ஹோம் /நியூஸ் /Explainers /

Explainer: 'மும்பை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்' சச்சின் வாஸ் யார்?

Explainer: 'மும்பை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்' சச்சின் வாஸ் யார்?

சச்சின் வாஸ்

சச்சின் வாஸ்

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  • News18
  • 3 minute read
  • Last Updated :

மும்பையில் அன்டிலியா பகுதியில் வசித்து வரும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை, திடீரென மார்ச் 13ம் தேதி மும்பை காவல்துறையின் உளவுப்பிரிவில் பணியாற்றும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் சச்சின் வாஸ் - ஐ கைது செய்தது. மார்ச் 25ம் தேதி வரை விசாரணைக்காக என்.ஐ.ஏ காவல் எடுத்துள்ளது.

சச்சின் வாஸ் யார்?

மும்பை காவல்துறையின் உதவி இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சச்சின் வாஸ், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டு என அழைக்கப்படும் பிரதீப் சர்மா மற்றும் தயா நாயக் ஆகியோரில் இவரும் ஒருவர். காவல்துறை விசாரணையின்போது கைதி ஒருவர் இறந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், பணியில் இருந்து விலகிய அவர், சுமார் 16 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2020ம் ஆண்டு மீண்டும் காவல்துறை பணிக்கு திரும்பினார்

என்.ஐ.ஏ சச்சின் வாஸ்-ஐ கைது செய்தது ஏன்?

என்.ஐ.ஏ சச்சின் வாஸ்-ஐ கைது செய்ததற்கான காரணம் வெளியிடப்படவில்லை. ஆனால் சதி, மிரட்டல், வெடிபொருட்களைக் கையாள்வதில் கவனக்குறைவான நடத்தை, மோசடி செய்தல் மற்றும் கள்ள முத்திரையை வைத்திருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சச்சின் வாஸ் மீது சந்தேகம் திரும்பியது எப்படி?

மும்பை குற்றப்பிரிவில் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றும் சச்சின், அன்டிலியா பகுதியில் வெடிபொருளுடன் நிறுத்தப்பட்டிருந்த கார் குறித்து விசாரணை நடத்தினார். ஆனால், அந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அம்மாநில முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், அம்மாநில சட்டமன்றத்தில் தெரிவித்த கருத்து வழக்கின் கோணத்தை முற்றிலுமாக மாற்றியது. அதாவது, அன்டிலியா பகுதியில் இருந்த காரின் உரிமையாளர் மனுசுக் ஹிரனுடன், சச்சின் வாஸ் அடிக்கடி தொலைப்பேசியில் உரையாடிய விவரத்தை வெளியிட்டார்.

மேலும், அம்பானி வீட்டின் அருகே வெடிபொருளுடன் கார் இருந்த இடத்துக்கு சச்சின் வாஸ் முதலில் சென்றதை சுட்டிக்காட்டிய பட்நாவிஸ், பிறகு செய்தியாளர் சந்திப்பில் சச்சின் வாஸ் அதனை மறுத்ததையும் குறிப்பிட்டார்.

பட்நாவிஸ் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய அதேநாளில் நீரோடை ஒன்றில் மனுசுக் ஹிரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மனுசுக்கின் மனைவியும், தனது கணவர் இறப்புக்கு சச்சின் வாஸ் காரணம் என குற்றம்சாட்டினார்.

மேலும், மனுசுக் ஹிரனின் காரை பல நாட்கள் சச்சின் பயன்படுத்தியதையும், பிப்ரவரி 5ம் தேதி அதனை கொண்டு வந்தது கொடுத்ததையும் மனுசுக்கின் மனைவி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து சச்சின் வாஸை நீக்கிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அதன்பிறகு மும்பை குற்றப்பிரிவு உளவுத்துறை பணியில் இருந்தும் சச்சின் வாஸை மாற்றியது. பின்னர், வழக்கை என்.ஐ.ஏ கையில் ஏடுத்தது.

சிவசேனாவுக்கும் - சச்சின் வாஸூக்கும் என்ன தொடர்பு?

கைதியின் மர்ம மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சச்சின் வாஸ், காவல்துறை பணியில் இருந்து விலகினார். பின்னர், சிவசேனாவின் சிவ் சாய்னிக்குடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அவருடன் எப்போதும் இருந்தார். 2020ம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் மும்பை காவல்துறை பணியில் சச்சின் வாஸ் சேர்த்துக்கொள்ளப்பட்டார். கொரோனாவைக் கட்டுப்படுத்த காவல்துறையில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், அதற்காக சச்சின் வாஸ் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டது.

முதலில் மும்பை குற்றப்பிரிவில் பணியாற்றிய சச்சின், அடுத்த சில நாட்களில் மும்பை குற்றப்பிரிவு உளவுத்துறை பொறுப்புக்கு மாற்றப்பட்டார். உடனடியாக போலி சமூகவலைதள செயல்பாடு குறித்து விசாரிக்கத் தொடங்கினார். பதவியின் அடிப்படையில் ஜூனியர் நிலையில் இருந்தாலும் தொலைக்காட்சி ரேட்டிங் ஊழல் தொடர்பான வழக்கின் குழுவுக்கு தலைமையேற்று நடத்தினார். அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அர்னாப் கோஸ்வாமியை, அன்வி நாயக் தற்கொலை வழக்கில் கைது செய்தார். ஹிர்திக் ரோஷன் போலி இமெயில் வழக்கில் திலீப் சப்ரியாவையும் சச்சின் வாஸ் கைது செய்தார்.

சச்சின் வாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது ஏன்?

துபாயில் இன்ஜினியராக பணியாற்றிய கவாஜா யூனஸ் என்ற 27 வயது இளைஞரை பொடா சட்டத்தின் கீழ் 2002 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். டிசம்பர் 2, 2002 ஆம் ஆண்டு காட்கோபார் பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் யூனஸூக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. பின்னர், காவல்துறை விசாரணைக்கு கவாஜா யூனஸ் அழைத்துச் செல்லப்பட்டப்போது சச்சின் வாஸ், உள்ளிட்ட 4 பேர் அவரை விசாரித்துள்ளனர். ஜனவரி 6, 2003 க்குப் பிறகு கவாஜா யூனஸ் குறித்து தகவல் இல்லை. அவுரங்காபாத்துக்கு அழைத்துச் செல்லும்போது கவாஜா யூனஸ் தப்பித்துவிட்டதாக காவல்துறை தெரிவித்தது.

மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் இந்த வழக்கை சிஐடி விசாரித்தது. இதில் கவாஜா யூனஸ், காவல்துறை விசாரணையில் இறந்ததை உறுதி செய்தது. இது தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சச்சின் வாஸ் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இது அவருடன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மற்ற 3 பேருக்கும், கவாஜா யூனஸ் குடும்பத்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக கவாஜா யூனஸ் குடும்பத்தினர் மும்பை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

Also read... சூரியகுமார் யாதவ் ஆடி என்ன பார்த்திருக்கிறார் இவர், ஏன் டீமை விட்டு தூக்க வேண்டும்?- கோலியை விளாசிய கவுதம் கம்பீர்

சச்சின் வாஸ் காவல்துறை பணியில் விலகல்

1990ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த சச்சின் வாஸ், படிப்படியாக மும்பை குற்றப்பிரிவு காவல்துறை பணிக்கு மாற்றம் பெறுகிறார். அங்கு ’என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்ற பட்டப்பெயர் அவருக்கு கிடைக்கிறது. காவல்துறை வட்டாரத்தில் நல்ல பெயர் மற்றும் மதிப்புடன் வலம்வந்த சச்சின் வாஸ், கவாஜா யூனஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிறகு இறங்கு முகத்தை சந்திக்கிறார். அந்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் 2007 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் இருந்து விலகினார். பின்னர், புலனாய்வு அமைப்பு ஒன்றை நடத்தி, காவல்துறையினரின் வழக்குகளுக்கு உதவி செய்து வந்துள்ளார். ஷீனா போரா மரணம் மற்றும் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட டேவிட் ஹெட்லியின் வாக்குமூலம் தொடர்பாக 2 புத்தகங்களை எழுதியுள்ளார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: NIA