Explainer | இந்து சமய அறநிலையத்துறை எப்படி செயல்படுகிறது?

திருச்செந்தூர் முருகன் கோவில்

தமிழகத்திலுள்ள இந்துக் கோயில்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வருமா? என்பன உள்ளிட்ட சந்தேகங்களை போக்கிக் கொள்வோம்.

  • Share this:
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சத்குரு முன்னெடுத்துள்ளார். அவருடைய கோரிக்கைக்கு நடிகர் சந்தானமும் ஆதரவு தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற அரசு கோயில்களை நிர்வகிப்பது முறையல்ல. இந்து கோயில்கள் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சத்குரு முன்வைக்கிறார். சத்குருவின் கோரிக்கைக்கு எதிராகவும், இந்து சமய அறநிலையத்துறையின் தேவை குறித்தும் பேசுபவர்கள், ’தமிழகம் முழுவதுமுள்ள இந்து கோயில்களுக்கு ஏராளமான சொத்துகள் நிலங்களாகவும், நகைகளாகவும் உள்ளது. அதனை, தனிநபரிடம் ஒப்படைப்பதை ஊழலுக்கு வழிவகுக்கும் என்று வாதத்தை முன்வைக்கின்றனர்.

இந்தநிலையில், பா.ஜ.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மதச்சார்ப்பற்ற அரசு, இந்து வழிபாட்டுத் தலங்களை மட்டும் தன்வசம் வைத்திருப்பதை மாற்றி மறைந்த குன்றக்குடி அடிகளார் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரையின்படி, இந்துக் கோயில்களின் நிர்வாகம், இந்து ஆன்றோர், சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், பெரும்பாலான மக்களுக்கு இந்து அறநிலையத்துறை குறித்த உரிய புரிதல்கள் இல்லை. இந்தநேரத்தில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் குறித்தும் கோயில்கள் செயல்பாடு குறித்தும் தெரிந்துகொள்வதும் அவசியமாகிறது.

மன்னர்களின் ஆட்சிக் காலம் முடிந்து ஜனநாயக ஆட்சியை நோக்கி நகரும்போது மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தன. மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்து சமய கோயில்களை நிர்வாகிப்பதற்காக 1925-ம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் ஏற்படுத்தப்பட்டது.

இந்து திருக்கோயில்கள், அறநிறுவனங்கள் மற்றும் திருமடங்கள் வாரியத்தால் கண்காணிக்கப்பட்டு வந்தது. 1951ல் இந்து சமய அறநிலைய வாரியம் கலைக்கப்பட்டு அரசுத் துறையாக செயல்பட வழிவகை செய்யப்பட்டது. 1959- ஆம் ஆண்டிலிருந்து அமலில் இருந்த இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் நடைமுறைபடுத்துவதில் சில இன்னல்கள் ஏற்பட்டது. இவற்றினை சரி செய்யவும் பல்வேறு திருத்தங்களை ஒருங்கிணைக்கவும் 1959-ஆம் ஆண்டில் இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் 22/1959 இயற்றப்பட்டது. 01.01.1960 முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரி இருந்தவருகிறார். இந்தத் துறையின் பொது நிர்வாகம் மற்றும் அனைத்து செயல்பாடுகளுக்கும் தலைமைப் பொறுப்பில் ஆணையர் உள்ளார்.

மேலும், கோயில்களுக்கு சொந்தமான நகைகளைப் பராமரிப்பதற்கான அலுவலகர்கள், வருவாயைக் கணக்கிட தணிக்கைத்துறை அதிகாரிகள், கோயில்கள் பராமரிப்புகளை மேற்கொள்ள பொறியாளர்கள் என்று ஒவ்வொன்றுக்கு அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எந்தெந்த கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும்?

தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வராது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ உள்ளிட்ட மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வரும். தற்போது தமிழ்நாட்டில் இந்து சமய அறிநிலையத்துறையின் கீழ் 44,218 கோயில்கள் உள்ளன.

புதிதாக தனிநபர்கள் கட்டும் கோயில்கள் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வருமா?

தனிநபர்கள் புதிதாக கட்டும் கோயில்கள் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வராது.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அரசு செலவு செய்கிறதா?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை மதச்சார்பற்ற அரசு என்று வரையறுக்கிறது. மதச்சார்பற்ற கோட்பாட்டின்படி, அரசு இந்து கோயில்களுக்கு செலவு செய்ய முடியாது. தமிழக அரசின் கருவூலத்திலிருந்து கோயில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. மாறாக, கோயில்கள் அரசுக்கு செலுத்தும் 14 சதவீத வரியிலிருந்து அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

கோயில்களின் வருமானத்தை அரசு எடுத்துக்கொள்ளுமா?

கோயில்களின் வருமானத்தை அரசு எடுத்துக் கொள்வது கிடையாது. கோயில்கள் மூலம் வரும் வருவாய் கோயிக்ளுக்கே செலவிடப்படுகிறது. அதிகமாக இருக்கும் வருவாய், குறைந்த வருமானம் வரும் கோயில்களுக்கு செலவிடப்படுகிறது.

அறநிலையத்துறைக்கான வருவாயின் மூலதனம் என்ன?

கோயில் உண்டியல்களில் வரும் வருமானம் தவிர்த்து ஒவ்வொரு கோயில்களுக்கும் ஏராளமான நிலங்கள் உள்ளிட்ட சொத்துகள் உள்ளன. அதன்மூலம் ஏராளமான வருவாய்கள் அறநிலையத்துறைக்கு வருகின்றது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக 4,78,283 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் உள்ளன.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கோயில்கள் எண்ணிக்கை

திருக்கோயில்கள் - 41,746
சமணத் திருக்கோயில்கள் - 19
திருமடங்கள் - 309
திருமடத்துடன் இணைந்த திருக்கோயில்கள் - 492
அறக்கட்டளைகள் - 1,555

கோயில்களின் ஆண்டு வருமானம்

5,037 கோயில்களின் ஆண்டு வருமானம் 10,000 ரூபாய்க்கு அதிகமாகவும் 2 லட்ச ரூபாய்க்கு குறைவாகவும் உள்ளன. 938 கோயில்களில் ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு அதிகமாவுகம் 10 லட்ச ரூபாய்க்கு குறைவாகவும் உள்ளது. 1,992 கோயில்களில் வருடாந்திர வருமானம் 10 லட்ச ரூபாய்க்கு அதிகமாக உள்ளது. 36,154 கோயில்களில் ஆண்டு வருமானம் 10,000 ரூபாய்க்கு குறைவாகவே உள்ளது.

அறநிலையத்துறையின் கீழ் உள்ள பிற சொத்துகள்

கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லம் போன்ற சொத்துகளும் அறநிலையத்துறையின் கீழ் வருகின்றன.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - 5
தொழில்நுட்பக் கல்லூரி - 1
மேனிலைப் பள்ளிகள் - 15
உயர் நிலைப் பள்ளிகள் - 8
நடுநிலைப் பள்ளிகள் - 2
தொடக்கப் பள்ளிகள் - 9
மெட்ரிகுலேஷன் பள்ளி - 1
சி.பி.எஸ்.இ பள்ளி - 1
நாதஸ்வரம் மற்றும் தவில் இசைப் பயிற்சி பள்ளி - 5
வேத ஆகமப் பாட சாலைகள் - 2
ஓதுஆர் பயிற்சிப் பள்ளிகள் - 2
தேவாரப் பயிற்சிப் பள்ளிகள் - 2
காது கேளாதோர் - பேச இயலாதோர் பள்ளி - 1

மொத்தமாக 54 கல்வி நிறுவனங்கள் உள்ளன.

சமூக நல நிறுவனங்கள்

கருணை இல்லங்கள் - 33
மன நலக் காப்பகம் - 1
முதியோர் இல்லங்கள் - 2
சித்த வைத்திய சாலைகள் - 6
ஆங்கில முறை மருத்துவமனைகள் - 2

பள்ளி, கல்லூரிகளுக்கு அடிப்படை வசதிகள்

இந்துசமய அற நிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அடிப்படை வசதி செய்வதற்கு நிதி வசதியுள்ள திருக்கோயில்களின் உபரிநிதியிலிருந்து நிதிமாற்றம் மூலம் 5 கோடி ரூபாய் பெறப்பட்டு இரு மூல தன நிதி உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மூல தன நிதியிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து ஆண்டுதோறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான கட்டடங்கள், ஆய்வுக் கூடங்கள், நூலகங்கள், கணினிகள், குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகளைச் செய்திட நிதி உதவி வழங்கப்படுகிறது.

கருணை இல்லங்கள்

இந்துசமய அற நிலையத்துறையின் கீழுள்ள நிதி வசதிமிக்க திருக்கோயில்களில் ஆதரவற்ற சிறுவர் மற்றும் சிறுமியருக்கு உணவு, இருப்பிடம், கல்வி ஆகிய உதவிகள் அளிக்கும் நோக்கத்துடன் கருணை இல்லங்கள் தொடங்கப்பட்டன. இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 30 திருக்கோயில்களில் 33 கருணை இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சிறுவர் காப்பகங்கள் 22 மற்றும் சிறுமியர் காப்பகங்கள் 11 உள்ளன. கருணை இல்லங்களில் பயின்று +2 பள்ளிக்கல்வி முடித்து மேற்படிப்பு தொடரும் மாணவர்களுக்கு இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் முழுமையான கல்விக்கட்டண விலக்கும், இதர கல்வி நிறுவனங்களில் 50 சதவிகிதம் கல்விக் கட்டணம் திருக்கோயில் நிதியிலிருந்து படிப்பு முடியும் வரை அரசு வழங்கும்.

பிற சொத்துகள்:

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 4,78,348 ஏக்கர் நிலம் உள்ளது. அதனைத் தவிர்த்து, 22,600-க்கும் மேற்பட்ட கட்டிடங்களும், 33,665 கடைகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதைத் தவிர்த்து 1,23,000 பேருக்கு விவசாய நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதன்மூலம் அறநிலையத்துறைக்கு ஆண்டுக்கு 60 கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறது.

அறநிலையத்துக்கு சொந்தமான கட்டிடங்கள், கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்வது யார்?

இந்துசமய நிறுவனங்களுக்குச் சொந்தமான மனைகள் மற்றும் கட்டடங்களுக்கு நியாய வாடகை நிர்ணயம் செய்வதற்கு இந்துசமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி மண்டல இணை ஆணையர், திருக்கோயில் செயல் அலுவலர் / அறங்காவலர் / அறங்காவலர் குழுத்தலைவர், பதிவுத்துறையின் மாவட்டப்பதிவாளர் ஆகியோர் கொண்ட நியாய வாடகை நிர்ணய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தநியாய வாடகை நிர்ணயக் குழுவின் மூலமாக திருக்கோயில்களுக்கு சொந்தமான வணிகம், குடியிருப்பு போன்ற பயன்பாடுகள் உள்ள மனைகள் மற்றும் கட்டடங்களுக்கு உரிய நியாய வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அறங்காவலர்கள் நியமனம்

இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் கீழ் இந்து சமய நிறுவனங்களின் நிர்வாகத்தை மேலாண்மை செய்வதற்காக பரம்பரை நிர்வாகத்தில் இல்லாத ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அமைக்கப்படும் ஒவ்வொரு அறங்காவலர் குழுவிலும் மூன்று அறங்காவலர்களுக்கு குறையாமலும், ஐந்து அறங்காவலர்களுக்கு மிகாமலும் உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும். இக்குழுவில் பெண் உறுப்பினர் ஒருவரும் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த உறுப்பினர் ஒருவரும் இடம் பெற வேண்டும். இக்குழுவின் பதவிக்காலம் இரண்டாண்டுகள் ஆகும்.

கோயில் நிர்வாகம் யார் கட்டுப்பாட்டில்?

கோயில் நிர்வாகம், அறங்காவலர்களின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. அறங்காவலர்கள் அரசால் நியமிக்கப்படுகின்றனர். அறங்காவலர்கள் நியமிக்கப்படுவதில் மேற்கூறிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

வக்பு வாரியம் - இந்து சமய அறநிலையத்துறை வேறுபாடு?

இந்து சமய அறநிலையத்துறை,  மாநில அரசின் இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் 1959-ன் கீழ் செயல்படுகிறது. வக்பு வாரியம், மத்திய அரசின் வக்பு சட்டம் 1995-ன் கீழ் செயல்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரி செயல்படவில்லை. வக்பு வாரியம், மத்திய அரசின் சட்டத்தின் அனைத்து மாநிலங்களும் மாநில அரசின் கீழ் ஒரே மாதிரி செயல்படுகிறது. மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் இந்திய வக்பு வாரியம் செயல்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு அப்படி மத்திய அமைப்பு கிடையாது.

வக்பு வாரியம் - இந்து சமய அறநிலையத்துறை வேறுபாடு?

இரண்டும் அரசின் ஒரு அங்கமாகும். வக்பு வாரியத்தின் முதன்மைப் பணியும், வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துகள், வருமானங்களை பராமரிப்பது முக்கியப் பணி. இந்து சமய அறநிலையத்துறைக்கு கோயில்களுக்கு சொந்தமான சொத்துகள், வருமானங்களை பராமரிப்பது முக்கிய பணி.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: