Explainer: சிறுகோள் அபோபிஸ் குறைந்தது 100 ஆண்டுகளுக்கு பூமியைத் தாக்காது - ஏன் தெரியுமா?

மாதிரி படம்

பண்டைய எகிப்திய இருள் கடவுளான கேயாஸ் என்ற பெயருடன் அழைக்கப்பட்ட இந்த சிறுகோள் அப்போபிஸ் -99942, கடந்த 2004ம் ஆண்டு நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அபோபிஸ் என்ற பயங்கரமான சிறுகோள் அடுத்த 100 ஆண்டுகளுக்குள் பூமியில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கான வாய்ப்பு இல்லை என்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. பண்டைய எகிப்திய இருள் கடவுளான கேயாஸ் என்ற பெயருடன் அழைக்கப்பட்ட இந்த சிறுகோள் அப்போபிஸ் -99942, கடந்த 2004ம் ஆண்டு நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது நம் கிரகத்தை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்றும் 2068-க்குள் பூமியை மோதகக்கூடும் என்றும் கூறப்பட்டது.

இது பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சிறுகோள்களில் ஒன்றாகும் என்று நாசா குறிப்பிட்டிருந்தது. இந்த அப்போபிஸ் சிறுகோள் 340 மீட்டர் அகலம் கொண்டதாகும். தற்போது சூயஸ் கால்வாயைத் தடுத்த மிகப்பெரிய கப்பலின் அளவுடன் இதனை ஒப்பிடலாம் என நாசா கூறியுள்ளது. சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிரீன் கப்பல் 400 மீ நீளமும், 200 மீ அகலமும் கொண்டது. இருப்பினும், தற்போது இந்த சிறுகோள் பூமியை தாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை நாசா நிராகரித்துள்ளது.

அப்போபிஸ் பற்றி நாசா கொடுத்த விளக்கம்:

சிறுகோள் அப்போபிஸ் 2029 மற்றும் 2036 ஆண்டுகளில் பூமிக்கு மிக அருகில் செல்வதால் பூமியை தாக்கும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டது. ஆனால் நாசா பின்னர் இந்த நிகழ்வுகளை நிராகரித்தது. இருப்பினும், 2068ல் மோதல் ஏற்படக்கூடும் என்ற அச்சம் இருப்பதாக கூறிய நிலையில், மீண்டும் இந்த சாத்தியக்கூறுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த சிறுகோள் கடந்த மார்ச் 5ம் தேதி பூமியைக் கடந்து பறந்தது. அப்போது நமது கிரகத்தில் இருந்து 17 மில்லியன் கி.மீ. தொலைவில் சிறுகோளின் அணுகுமுறையின் போது, விஞ்ஞானிகள் சூரியனைச் சுற்றியுள்ள சிறுகோளின் சுற்றுப்பாதையை விரிவாக ஆய்வு செய்ய ரேடார் கண்காணிப்புகளை பயன்படுத்தினர்.

அப்போபிஸின் இயக்கத்தைக் கண்காணிக்க, வானியலாளர்கள் கலிபோர்னியாவின் பார்ஸ்டோவுக்கு அருகிலுள்ள டீப் ஸ்பேஸ் நெட்வொர்க்கின் கோல்ட்ஸ்டோன் டீப் ஸ்பேஸ் கம்யூனிகேஷன்ஸ் வளாகத்தில் 70 மீட்டர் ரேடியோ ஆண்டெனாவைப் பயன்படுத்தினர். மேலும், மேற்கு வர்ஜீனியாவில் 100 மீட்டர் பசுமை வங்கி தொலைநோக்கியையும் அவர்கள் பயன்படுத்தினர். இது அப்போபிஸின் இமேஜிங்கைக் காட்டியது. பெறப்பட்ட சமிக்ஞையின் வலிமையை இரட்டிப்பாக்க "பிஸ்டாடிக்" சோதனையில் இரண்டு அமைப்புகளும் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டன. இந்த கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், 2068 ஆம் ஆண்டில் அப்போபிஸ் மூலம் பூமிக்கு எந்தஒரு அபாயமும் இல்லை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக நாசாவின் சென்டர் பார் நியர் எர்த் ஆப்ஜெக்ட் ஸ்டடிஸ் (CNEOS) தனது அறிக்கையில் குறிப்பிட்டதாவது, 2068-ல் சிறுகோளின் தாகத்திற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எங்கள் கணக்கீடுகள் குறைந்தது அடுத்த 100 ஆண்டுகளுக்கு எந்தவிதமான தாக்க அபாயத்தையும் காட்டவில்லை" என்று தெரிவித்துள்ளது. சமீபத்திய ஆப்டிகல் கண்காணிப்புகள் மற்றும் கூடுதல் ரேடார் கண்காணிப்புகளின் ஆதரவுடன், அப்போபிஸின் சுற்றுப்பாதையில் உள்ள நிச்சயமற்ற தன்மை 2029க்கு திட்டமிடப்பட்ட போது நூற்றுக்கணக்கான கிலோமீட்டரிலிருந்து ஒரு சில கிலோமீட்டர்களாக சரிந்துள்ளது. 2029 ஆம் ஆண்டில் சிறுகோளின் நிலையைப் பற்றிய மேம்படுத்தப்பட்ட ஆய்வில் அதன் எதிர்கால இயக்கத்தின் கூடுதல் உறுதிப்பாட்டை கணக்கிட முடிந்தது. எனவே இப்போது அப்போபிஸை ஆபத்து பட்டியலிலிருந்து அகற்றலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஆபத்து பட்டியல்" (Risk List) என்பது CNEOS பராமரிக்கும் சென்ட்ரி தாக்க ரிஸ்க் அட்டவணையை குறிக்கிறது. இதில் பூமிக்கு நெருக்கமான சுற்றுப்பாதைகள் கொண்ட அனைத்து சிறுகோள்களும் அடங்கும். அதன்படி, ஒரு பெரிய அளவிலான சிறுகோள் ஒன்று 2029 ஆம் ஆண்டில் மீண்டும் பூமியை மிகநெருக்கமாக அணுகும் என்று கூறப்படுகிறது. இது பூமிக்கு 32,000 கிமீ தொலைவில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தின் பத்தில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும். அந்த ஆண்டு, தொலைநோக்கிகள் பயன்பாடுகள் இல்லாமலேயே, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் இந்த சிறுகோள் பெரிய நட்சத்திரம் போன்று தெரியும் என்று கூறப்படுகிறது.

சிறுகோள்கள் என்றால் என்ன?

சிறுகோள்கள் சூரியனைச் சுற்றும் பாறைப் பொருள்கள், அவை கிரகங்களை விட மிகச் சிறியவை. அவை சிறு கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. நாசாவின் கூற்றுப்படி, தற்போதுவரை கண்டறியப்பட்ட சிறுகோள்களின் எண்ணிக்கை 994,383 ஆகும். 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவான போது எஞ்சியவை தான் இந்த சிறுகோள்கள். சிறுகோள்கள் மூன்று வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதலாவது குழு, செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையிலான முக்கிய சிறுகோள் பெல்ட்டில் இவை காணப்படுகின்றன. கிட்டத்தட்ட 1.1 முதல் 1.9 மில்லியன் விண்கற்கள் இங்கு வளம் வருகின்றன.

Also read... Explainer: இன்ட்ரா டே டிரேடிங் என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்!

இரண்டாவது குழு ட்ரோஜான்கள், இவை ஒரு பெரிய கிரகத்துடன் ஒரு சுற்றுப்பாதையை பகிர்ந்து கொள்ளும் சிறுகோள்கள் ஆகும். அதன்படி வியாழன், நெப்டியூன் மற்றும் செவ்வாய் ட்ரோஜான்கள் இருப்பதை நாசா வெளிப்படுத்தியுள்ளது. 2011 ஆம் ஆண்டில், அவர்கள் ஒரு பூமி ட்ரோஜனையும் தெரிவித்தனர். மூன்றாவது வகைப்பாடு பூமிக்கு அருகில் உள்ள சிறுகோள்கள் (NEA), அவை பூமிக்கு அருகில் செல்லும் சுற்றுப்பாதைகளைக் கொண்டுள்ளன. இதுவரை சுமார் 10,000-க்கும் மேற்பட்ட சிறுகோள்கள் பூமியை கடந்ததாக அறியப்படுகின்றன, அவற்றில் 1,400 க்கும் மேற்பட்டவை அபாயகரமான சிறுகோள்கள் (PHA) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் அப்போபிஸ் சிறுகோளும் PHA என வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: