முத்தூட் பைனான்ஸ் குழுமத்தின் தலைவரான எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் கடந்த வார இறுதியில் டெல்லியில் காலமானார். வங்கி சாராமல் தங்கத்திற்கு கடன் வழங்கும் நிதி நிறுவனங்களில் இந்தியாவின் மிகப்பெரிய தங்க நிதி நிறுவனங்களில் ஒன்று தான் முத்தூட் பைனான்ஸ்.
கடந்த வாரம் டெல்லியில் இருந்த எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் தனது வீட்டின் 4-வது மடியில் இருந்து தவறி விழுந்ததால் படுகாயமடைந்ததாகவும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அவரது மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவு காரணமாக சிகிச்சையின் போது இறந்துவிட்டார். பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அவரது மரணத்தில் குற்றப்பின்னணி ஏதும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மறைந்த எம்.ஜி.ஜார்ஜ் யார் என்பது பற்றியும், கேரளாவின் மிகப்பெரிய பணக்காரராக எப்படி ஆனார் என்பது பற்றியும் பார்க்கலாம்.
ஜார்ஜ் முத்தூட் யார்?
கடந்த 1949 நவம்பர் 2ல் இன்றைய கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கோசஞ்சேரியில் ஜார்ஜ் முத்தூட் பிறந்தார். இவர் முத்தூட் குழும நிறுவனர் முத்தூட் நினன் மத்தாயின் பேரனும், நிதி வணிகத்தைத் தொடங்கிய எம்.ஜார்ஜ் முத்தூட்டின் மகனும் ஆவார். மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படித்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். பின் அலுவலக உதவியாளராக தனது குடும்ப வணிகத்தில் சேர்ந்த இவர் படிப்படியாக ஏறி கடந்த 1979-ல் நிர்வாக இயக்குநரானார். கடந்த 1993- ம் ஆண்டில் அவர் முத்தூட் பைனான்ஸ் குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.
இதனை அடுத்து ஜார்ஜ் முத்தூட் தனது குடும்பத்திலிருந்து முத்தூட் குழுமத்தின் தலைவராக ஆனால் மூன்றாவது தலைமுறை நபரானார். முன்னதாக 1980-களின் முற்பகுதியில் முத்தூட் குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த வணிக சாம்ராஜ்யம் பிளவுபட்டது, இதன் விளைவாக முத்தூட் பப்பச்சன் குழுமம் உருவாவானது.இது இன்று கேரளாவில் முத்தூட்நிறுவனத்திற்கு போட்டியாக இருந்து வருகிறது.
தலைமையில் சிறந்தவர்..
எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் தலைமை ஏற்ற பின் தான் முத்தூட் பைனான்ஸ் பெரும் ஏற்றம் கண்டது. கொச்சியில் உள்ள அதன் தலைமையகத்திலிருந்து பல கிளைகள் ஏற்படுத்தப்பட்டு விரிவடைந்து நாட்டின் மிகப்பெரிய தங்கக் கடன் நிறுவனமாக உயர்ந்தது. ஆண்டுக்கு 1.3 பில்லியன் டாலர் (2020-ல்) வருவாயும் கிடைத்தது. டிசம்பர் 2020 காலாண்டில் இந்நிறுவனத்தின் லோன் புக் 56,000 கோடி ரூபாயாக இருந்தது.
Also read... விமான அதிகாரிகளை தாக்கியதற்காக பிரெஞ்சு விமானத்தில் இருந்து பாதியிலேயே இறக்கிவிடப்பட்ட இந்தியப்பயணி!
உலகம் முழுவதும் விரிந்த கிளை
ஜார்ஜ் முத்தூட் நிர்வாக இயக்குனராக பதவி ஏற்ற போது சொற்ப கிளைகளே இருந்தது. ஆனால் அவரது அசாத்திய திறமை மற்றும் கடின உழைப்பால் முத்தூட் நிதி நிறுவனம் இன்று இந்தியாவில் 5,550-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலும் முத்தூட் பைனான்ஸ் கிளைகளை பரப்பியுள்ளது.
51,000 கோடி ரூபாய் சந்தை மூலதனம் மற்றும் மொத்த வருமானம் ரூ .8,722 கோடியுடன், குழுவின் தலைசிறந்த முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட், இன்று இருக்கும் பான்-இந்தியா நிதி அதிகார மையமாக மாற்றிய பெருமைக்குரியவர்.
தலைசிறந்த மனிதர்கள் பட்டியலில்..
எம்.ஜி.ஜார்ஜ் ஃபோர்ப்ஸ் ஆசியா பத்திரிகை வெளியிட்ட இந்தியாவில் தலைசிறந்த 50 மனிதர்கள் என்ற பட்டியலில் இடம் பிடித்தார். மேலும் 2020-ஆம் ஆண்டில், ஜார்ஜ் முத்தூட் 26-வது பணக்கார இந்தியராகவும், இந்தியாவின் பணக்கார மலையாளியாகவும் ஃபோர்ப்ஸ் ஆசியா பத்திரிகை அறிவித்தது. இந்திய ஆர்த்தோடக்ஸ் சர்ச்சின் டிரஸ்டியாகவும் செயல்பட்ட இவர், இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலைகளுக்கான கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.