உஷார்! ஆன்லைன் லோன் செயலிகளில் உள்ள ஆபத்தை தெரிந்துகொள்ளுங்கள்!

ஆன்லைன் லோன் செயலி

வங்கிகளில் கடன் வாங்குவதற்கு ஏகப்பட்ட நடைமுறைகள் இருப்பதால், மக்கள் வங்கிகளை நாடுவதை தவிர்க்கின்றனர். இதனை பயன்படுத்திக்கொள்ளும் ஆன்லைன் லோன் செயலிகள், விரைவாக வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கி, தங்களது பொறிக்குள் விழ வைக்கின்றனர்.

  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு ஏற்பட்ட தொழில் நஷ்டம், வேலை இழப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒவ்வொருவரும் கடுமையான பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இதில் இருந்து மீள்வதற்கு என்ன வழி? என்று ஆயிரக்கணக்கானோர் யோசிக்கும் இந்த நேரத்தை தங்களுக்கானதாக ’சில கழுகுகள்’ மாற்றிக்கொண்டுள்ளனர். அந்த கழுகுகள் யாரென்றால், ஆன்லைன் லோன் செயலிகள் (Online Loan App).

வங்கிகளில் கடன் வாங்குவதற்கு ஏகப்பட்ட நடைமுறைகள் இருப்பதால், மக்கள் வங்கிகளை நாடுவதை தவிர்க்கின்றனர். இதனை பயன்படுத்திக்கொள்ளும் ஆன்லைன் லோன் செயலிகள், விரைவாக வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கி, தங்களது பொறிக்குள் விழ வைக்கின்றனர். மேலோட்டமாக பார்த்தால், ஒருவரிடம் கடன் வாங்குவதைவிட செயலிகள் மூலம் கடன் வாங்குவது நல்லது போலத் தோன்றும். ஆனால், இதைவிட ஆபத்து லோன் செயலிகள் மூலம் கடன் வாங்குவது. உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் அவர்களின் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் நொடியில் இருந்து சேகரித்துக்கொண்டே இருப்பார்கள்.

செயலியை பதிவிறக்கம் செய்யும்போது சில அனுமதிகளை உங்களிடம் கேட்பார்கள். Contacts, voice recorder, call recorder, message read ஆகியவற்றை உபயோகிக்கும் அணுகல்களை உங்களிடம் கேட்பார்கள். பணம் கிடைக்கப்போகிறது என்ற ஆர்வத்தில், அதற்கு உடனடியாக அனுமதியை கொடுத்துவிடுவீர்கள். இங்கே, தான் அவர்களின் பொறி இருக்கிறது. அந்தப் பொறி அவர்களுக்கு கிடைத்த நொடியில் இருந்து அவர்களின் கண்காணிப்பின் கீழ் நீங்கள் சென்றுவிடுவீர்கள். ஆர்.பி.ஐ (RBI) அனுமதியுடன் இயங்கும் செயலிகளால் ஆபத்தில்லை. ஆர்.பி.ஐ அனுமதி இல்லாமல் இருக்கும் லோன் செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது, சட்டவிரோத கும்பலின் பிடிக்குள் சென்றுவிடுகிறீர்கள்.

ALSO READ |  வாடகை செலுத்தியும் வங்கி லாக்கரை நீண்ட காலம் இயக்காமல் இருந்தால் என்ன ஆகும்? - ரிசர்வ் வங்கி புது விதிமுறைகள் அமல்!

இதனை தடுக்க வேண்டும் என்றால், லோன் செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு அந்த செயலியின் வரலாறு, ஆர்.பி.ஐயிடம் அனுமதி பெற்றிருக்கிறதா? போன்ற தகவல்களை தேடித் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். தனிநபர் தகவல்கள் திருடி, டார்க்வெப்பில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன.கேமரா மற்றும் ஆடியோ மூலம் உங்களுடைய செயல்பாடுகள் சட்டவிரோதமாக பதிவு செய்யவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த ஆன்லைன் லோன் செயலிகள், 'பணம் என்ற மீனைக் காட்டி, மாறுவேடத்தில் உங்களை மொபைலுக்குள் நுழையும் சுறாக்கள்' என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால், ஆன்லைன் செயலிகள் மூலம் லோன் பெறுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆன்லைன் லோன் செயலிகள் ஆபத்து ஏன்?

2020 ஆம் ஆண்டில் கொரோனா தாக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தபோது, சீனாவைச் சேர்ந்த ஆன்லைன் லோன் செயலிகள் இந்திய மார்க்கெட்டுக்குள் நுழைந்துள்ளன. வரைமுறையற்ற இந்த மார்க்கெட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, உடனடி பணம் என்ற ஆசையில் பலரை அந்த செயலிகள் விழ வைத்துள்ளன. குறிப்பிட்ட தேதியில் பணம் செலுத்துவதற்கு முன்பிருந்து தொடர்ச்சியான அழைப்புகளை மேற்கொண்ட அந்த செயலிகள், பணத்தை திரும்ப செலுத்துமாறு தொடர்ச்சியாக கடன் பெற்றவர்களை மன உளைச்சலுக்குள்ளாக்கியுள்ளன. மேலும், வட்டி விகிதமும் மிக மிக அதிகம்.

ALSO READ | நல்ல வட்டி.. கை நிறைய லாபம்! நீங்க எப்ப இந்த திட்டத்தில் சேர போறீங்க?

குறிப்பிட்ட தேதியில் பணம் செலுத்த வில்லை என்றால் திரும்ப செலத்தும் தொகையானது 60 முதல் 100 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டு, வசூலிக்கப்பட்டுள்ளன. பணம் கிடைக்கிறது என்ற ஆசையில் கடன் பெற்றவர்களுக்கு, இது பெரும் தலைவலியாக மாறியது. பணம் செலுத்தாதவர்களின் தனி நபர் தகவல்களை அனுப்பி மிரட்டியதுடன், தொடர்பு பக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எண்களை முறைகேடாக சேகரித்து, கடன் பெற்றவர்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு அழைத்து, கடன் பெற்ற தகவல்களை தெரியப்படுத்தி அசிங்கப்படுத்தியுள்ளன.

சில முறைகேடான செயலிகள் கொடுத்த தொடர்ச்சியான தொந்தரவுகளால் இந்தியாவில் கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சில தற்கொலை சம்பவங்களும் நடந்துள்ளது. இதனை அறிந்து கொண்ட ரிசர்வ் வங்கி, ஆன்லைன் கடன் வழங்குநர்களுக்கு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஆன்லைன் மூலம் கடன் வழங்கிய 50 செயலிகள் மீது தொந்தரவு, மன உளைச்சல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ச்சியான புகார்கள் எதிரொலியாக ஜனவரி 2021 -ல் சுமார் 400 செயலிகளை கூகுள் நிறுவனம், பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

ALSO READ |  மாதம் ரூ.3000 வேண்டுமா? அரசு தரும் இந்த சலுகையை யூஸ் பண்ணிக்கோங்க!

கடன் சுறாக்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

21 வயது முதல் 40 வயது வரை இருக்கும் ஆன்டிராய்டு யூசர்களே இந்த செயலிகளின் இலக்கு. போதுமான ஆவணங்கள் இல்லாமல் கடன் வழங்குகிறார்கள் என்றால், அவர்களை நீங்கள் சந்தேகப்பட வேண்டும். 7 முதல் 12 விழுக்காடு வட்டியில் ஆவணங்கள் இல்லாமல் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. ஆவணங்கள் இல்லாமல் கொடுக்கப்படும் கடன்களில் வட்டி விகிதம் நிச்சயமாக அதிகம் இருக்கும். ஆவணங்களை கேட்காவிட்டாலும், உங்களின் தனிப்பட்ட தகவல்களை மொபைல் மூலம் அவர்கள் சேகரித்துவிடுவார்கள்.கடனை செலுத்தவில்லை என்றால், மேலும் ஒரு கடனைக் கொடுத்து அந்த கடனை திருப்பிச் செலுத்திவிட்டு இந்தக் கடனை செலுத்துமாறு கட்டாயப்படுத்துவார்கள். தொடர்ந்து தொந்தரவுகளை கொடுத்துவரும் இந்த செயலிகளில் கடன் பெறுவதற்கு முன்பு ஆர்.பி.ஐ அனுமதி பெற்றிருக்கிறதா? போன்ற தகவல்களை நீங்கள் கட்டாயம் சரிபார்க்க வேண்டும். சந்தேகத்துக்குரியவையாக இருந்தால், அந்த செயலியில் கடன் பெறாதீர்கள். ஒரு கடனை பெற்று மற்றொரு கடனை அடைக்கும் வகையில் செயலிகள் தொந்தரவு செய்யும் "ever-greening of loans" நடைமுறை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

Dark Web சுறாக்கள் :

இந்தியாவில் ஆன்லைன் லோன் செயலிகள் மீது புகார்கள் தொடர்ச்சியாக பதிவானதையடுத்து, அவர்களை காவல்துறையினர் விசாரிக்கத் தொடங்கியபோது பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. அந்த செயலிகள் இந்தியாவைச் சேர்ந்தவை அல்ல என்பது தெரியவந்தது. தெலங்கானவில் மட்டும் சுமார் 60 செயலிகள் சட்டவிரோதமாக இயங்கியதை கண்டுபிடித்து, அதிகாரிகள் அந்த செயலிகளை முடக்கினர்.

ALSO READ |  Facebook Loan: சிறு, குறு தொழில்களுக்கு லோன் கொடுக்கும் பேஸ்புக் - வட்டி எவ்வளவு தெரியுமா?

கர்நாடகாவில் 28 செயலிகளை முடக்கினர். கால்சென்டர்கள் மூலம் கடனை பெற்றவர்களை, அந்த செயலிகள் தொந்தரவு செய்துள்ளன. இந்த கால்சென்டர்கள் இந்தியா மற்றும் இந்தோனேஷியாவில் இருந்து செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. கடன் பெறுவதற்கு முன்பு, உங்களின் அதிகாரப்பூர்வ தகவல்களை அணுகுவதற்கான அனுமதியை, செயலிகள் கேட்டால் ஆபத்தானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

"MoNeed" என்ற கடன் வழங்கும் சீன செயலி 350 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களின் தனிநபர் தகவல்களை டார்வெப்பில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செயலியானது, யூசரின் வைஃபை, டேட்டா நெட்வொர்க், யூ.எஸ்.பி ரீடர் ஆகியவற்றை அணுக மறைமுகமாக அனுமதியை பெற்றிருந்தது. சர்வதேச குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் இந்த தகவல்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதே இதில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து.

கவனத்தில் கொள்ள வேண்டியது;

1. ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகள் ஆர்.பி.ஐ அனுமதி பெற்றுதா?, NBFC உரிமம் உள்ளதா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் அந்த செயலி ஆபத்தானது.

2. உடனடியாக கடன் வழங்கும் செயலிகளில் நிச்சயம் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.

3. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்ள வேண்டும். வங்கிகளில் உங்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். ஒருவேளை பணம் தேவைப்பட்டால், ஆர்.பி.ஐ தளத்துக்கு சென்று தகவல்களை சரிபார்த்த பின்னர் ஆன்லைன் செயலிகளில் கடனை பெற்றுக்கொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: