Explainer: 'வேக்சின் பாஸ்போர்ட்' என்றால் என்ன? தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்!

மாதிரி படம்

கொரோனா வைரஸ் குறித்த சான்றுகளை விமான நிலையங்களில் சமர்பிக்க வேண்டியுள்ளதால், அந்த நடைமுறையை எளிதாக்கும் வகையில் வேக்சின் பாஸ்போர்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு முகக் கவசம், தெர்மல் டெஸ்ட், நெகட்டிவ் சான்று போன்றவை அவசியம் என்பது போல், வெளிநாடு செல்ல ‘வேக்சின் பாஸ்போர்ட்’ கட்டாயம் என்ற நிலை உருவாகி உள்ளது.

    வெளிநாடு பயணம் செல்பவர்கள் கொரோனா வைரஸ் குறித்த சான்றுகளை விமான நிலையங்களில் சமர்பிக்க வேண்டியுள்ளதால், அந்த நடைமுறையை எளிதாக்கும் வகையில் வேக்சின் பாஸ்போர்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேல் முதன்முறையாக வேக்சின் பாஸ்போர்டை அந்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாஸ்போர்ட் பெற்றவர்கள் ரெஸ்டாரண்ட், ஜிம்,ஹோட்டல் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இயல்பாக சென்றுவர முடியும். அந்த முறை தற்போது பன்னாட்டு பயணங்களுக்கும் நடைமுறைப்படுத்த உலக நாடுகள் யோசித்து வருகின்றன

    வேக்சின் பாஸ்போர்ட் நடைமுறையில் உள்ளதா?

    வேக்சின் பாஸ்போர்ட் என்பது கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பிருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்க மற்றும் இந்தியா வரும் பயணிகள் கட்டாயம் மஞ்சள் காய்சலுக்கு தடுப்பூசி எடுத்து கொண்டதற்கான சான்றுகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மஞ்சள் காய்சலும், மஞ்சள் காமாலை இரண்டும் ஒன்றல்ல. மஞ்சள் காய்ச்சல் என்பது பெண் கொசு கடிப்பதால், மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை நோய். இந்த நோய் ஆப்பிரிக்க நாடுகளில் பரவலாக உள்ளது. வேக்சின் பாஸ்போர்ட் என்பது பொதுவாக டிஜிட்டல் முறையில் கொடுக்கப்படுகின்றன. அதில், ஒருவர் எடுத்துக்கொண்ட தடுப்பூசி தொடர்பான தகவல்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது கொரோனா வைரஸ் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகளில் இருந்து விலக்கு பெற முடியும். பரவலாக இந்த முறை நடைமுறைக்கு வரவில்லை என்றாலும், பல்வேறு நாடுகளும் இந்த ஆப்சனை பயன்படுத்த ஆலோசனை செய்து வருகின்றனர்.

    பயன்பாட்டில் உள்ள வேக்சின் பாஸ்போர்ட்

    இஸ்ரேல் அரசு அறிமுகப்படுத்தியுள்ள வேக்சின் பாஸ்போர்டைப்போல் இன்னும் சில பாஸ்போர்டுகள் நடைமுறையில் உள்ளன. சில கூட்டமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பன்னாட்டு பயணங்களுகாக சில பாஸ்போர்ட்களை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தி வருகின்றனர். சர்வதேச டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் ஐ.ஏ.டி.ஏ என்ற டிராவல் பாஸ் செயலியை உருவாக்கி வருகிறது. இதன்மூலம் அனைத்து ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் பயணிகளின் தடுப்பூசி தொடர்பான தகவல்களை ஆராய்ந்து கொள்ளலாம்.

    காமன் திட்ட அறக்கட்டளையின் சார்பில் காமன்பாஸ் (common Pass), ஐபிஎம் நிறுவனத்தின் டிஜிட்டல் ஹெல்த் பாஸ் மற்றும் சர்வதேச வர்த்தக சபையின் (ஐசிசி) ஏ.ஓ.கே.பாஸ் போன்றவை தற்போது நடைமுறையில் உள்ளன. உலக சுகாதார அமைப்பு, மின்னணு தடுப்பூசி சான்றிதழ் என்ற திட்டத்தை உருவாக்கி வருகிறது. நியூயார்க், போஸ்டன், லண்டன் மற்றும் ஹாங்காங் பகுதிகளுக்கு செல்லும் விமான பயணிகள் காமன் பாஸ் செயலியை பயன்படுத்துவதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

    இந்த பாஸ்போர்ட் சேவை மூலம், கொரோனா காலத்தில் முற்றிலும் முடங்கிய டூரிசம் மற்றும் ஹோட்டல் துறைகள் மீண்டும் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த முறையை நடைமுறைப்படுத்த சர்வதேச அளவில் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

    Also read... கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அறுவை சிகிச்சை எப்போது செய்து கொள்ளலாம்?

    உலக சுகாதார நிறுவனம் கூறுவது என்ன?

    உலகளவில் கொரோனா தடுப்பூசி சான்றுகளை பயணத்துக்கான நிபந்தையாக வைப்பதை உலக சுகாதார மையம் கடுமையாக எதிர்த்துள்ளது. இதுகுறித்து விளக்கியுள்ள உலக சுகாதார மையம், போதிய தடுப்பூசிகள் இன்னும் பல நாடுகளுக்கு சென்றடையாத நிலையில், கொரோனா தடுப்பூசி பாஸ்போர்டை உடனடியாக நடைமுறைப்படுத்தினால் அது கொரோனா ஆபத்துகளை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்கும் நிலையை உறுதி செய்த பின்னர், வேக்சின் பாஸ்போர்ட் நடைமுறைப்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: