம் செய்யப்படுகின்றன. உருவம், உடை, குடும்பம் என சகலத்தையும் ட்ரோலிங் மூலம் விமர்சனம் செய்கின்றன. இந்த ட்ரோலிங் மூலம் மன உளைச்சலுக்கு உள்ளான அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் ஏராளம். இதில், பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இணையத்தில் இருப்பவர்களை குளிர்விப்பதற்காக ஒருவரை ட்ரோலிங் மூலம் ஆபாசங்களை உமிழ்வது ஆபத்தான போக்கு என உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதில் இருக்கும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், தனிப்பட்ட நபரை அல்லது குழுவை தரக்குறைவாக விமர்சனம் செய்ய பணம் கொடுத்து ஆட்களை நியமிக்கும் அளவுக்கு சமூகம் சென்றுள்ளது.
சட்டத்தின் முன் நிறுத்தி சமூகவலைதள விஷம பிரச்சாரங்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க முடியாதா? என்றால், முடியும். ஆனால், நேரடியாக ட்ரோலிங் செய்வதற்காக தண்டிக்கக்கூடிய சட்டம் எதுவும் இல்லை. அவர்கள் பயன்படுத்தும் கன்டென்டுகளை கொண்டு கிரிமினல் புகார், பாலியல் சீண்டல், புகழுக்கு களங்கம் விளைவித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் இந்திய தண்டனைச் சட்டம் 1860 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 ஆகியவற்றின் கீழ் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க முடியும்.
Also read... பொது இடங்களில் முகத்தை மறைக்கக்கூடாது... புர்கா அணிவதற்கு தடை விதித்த சுவிட்சர்லாந்து அரசு!
சட்டத்தின்படி சென்றால் முழுமையான தீர்வு கிடைக்குமா? என்றால், அதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் செல்லும்போது அதனை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இருப்பினும், வெறுப்பு பேச்சு, மிரட்டல், கற்பழிப்பு அச்சுறுத்தல், வன்முறையை தூண்டுதல் ஆகிய புகார்களின் கீழ் உறுதியான நடவடிக்கை எடுக்க முடியும். இந்தியாவில் இதற்கு முன்னர் ஆன்லைனில் ட்ரோலிங் செய்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் ஒருவரை பாலிவுட் பாடகர், ஆன்லைனில் தவறாக விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டதுடன், அவருடைய டிவிட்டர்அக்கவுண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
இது குறித்து அனைவரும் கவலைபடவும், கவனம் செலுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். ஒரு சிலரை மகிழ்விப்பதற்காக செய்யப்படும் இதுபோன்ற செயல்கள் காலப்போக்கில் சமூக பதற்றத்தை உருவாக்கிவிடவும் வாய்ப்புகள் உள்ளன. மக்களின் மனதில் விஷத்தை விதைத்து, வெறுப்புணர்வு மேலோங்கவும் இந்த ட்ரோலிங்குகள் காரணமாக அமைந்துவிடும். வேற்றுமையில் ஒற்றுமை என இச்சமூகம் ஒருவரை ஒருவர் மதித்து நேசத்துடன் பார்க்கும் பார்வையும் மாறிவிட வாய்ப்புகள் உள்ளதால், ட்ரோலிங்குகளுக்கு முடிவுரை எழுதுவது நல்லது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.